வெளியிடப்பட்ட நேரம்: 11:12 (18/07/2018)

கடைசி தொடர்பு:18:37 (18/07/2018)

குழந்தையில்லா சோகம்... - பிரபல சீரியல் நடிகை எடுத்த விபரீத முடிவு!

ப்ரியங்கா

சென்னையில், பிரபல  டி.வி சீரியல் நடிகை பிரியங்கா, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 சென்னை வளசரவாக்கம், காமகோடி நகர், சிவன் கோயில் தெருவில் குடியிருந்தவர் பிரியங்கா. இவர், கூடைப்பந்து வீரர் அருண்பாலாவை கடந்த சில ஆண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார். பிரியங்கா, 'வம்சம்' சீரியலில் நடித்தவர். தற்போது, கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக, வளசரவாக்கத்தில் தனியாகக் குடியிருந்தார். 

 இந்த நிலையில், இன்று காலை பிரியங்காவின் வீடு திறக்கப்படவில்லை. இதனால், அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் கதவைத் தட்டினர். ஆனால் அவர் திறக்கவில்லை. இதனால், ஜன்னல் வழியாக உள்ளே எட்டிப்பார்த்தனர். அப்போது, படுக்கையறையில் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து வளசரவாக்கம் போலீஸ் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் முத்துராஜா மற்றும் போலீஸார் அங்கு வந்து, பிரியங்காவின் சடலத்தைக் கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். 

 பிரியங்கா எதற்காகத் தற்கொலை செய்துகொண்டார் என்று போலீஸார் விசாரித்துவருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், பிரியங்காவுக்கு குடும்பத்தில் சில பிரச்னைகள் இருந்தது தெரியவந்துள்ளது. கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக, அவர் மன வேதனையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், திருமணம் முடிந்து இதுநாள் வரை பிரியங்காவுக்கு குழந்தை இல்லை. இதுவும் அவரின் தற்கொலைக்குக் காரணமாக இருக்கலாம் என்று போலீஸார் கருதுகின்றனர். இருப்பினும், அவரது தற்கொலைக்கான உண்மைக் காரணம் இதுவரை தெரியவில்லை. இதனால், பிரியங்காவின் குடும்பத்தினரிடமும், அவரின் வீட்டின் அருகில் வசிப்பவர்களிடமும் விசாரணை நடந்துவருகிறது. 

 டி.வி சீரியல் நடிகை பிரியங்கா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.