வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (18/07/2018)

கடைசி தொடர்பு:15:00 (18/07/2018)

29 தாசில்தார்கள் அதிரடி இடமாற்றம் - விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

விழுப்புரம் மாவட்டத்தில், 29 தாசில்தார்களை இடமாற்றம்செய்து, ஆட்சியர் சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.

ஆட்சியர்

வருவாய்த் துறை அலுவலகங்களில் பணிபுரியும் அதிகாரிகள், லஞ்சப் புகார்களில் சிக்குவது தொடர்கதையாகிக்கொண்டிருக்கிறது. அதைக் கட்டுப்படுத்த, அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. ஒவ்வொரு வருடமும் அவர்களைப் பணியிட மாற்றம் செய்யும் முறையைக் கடைப்பிடித்துவருகிறது. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் ஒரே நாளில் 29 தாசில்தார்களை அதிரடியாகப் பணி இடமாற்றம் செய்து, மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.

இடமாற்றம்

அந்த உத்தரவில், இந்த நியமனம்குறித்து எந்தவித மேல் முறையீடோ, விண்ணப்பமோ ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்றும், இடமாற்றம் செய்யப்பட்டவர்கள் புதிய பணியிடத்தில் உடனே சேரவில்லை என்றால், அரசு விதிகளின்படி அவர்கள்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தாசில்தார்கள்

இந்த உத்தரவுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விசாரித்தபோது, வருடத்துக்கு ஒருமுறை தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்படுவது நடைமுறையில் உள்ளதுதான் என்றும், அதிகாரிகளால் ஏற்படக்கூடிய முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அரசின் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று என்றும் தெரிவித்தனர்.