வெளியிடப்பட்ட நேரம்: 12:41 (18/07/2018)

கடைசி தொடர்பு:13:05 (18/07/2018)

தினகரன் கார்மீது சரமாரி கல்வீச்சு... பெண் இன்ஸ்பெக்டர் மண்டை உடைப்பு! - ஆர்.கே.நகரில் பதற்றம்

சென்னை ஆர்.கே. நகரில், டி.டி.வி.தினகரன் வந்த வாகனம்மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தப்பட்டதால், அங்கு பரபரப்பான சூழல் நிலவிவருகிறது. 

ஆர்.கே.நகர்
 

தமிழக அரசியல் களத்தில் அவ்வப்போது டி.டி.வி.தினகரன் சற்று அமைதிகாத்துவருகிறார். முக்கிய நிகழ்வுகள், பிரச்னைகளுக்கு மட்டுமே கருத்து தெரிவித்துவருகிறார். இந்நிலையில், தனது ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட  தண்டையார்பேட்டை பகுதியில்  நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கு தினகரன் இன்று வந்திருந்தார். அவருக்கு முன்பாக அவரின் ஆதரவாளர்களின் வாகனங்கள் நுழைந்தன.

தண்டையார்பேட்டைக்குள் நுழைந்த தினகரன் ஆதரவாளர்களின் வாகனங்கள்மீது  யாரும் எதிர்பார்க்காத விதமாக சிலர் கல்வீசித் தாக்குதல் நடத்தத் தொடங்கினர். தினகரன் ஆதரவாளர்கள் போலீஸுக்குத் தகவல்கொடுத்தனர். சிறிது நேரத்தில் அங்கு போலீஸார் குவிந்தனர். ஆனாலும் கற்களை வீசித் தாக்குதல் நடத்துபவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீஸ் திணறியது. தினகரன் ஆதரவாளர்களும் பதிலுக்கு தாக்குதல் நடத்தத் தொடங்கியதால், அங்கு பதற்றம் அதிகரித்தது. பின்னர், போலீஸார் கல்வீசித் தாக்கியவர்களை விரட்டியடித்தனர். 

இந்தத் தாக்குதல் சம்பவத்தில், தினகரன் ஆதரவாளர்கள் சிலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பெண் காவல் ஆய்வாளர் ஒருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. 

ஆர்.கே.நகர்
 

பதற்றம் சற்று குறைந்ததும், அங்கு வந்த தினகரன், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவைத் தொடங்கிவைத்தார். விழா நடக்கும் ஒரு பகுதியில் தினகரனுக்கு எதிராக சிலர் தொடர்ந்து கோஷம் எழுப்பிக்கொண்டிருந்தனர். விழா எந்தப் பிரச்னையும் இன்றி முடிய வேண்டும் என்பதற்காக தினகரன் ஆதரவாளர்கள் அமைதிகாத்தனர். 

தாக்குதல் நடத்தியவர்கள் அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. `தாக்குதல் நடத்தியவர்கள் ரவுடிகள் போன்று இருந்தனர். அவர்களிடம் உருட்டுக்கட்டைகள் இருந்தன’ என்று பொதுமக்கள் சிலர் தெரிவித்தனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க