டார்கெட் செக்ரடரியேட்! ரெய்டு பின்னணியில் 3 ஆயிரம் கோடி ஒப்பந்தம் | Truth behind 3000 Crore contract - IT raid details

வெளியிடப்பட்ட நேரம்: 12:03 (18/07/2018)

கடைசி தொடர்பு:12:03 (18/07/2018)

டார்கெட் செக்ரடரியேட்! ரெய்டு பின்னணியில் 3 ஆயிரம் கோடி ஒப்பந்தம்

ஆட்சி அதிகாரத்தின் பிரதான தூண்கள் இருவரையும், அசைத்துப் பார்க்கும் ரெய்டுகள் ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

 ரெய்டு காட்சி

ண்மையில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை ரெய்டுகளில் அதிகபட்ச மீட்பு, எஸ்.பி.கே., கட்டுமான நிறுவனத்தில் சிக்கிய 163 கோடி ரூபாயும், 100 கிலோ தங்கமும்தான் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். அருப்புக்கோட்டையைத் தலைமையிடமாகக் கொண்ட எஸ்.பி.கே. கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் தமிழக அரசின் முக்கிய ஒப்பந்ததாரர் செய்யாத்துரை. இவர், விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர். இவரின் எஸ்.பி.கே. நிறுவனம், நெடுஞ்சாலைப் பணிகள், மேம்பாலங்கள், உள்கட்டுமானப் பணிகளை மேற்கொள்கிற பிரதான ஒப்பந்த நிறுவனமாகச் செயல்பட்டு வந்துள்ளது. `வரி ஏய்ப்பு'-தான் ரெய்டுக்குக் காரணம் என்று வருமான வரித்துறையினர் தரப்பில் சொல்லப்படுகிறது. `அரசியல் பின்னணி, ஆட்சியாளர்களை மிரட்டிப் பணிய வைக்கும் நடவடிக்கையே இது' என்று அரசியல் வட்டாரத்தில் சொல்கிறார்கள். முதற்கட்டமாகப் பத்து இடங்கள், ஒவ்வோர் இடத்திலும் பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள், அதிகாலை ஐந்தரை மணிக்கு ரெய்டு என்று திட்டமிட்டே சோதனையில் இறங்கியுள்ளனர். அடுத்தகட்டத் தகவல்கள் இன்னும் வலுவாக, 30 இடங்களில் ரெய்டு என்று சூழ்நிலை மாறியிருக்கிறது. தமிழக அரசின் `ஏ' கேட்டகரி (முதல்நிலைத் தகுதி) ஒப்பந்ததாரராக அறியப்படும் செய்யாத்துரைக்கு 60 வயது ஆகிறது. கருப்பசாமி, ஈஸ்வரன், நாகராஜ், பாலசுப்பிரமணியன் ஆகிய 4 மகன்கள் உள்ளனர். 

இரண்டாவது நாள் ரெய்டில், செய்யாத்துரையின் மூன்றாவது மகன் ஈஸ்வரனின் வங்கிக் கணக்குகளை வருமான வரித்துறையினர் முடக்கினர். சென்னை நொளம்பூர், பன்னீர் நகரில் வசிக்கும் செய்யாத்துரையின் சப்-கான்ட்ராக்டரான தியாகராஜன் வீட்டிலும், ரெய்டு நடத்தப்பட்டுள்ளது. இதே ரீதியில் ஏராளமான சப்-கான்ட்ராக்டர்கள் வீடுகளிலும் ரெய்டு போய்க் கொண்டிருக்கிறது. எஸ்.பி.கே. நிறுவன அதிபர் செய்யாத்துரை, மெயின் கான்ட்ராக்டராக மட்டுமல்லாமல், சப்- கான்ட்ராக்டராகவும் பல இடங்களில் இருந்திருக்கிறார். பெயரளவில் சப்-கான்ட்ராக்ட் போல் தெரிந்தாலும், அதன் வருமான கணக்கோ, மெயின் கான்ட்ராக்டை விஞ்சுகிறது. மதுரை மாட்டுத்தாவணி டூ கப்பலூர் வரையிலான சாலை, நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி தற்போது நடந்து வருகிறது. இதற்கான ஒப்பந்தம் சேகர் ரெட்டி பெயரில் எடுக்கப்பட்டிருந்தாலும், அந்த வேலையைச் செய்யாத்துரையின் நிறுவனம்தான் செய்து வருகிறது. விருதுநகர் மாவட்ட நெடுஞ்சாலைப் பராமரிப்புக்கான ஐந்தாண்டு (ரூ.600 கோடி மதிப்பீடு) ஒப்பந்தமும், நேரடியாக செய்யாத்துரை பெயரில் எடுக்கப்படவில்லை. ஆனால், செய்யாத்துரைதான் அதற்கும் சப்-கான்ட்ராக்டர் என்கிறார்கள். 

Raid

அருப்புக்கோட்டை, மதுரை என்று ஆரம்பித்து சென்னை வரையிலும் முக்கியச் சாலைகள் அமைக்கும் பணி, கட்டுமானப் பணி எனச் செய்யாத்துரையின் வர்த்தக ஒப்பந்தங்கள் நீள்கின்றன. கல்குறிச்சியில் ஒரு நூற்பாலை, கல்லூரணியில் ஒரு கல்குவாரி, மதுரை மாட்டுத்தாவணியில் எஸ்.பி.கே. என்ற பெயரிலேயே நட்சத்திர ஹோட்டல் என்று வர்த்தகம் இருக்கிறது. `முக்கிய ஆவணங்கள் அடங்கிய ஹார்டு டிஸ்குகள், பென் டிரைவ்கள் இந்த ரெய்டில் கைப்பற்றப்பட்டுள்ளன' என்று வருமான வரிப் புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் அண்ணா நகர், போயஸ்கார்டன் உள்ளிட்ட எஸ்.பி.கே நிறுவனத்தின் ஐந்து இடங்களில் இந்த ரெய்டுகள் இரண்டாவது நாளாகத் தொடர்ந்தபடி இருக்கிறது. தமிழ்நாட்டில் சாலைப் பணிக்காக மூன்றாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டிலான ஒப்பந்தமும் எஸ்.பி.கே. நிறுவனத்துக்கே கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மதுரை வட்டச்சாலை அமைத்து 18 ஆண்டுகளுக்கு சுங்கவரி வசூலிக்கவும், எஸ்.பி.கே. நிறுவனத்திடம் ரூ. 200 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. வண்டலூர் - வாலாஜாபாத் ஆறு வழிச்சாலை பணிக்கும் ரூ.200 கோடிக்கான பணி ஒப்பந்தத்தை எஸ்.பி.கே பெற்றுள்ளது. அதேபோல் நெல்லை - செங்கோட்டை சாலை அகலப்படுத்தும் பணிக்காக ரூ. 407 கோடி ஒப்பந்தமும் எஸ்.பி.கே. நிறுவனமே பெற்றுள்ளது. ஆக, அரசின் மிக முக்கியமான அத்தனை ஒப்பந்தப் பணிகளையும், 100 கோடியில் ஆரம்பித்து, மூன்றாயிரம் கோடி ரூபாயைத் தாண்டும் அளவுக்கு எஸ்.பி.கே. நிறுவனமே பெற்றுள்ள நிலையில், இந்த ரெய்டு மிக முக்கிய ரெய்டாகவே கருதப்படுகிறது. வருமான வரிப்புலனாய்வுத் துறையினர், `ரெய்டு யாவுமே வரி ஏய்ப்பு தொடர்பானவைதாம்' என்று செய்திக்குறிப்பில் சொன்னாலும், பின்னணியில் இருக்கும் சொல்லாத பல தகவல்களை தற்போதைய அரசியல் சூழல் வெளிப்படுத்துவதாக உள்ளது. ஆட்சி அதிகாரத்தின் பிரதான தூண்கள் இருவரையும், அசைத்துப் பார்க்கும் ரெய்டுகள் ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். பிரதான தூண்கள் மீது மோதியதோடு இந்த ரெய்டு நடவடிக்கைகள் நின்று விடுமா, அல்லது அடுத்தடுத்த நபர்களை நோக்கி, வருமான வரித்துறை ரெய்டுக்குத் தயாராகுமா என்பதே, கோட்டைப் பக்கத்தில் திகில் கிளப்பிக்கொண்டிருக்கும் செய்தியாகும்...!

 


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close