வெளியிடப்பட்ட நேரம்: 08:00 (18/07/2018)

கடைசி தொடர்பு:08:01 (18/07/2018)

மணல் கொள்ளையர்களுக்கு அதிகாரிகள் உடந்தையா? - கோபத்தில் கலெக்டர்!

மணல் கொள்ளையைத் தடுக்கும்  மாவட்ட ஆட்சியரின் முயற்சிக்கு அதிகாரிகள் சிலர் முட்டுக்கட்டை போடுவதாக வெளியான தகவலையடுத்து, அதிகாரிகள்மீது ஆட்சியர் அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

தேனி மாவட்டத்தில் சில நாள்கள் ஓய்ந்திருந்த மணல் கொள்ளை தற்போது வேகமெடுக்க ஆரம்பித்துவிட்டது. புதிதாக வந்த மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், மணல் கொள்ளையை வேறோடு அழிப்பதாக சபதம் ஏற்றார். ஆனால், அச்சபதம் முழுமைபெறுவதற்குள் மாவட்டத்தில் பல இடங்களில் மீண்டும் மணல் கொள்ளை ஆரம்பித்துள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் மூன்று இடங்களில் அனுமதி இன்றி மணல் ஏற்றிவந்த வாகனங்கள் பறிமுதல்செய்யப்பட்டன. ஆண்டிபட்டி வட்டாட்சியர் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக வந்த டிப்பர் லாரியைச் சோதனைசெய்தார். அதில், அனுமதியின்றி மணல் ஏற்றிவந்தது தெரியவந்தது. வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. அடுத்ததாக கணேசபுரம் பகுதியில் அனுமதி இன்றி டிராக்டரில் மணல் ஏற்றிவந்தபோது, அதிகாரிகள் டிராக்டரை மறித்துள்ளனர். அதிகாரிகளைக் கண்டதும் டிரைவர் தப்பி ஓடியுள்ளார். மணலுடன் டிராக்டர் பறிமுதல்செய்யப்பட்டது. அடுத்ததாக, ஆண்டிபட்டியில் தேனி-மதுரை சாலையில், மாவட்ட கனிமவள புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர் சசிகுமாரால், அனுமதி இன்றி செம்மண் ஏற்றிவந்த லாரியைப் பறிமுதல்செய்தனர்.

அதிகாரிகளின் இந்தத் திடீர் ஆய்வின் பின்னணிகுறித்து மாவட்ட கலெக்டர் அலுவலக வட்டாரத்தில் விசாரித்தபோது, ’’மாவட்டத்திற்குப் புதிதாக கலெக்டர் வந்தது முதல் மணல் கொள்ளையைத் தடுக்க பெருமுயற்சி எடுத்தார். அனுமதியின்றி யார் மணல் அள்ளினாலும் எனக்குத் தகவல் கொடுங்கள் என பொதுமக்களிடம் தெரிவித்தார். அதன்படி, மணல் கொள்ளை தொடர்பாக பொதுமக்களிடமிருந்து வரும் தகவல்களை, உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரிவித்து, மணல் கொள்ளையைத் தடுத்துவந்தார் கலெக்டர். இதனால் சில அதிகாரிகளுக்கும், மணல் கொள்ளையர்களுக்கும் இருந்த உறவு பாதிக்கப்பட்டது. நாள்கள் செல்லச்செல்ல பொதுமக்களிடமிருந்து வரும் மணல் கொள்ளை புகார்களை அதிகாரிகள் சிலர், கலெக்டரின் கவனத்துக்குக் கொண்டுசெல்லாமல் தடுத்தனர். அதன் விளைவாக தாராளமாக மணல் கொள்ளை நடந்துவந்தது. இன்று, ஆண்டிபட்டி வட்டார மணல் கொள்ளைத் தகவல் கலெக்டர் காதுக்குச் சென்றது. உடனே, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை முடுக்கிவிட்டார். அவர்களும் வேண்டா வெறுப்பாக மணல் ஏற்றிவந்த வாகனங்களைப் பறிமுதல் செய்தனர். அதிகாரிகளின் இந்தப் போக்கு கலெக்டர் கவனத்துக்குச் சென்றதால் அவர்  மிகுந்த கோபத்தில் உள்ளார்’’ என்றனர்.