சேலம் கோட்ட ரயில்வே மூலம் இனி பார்சல் சர்வீஸ் - ரயில்வே அறிவிப்பு

தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சார்பில், எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரயிலில் பார்சல் பதிவுச் சேவை நாடு முழுவதும் உள்ள நகரங்களுக்கு வழங்கப்பட்டுவருகிறது. அந்த வகையில், சேலம் கோட்டத்துக்கு உட்பட்ட 32 ரயில் நிலையங்களில் ரயில்வே பார்சல் பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

 'சேலம் கோட்டத்துக்கு உட்பட்ட 32 ரயில் நிலையங்களில் ரயில்வே பார்சல் பதிவு தொடங்கப்பட்டுள்ளது. இதில் கோயம்புத்தூர், மேட்டுப்பாளையம், சேலம், திருப்பூர், ஈரோடு, கரூர் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்கள் அடங்கும். எனவே, ரயில் நிலையங்களில் உள்ள பார்சல் அலுவலகங்களை அணுகி, வாடிக்கையாளர்கள் தங்களது சரக்குகளை வேண்டிய இடத்துக்கு பார்சல் அனுப்பலாம். மேலும், பார்சல்களை அனுப்பும் சேவையில் வாடிக்கையாளர்கள் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதுமானது. வாடிக்கையாளர்களின் பார்சல்கள், சரக்குப் பெட்டி உள்ளிட்டவற்றில், குறுகிய மற்றும் நீண்ட தொலைவு ரயில்கள்மூலம் அனுப்பிவைக்கப்படும். வாடிக்கையாளர்கள், 23 டன் எடை உள்ள சரக்குகளை அனுப்பவும் ரயில் நிலையங்களில் உள்ள பார்சல் அலுவலகங்களை அணுகலாம். பார்சல்களுக்காக மட்டும் இயக்கப்படும் சரக்கு ரயில்கள்மூலம் 468 டன் எடை உள்ள சரக்குகளை வாடிக்கையாளர்கள் அனுப்பலாம்.

சேலம் கோட்டத்தில், 2017-18 நிதியாண்டில் மட்டும் 5,520.13 டன் சரக்குகளைக் கையாண்டுள்ளது. இது, கடந்த 2017-ம் ஆண்டைக் காட்டிலும் 8.83 சதவிகிதம் அதிகமாகும். 2017ல் 5072.10 டன் சரக்குகள் கையாளப்பட்டன. இதன்மூலம், ரூ.18.87 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இது, கடந்த 2017 ஐ காட்டிலும் சுமார் 9.73 சதவிகிதம் அதிகமாகும். கடந்த 2017-ம் ஆண்டில், ரூ.17.20 கோடியாக இருந்தது. சேலம் கோட்டம் சார்பில் திருப்பூர்-ஹௌரா இடையே மட்டும் தனி சரக்கு ரயில் இயக்கப்படுகிறது. இதன்மூலம், திருப்பூரில் இருந்து காட்டன் உற்பத்திப் பொருள்கள் 468 டன் சரக்குகள் சரக்கு ரயில்மூலம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இதுதவிர, கரூர் - ஜசித் (ஜார்கண்ட்) இடையே இரண்டு சிறப்பு சரக்கு ரயில்கள்மூலம் 960 டன் கொசு வலை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ரயில் பார்சல் பதிவு மையங்கள்மூலம் காய்கறிகள், பழங்கள் மற்றும் கால்நடைகள், இரண்டு சக்கர வாகனங்களை அனுப்பிவைக்கலாம். எனவே, ரயில் நிலையங்களில் உள்ள பார்சல் மையங்களை வர்த்தகர்கள், வர்த்தக அமைப்பினர், வாடிக்கையாளர்கள் என அனைத்து தரப்பினர் பயன்படுத்திக்கொள்ளலாம். 
 சேலம் ரயில் நிலைய பார்சல் மேற்பார்வையாளர் 0427-2448163, திருப்பூர்-9543152339, ஈரோடு-04242284988, கரூர்-8903119832, கோவை-8015572448, மேட்டுப்பாளையம்-8754416967 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம். வரும் ஜூலை 20-ம் தேதி, லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் செய்ய உள்ளதைத் தொடர்ந்து, சரக்குகளைப் பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்ப உள்ள வாடிக்கையாளர்கள், வர்த்தகர்கள், சேலம் ரயில்வே கோட்டத்தின் பார்சல் அனுப்பும் சேவையைப் பயன்படுத்திக்கொள்ளலாம்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!