சமயபுரம் யானை மசினியின் உடல்நிலையில் முன்னேற்றம்!

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் யானை மசினிக்கு, சில நாள்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டது. தற்போது, தஞ்சாவூர் ஒரத்தநாடு கால்நடை மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் உயர் சிகிச்சை பெற்றுவரும் மசினியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கல்லூரியின் முதல்வர் மோகன் தெரிவித்துள்ளார்.

யானை மசினி

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் எப்போதும் சுறுசுறுப்பாகவே காணப்படும் மசினி யானை, 10 நாள்களுக்கு முன்பு திடீரெனச் சோர்வுடன் காணப்பட்டது. அடுத்தடுத்த நாள்கள் உணவருந்துவதும் நின்றுபோனது. கால் மற்றும் வயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட வீக்கத்தின் காரணமாக மசினி துன்பப்படுவது கண்டறியப்பட்டது. இதனால், ஒரத்தநாடு கால்நடை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள், சமயபுரம் சென்று மசினிக்கு சிகிச்சை அளித்தார்கள். ஆனால், வீக்கம் குறையவே இல்லை. இதனால் உயர் சிகிச்சைக்காக, கடந்த 13-ம் தேதி தஞ்சாவூர் ஒரத்தநாட்டில் உள்ள கால்நடை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மசினி கொண்டுவரப்பட்டது. கல்லூரியின் முதல்வர் டாக்டர் மோகன் தலைமையில் செந்தில்குமார், சுரேஷ்குமார், செல்வராஜ், பழனிசாமி, வீரசெல்வம் உள்ளிட்ட மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவருகிறார்கள். 

இந்நிலையில், யானை மசினியின் கால் வீக்கம் தற்போது குறையத் தொடங்கியுள்ளதாகவும், புல், தண்ணீர் ஆகியவற்றை நன்கு உட்கொள்வதாகவும் மருத்துவக்கல்லூரி முதல்வர் மோகன் தெரிவித்துள்ளார். சிகிச்சைக்கு முன்பு, மசினியால் 10 மீட்டர் தூரம் வரை மட்டுமே நடக்க முடிந்தது. சிகிச்சையின் பலனாக, வீக்கம் குறைந்ததால் தற்போது 100 மீட்டர் தூரம் வரை நடக்கிறது எனவும் தெரிவித்தார். மசினியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், இன்னும் சில நாள்களிலேயே மீண்டும் சமயபுரம் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், சமயபுரம் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!