தூத்துக்குடி முற்றுகைப் போராட்ட கலவர வழக்கு - ஒருவர் மீது குண்டாஸ்; ஒருவர் கோர்ட்டில் சரண்!

ஸ்டெர்லைட் ஆலையை மூடிட வலியுறுத்தி நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில் ஏற்பட்ட கலவரம் தொடர்பான வழக்கில் ஒருவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் ஒருவர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

தூத்துக்குடி கலவரம்


தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி  கடந்த மே- 22-ம் தேதி நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. அப்போது, போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் துப்பாக்கிச் சூடு மற்றும் தடியடியில் காயமடைந்தனர். இந்தக் கலவரத்தைத் தூண்டியவர்கள், காரணமானவர்கள் ஆகியோர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, கைது நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். கலவரம் தொடர்பாக, பலர் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கெனவே, பாளையைங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நெல்லை மாவட்டம், மேலப்பாளையத்தைச் சேர்ந்த சுனில் ரகுமான், முகமது இஸ்மாயில், முகமது யூனுப், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த சரவணன், வேல்முருகன் மற்றும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சோட்டையன் ஆகிய 6 பேர் இப்போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்டதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியின் உத்தரவின் பேரில், தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், மீண்டும்  கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல் முற்றுகைப் போராட்டத்தில் கலவரத்தைத் தூண்டியதாக, மக்கள் உரிமைப் பாதுகாப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர், மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தூத்துக்குடி சுந்தரவேல்புரத்தைச் சேர்ந்த, இசக்கிதுரை என்பவர் மீது சிப்காட் காவல் நிலையத்தில் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு  செய்யப்பட்டுள்ளது. அவரை தூத்துக்குடி போலீஸார் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர். அதேபோல், பண்டாரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த, வழக்கறிஞர் ராஜேஷ் குமார் என்பவர் மீதும் தூத்துக்குடி கலவர வழக்கு தொடர்பாக, சிப்காட் காவல் நிலையத்தில் 4 வழக்குகள் உள்ளன.

இவரை போலீஸார் தேடி வந்த நிலையில், தூத்துக்குடி, ஜே.எம்-3  நீதிமன்றத்தில், நீதிபதி தமிழ்ச்செல்வி முன்னிலையில் சரணடைந்தார். ராஜேஷ்குமாரை 15  நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி தமிழ்ச்செல்வி உத்தரவிட்டார். தொடர்ந்து, போலீஸார் அவரை பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.     

Do you like the story?

Please Appreciate the Author by clapping!