வெளியிடப்பட்ட நேரம்: 07:40 (18/07/2018)

கடைசி தொடர்பு:08:39 (18/07/2018)

ஒப்பந்ததாரர் செய்யாத்துரை வீட்டில் நடந்த சோதனை நிறைவு - கோடிக்கணக்கில் பணம் சிக்கியது!

தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தப் பணிகளின் ஒட்டுமொத்த குத்தகைதாரரான செய்யாத்துரைக்குச் சொந்தமான சென்னையில் உள்ள இடங்களில் நடைபெற்ற வருமான வரித் துறை சோதனை நிறைவடைந்தது. இதில் கோடிக்கணக்கில் பணம் சிக்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

செய்யாத்துரை

கமுதியை அடுத்த கீழமுடி மன்னார் கோட்டையைச் சேர்ந்தவர் செய்யாத்துரை. இவர், தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் எஸ்.பி.கே & கோ என்ற பெயரில் நெடுஞ்சாலைத்துறையில் அரசு ஒப்பந்ததாரராகச் செயல்பட்டுவருகிறார். செய்யாத்துரை வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரில், அவருக்குச் சொந்தமான வீடு உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். இந்தச் சோதனைக்கு ஆபரேஷன் பார்க்கிங் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த திங்கள்கிழமை இந்தச் சோதனை தொடங்கியது. அப்போது, செய்யாத்துரையின் பூர்விக வீட்டின் அறை ஒன்றில் இருந்த சுவரை இடித்து, அதிலிருந்து 3 ஹார்டு டிஸ்க்குகள், சில ஆவணங்கள் ஆகியவற்றை  வருமான வரித் துறையினர் எடுத்துச்சென்றுள்ளனர். தொடர்ந்து 36 மணி நேரமாக நடைபெற்ற சோதனையில், 170 கோடி ரூபாய் பணம் சிக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 105 கிலோ தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதேபோல, ஏராளமான ஆவணங்களை வருமான வரித் துறையினர் எடுத்துச்சென்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், 36 மணிநேரமாக சென்னையில் நடைபெற்ற சோதனை முடிவுக்குவந்தது. எனினும் அருப்புக்கோட்டையில் இன்னும் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.