வெளியிடப்பட்ட நேரம்: 12:15 (18/07/2018)

கடைசி தொடர்பு:12:15 (18/07/2018)

சைலன்சர் சூட்டில் வெடித்துச் சிதறிய நாட்டுவெடி... கோயில் விழாவுக்குச் சென்றபோது நடந்த துயரம்!

இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்ற நாட்டுவெடிகள் வெடித்துச் சிதறியதில், ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடன் வந்தவர் படுகாயத்துடன் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகிறார்.

 

நாட்டுவெடி வெடித்து ஒருவர் பலி

 

நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள தில்லையாடியில், நாட்டுவெடிகள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது.  இங்கிருந்து தொடுவாய் மீனவ கிராமத்தில் இன்று நடைபெற இருந்த கோயில் திருவிழாவுக்காக, சதீஷ் மற்றும் ராஜமாணிக்கம் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் நாட்டுவெடிகளை எடுத்துச்சென்றுள்ளனர்.  சதீஷ் வாகனத்தை ஓட்ட, ராஜமாணிக்கம் பின்புறம் அமர்ந்து சென்றிருக்கிறார்.

வெடிகளைப் பைகளில் போட்டு, சைலன்சர் பக்கம் தொங்கவிட்டபடி எடுத்துச்சென்றுள்ளனர்.  பைகளில் அதிக சக்திவாய்ந்த வெடிகள் இருந்திருக்கின்றன. வண்டியின் சைலன்சர் சூட்டில் வெடிகள் வெடித்ததில், ராஜமாணிக்கம் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த சதீஷை, அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.  அங்கு, தீவிர சிகிச்சையில் சதீஷ் உள்ளார்.  செம்பனார்கோயில் காவல் நிலைய போலீஸார், வழக்குப்பதிவு செய்து விபத்துகுறித்து விசாரணைசெய்துவருகின்றனர்.