நெல்லையில் தனியார் மெட்ரிக் பள்ளியில் தீ விபத்து - மாணவர்கள் பத்திரமாக மீட்பு!

நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பதற்றம் நிலவியது. உடனடியாகப் பள்ளி மாணவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். 

 பள்ளியில் தீ விபத்து

நெல்லை பாளையங்கோட்டையில்  ரோஸ்மேரி மெட்ரிக் பள்ளி உள்ளது. அருகருகே  மூன்று பள்ளிகளைக் கொண்ட இங்கு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்துவருகிறார்கள். இதற்கிடையே, பள்ளியின் மெயின் பில்டிங்கில் உள்ள இரண்டாவது மாடியில்,  ஓர் அறையில் பழைய புத்தகங்கள், கைவிடப்பட்ட பொருள்கள், பழைய கம்ப்யூட்டர்கள், மேஜைகள் உள்ளிட்ட பொருள்கள் வைக்கப்பட்டிருந்தன. அந்த அறையில் இன்று திடீரெனத் தீப்பற்றியது. 

பள்ளி நடைபெற்றுக்கொண்டிருந்த நேரத்தில், திடீரென இரண்டாவது மாடியில் உள்ள  ஓர் அறையில் தீப்பற்றியதால், அந்த மாடி முழுவதும் புகை மூட்டமானது. அதனால், மாணவர்கள் மூச்சு விடுவதற்குச் சிரமப்படும் நிலைமை ஏற்பட்டது.  அங்கிருந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். மாணவர்கள், தங்களுடைய புத்தகப் பைகளை எடுக்கக்கூட அவகாசம் இல்லாத நிலையில், அனைவரும் வெளியேறினார்கள். 

உடனடியாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும், பெற்றோர்கள் பதைபதைப்புடன் அங்கு திரண்டதால் பதற்றம் ஏற்பட்டது. பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளைத் தேடி பள்ளியின் முன்பாகத் திரண்ட நிலையில், பள்ளி நிர்வாகத்தினர் அவர்களை சமாதானப்படுத்தினர்

தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஸ் மற்றும்  முதன்மைக் கல்வி அலுவலர் செந்தில்வேல், சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வுசெய்தனர். பள்ளியில் தீயைக் கட்டுப்படுத்தும் சாதனங்கள் வைக்கப்பட்டிருக்கவில்லை என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து, அங்கு அதிகாரிகள் முகாமிட்டு ஆய்வுசெய்துவருகிறார்கள். முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாமல் பள்ளி செயல்பட்டது தெரியவந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதன்மைக் கல்வி அதிகாரி தெரிவித்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!