சென்னையில் ராமதாஸ், அன்புமணி மீது வழக்கு பதிவு

ராமதாஸ்

சென்னையில், அனுமதிக்கப்பட்ட நேரத்தைவிட கூடுதலாகக் கூட்டம் நடத்தியதற்காக, பா.ம.க நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி ஆகியோர்மீது காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

பா.ம.க-வின் 30-வது ஆண்டு விழா, கடந்த சில தினங்களுக்கு முன்பு அடையாறு பகுதியில் நடந்தது. அப்போது, அனுமதிக்கப்பட்ட நேரத்தைவிட கூடுலாக நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக சாஸ்திரி நகர் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதுதொடர்பாக, பா.ம.க நிறுவனர் ராமதாஸ், பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி, தலைவர் ஜி.கே.மணி மற்றும் ஏ.கே.மூர்த்தி ஆகியோர்மீது  போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``பா.ம.க-வின் பொதுக்கூட்டம், கடந்த 16-ம் தேதி அடையாறு பி.எஸ்.என்.எல் அலுவலகம் அருகே நடந்தது. இரவு 10 மணிக்கு கூட்டத்தை முடிக்காமல், அனுமதிக்கப்பட்ட நேரத்தைவிட கூடுதலாக நடத்தினர். அதுதொடர்பாக ராமதாஸ், அன்புமணி உட்பட, நான்கு பேர் மீது 143,188 மற்றும் tncp act ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளோம்" என்றனர்

இது குறித்து பா.ம.க.வின் மூத்த வழக்கறிஞர் பாலுவிடம் பேசினோம். "தலைவர் ஜி.கே.மணி இரவு 9 மணிக்கு முன்னதாகவே கூட்டத்தில் பேசிவிட்டார். அதன்பிறகு அன்புமணி இரவு 9.20 மணிக்குள் பேசி முடித்துவிட்டார். இரவு 9.58 மணிக்குள் ராமதாஸ் பேசிவிட்டார். இதனால் அனுமதிக்கப்பட்ட நேரத்துக்குள் பேசிய இவர்கள் மீது தேவையில்லாமல் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இரவு 10 மணிக்கு மேல் ஒலிபெருக்கியை அதிக சத்தமாக வைத்தல், அனுமதிக்கப்பட்ட நேரத்தைவிட கூடுதலாக பேசியதாக வழக்கு பதிவு செய்துள்ளனர். பொதுவாக இதுபோன்ற வழக்குகள் விழா ஏற்பாட்டாளர்கள் மீதுதான் பதிவு செய்யப்படும். ஆனால், தலைவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. இந்த வழக்கை சட்டப்படி எதிர்கொள்வோம்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!