வெளியிடப்பட்ட நேரம்: 09:40 (18/07/2018)

கடைசி தொடர்பு:09:40 (18/07/2018)

பசுமைவழிச் சாலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பசுமை வீடு - ஆணையை வழங்கினார் கலெக்டர்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 8 வழிச் சாலைக்காக நிலம் கொடுத்தவர்களுக்கு வீட்டுமனைப் பட்டா மற்றும் பசுமை வீடுகள் கட்டித்தருவதற்கான ஆணையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

பசுமை வழிச்சாலை

காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பொறுத்தவரை ஸ்ரீபெரும்புதூர், செங்கல்பட்டு, உத்திரமேரூர் ஆகிய மூன்று தாலுகாக்களில் உள்ள 42 கிராமங்கள் வழியாக 59.1 கி.மீ தொலைவுக்கு 8 வழி பசுமைச்சாலை அமைக்கப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கரசங்கால், படப்பை, பாலூர், குருவன்மேடு, அரும்புலியூர், ஆனம்பாக்கம், மணல்மேடு, ஒழுகரை, இளநகர், பெருநகர் போன்ற கிராமங்கள் வழியாகத் திருவண்ணாமலை மாவட்டத்தை அடைகிறது. இதற்காக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுமார் 1,300 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்களை வருவாய்த்துறையினர் கையகப்படுத்தத் திட்டமிட்டு, அதற்கான பணியை வருவாய்த் துறையினர் சில தினங்களுக்கு முன் முடித்துவிட்டனர். ஸ்ரீபெரும்புதூர் மற்றும் செங்கல்பட்டு பகுதியில் பெரிய அளவில் எதிர்ப்புக் கிளம்பவில்லை. ஆனால், உத்திரமேரூர் பகுதிகளில் உள்ள விவசாயிகள், நில அளவீடு செய்யும் பணியின்போது தங்கள் எதிர்ப்பைக் காட்டினர். காவல்துறையினர் குவிக்கப்பட்டதால், பெரிய அளவில் அசம்பாவிதம் ஏதும் நிகழவில்லை. இந்த நிலையில், இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, நில எடுப்பால் பாதிக்கப்பட்டவர்கள் 16 பேருக்கு வீட்டு மனைகள் மற்றும் பசுமைவீடுகள் கட்டுவதற்கான ஆணையை வழங்கினார். 

பசுமைச் சாலை, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்

வருவாய்த்துறையின் நில அளவீட்டின்படி 26 வீடுகள் கையகப்படுத்தப்பட உள்ளன. இவற்றில், வளையக்கரணை கிராமத்தில் கையகப்படுத்த உள்ள 7 வீடுகளில் 6 வீடுகளுக்கு ஏற்கெனவே வீட்டுமனைப் பட்டா மற்றும் பசுமை வீடுகள் கட்டித்தருவதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது. இன்று உத்திரமேரூர் வட்டம், வெங்காரம் கிராமத்தைச் சேர்ந்த 9 பேருக்கும், மானாம்பதி கிராமத்தைச் சேர்ந்த 7 பேருக்கும் ஆகமொத்தம் 16 பேருக்கு வீட்டுமனைப்பட்டா மற்றும் பசுமைவீடுகள் கட்;டுவதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா.பொன்னையா வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 4 பேருக்கு அருகில் நிலம் இல்லாததால் நிலஎடுப்பு பிரிவின் மூலம் வேறு இடத்தில் நிலம் கையப்படுத்தப்பட்டு வழங்கப் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த 22 பேருக்கும் 3 மாத காலத்திற்குள் வீடு கட்டி முடிக்கப்பட்டு, புதிய வீட்டில் குடியேறியபின் அவர்கள் வீடு கையகப்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க