நான்கு அனல்மின் நிலைய ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்! - மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம்

அனல்மின் நிலைய  ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணிநிரந்தரம்செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி, வள்ளூர், எண்ணூர் மற்றும் மேட்டூர் ஆகிய  நான்கு  அனல் மின்நிலையங்களின்  ஒப்பந்தத் தொழிலாளர்கள்,  இரண்டு நாள்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள அனல்மின் நிலையங்களில் நிரந்தரப் பணியாளர்களைவிட, ஒப்பந்தத் தொழிலாளர்கள் அதிக அளவில் பணிபுரிந்து வருகின்றனர்.   தொழிலாளர்கள் சட்டத்தின்படி,  ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது இவர்களின் நீண்டகால கோரிக்கை. 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்துவரும் ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, இரண்டு நாள்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக, தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்கள் மத்திய அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.   

இதுகுறித்து தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்கள் மத்திய அமைப்பின் மாநிலத் தலைவர் சுப்பிரமணியன், “தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி அனல்மின் நிலையம், வள்ளூர் அனல்மின் நிலையம், எண்ணூர் அனல்மின் நிலையம், மேட்டூர் அனல்மின் நிலையம் ஆகிய  நான்கு அனல்மின் நிலையங்களில் 2,500 முதல் 3,000 ஒப்பந்தத் தொழிலாளர்கள், கடந்த 10 ஆண்டுகளாகப் பணிபுரிந்துவருகிறார்கள். இவர்களுக்கு அடையாள அட்டை கிடையாது. குறைந்தபட்ச கூலிகூட கிடையாது.

எனவே, குறைந்தபட்சக் கூலியான ரூ.600-ஐ வழங்கிட வேண்டும். ஒப்பந்தப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்திட வேண்டும். அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 30 மற்றும் 31-ம் தேதிகளில் இந்த  நான்கு அனல்மின் நிலைய ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இந்த வேலை நிறுத்தத்தினால், மின் உற்பத்தி பாதிக்கப்படலாம்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!