170 கோடி பணம்... 100 கிலோ தங்கம்... யார் இந்த எஸ்.பி.கே. எனும் செய்யாத்துரை!

170 கோடி பணம்... 100 கிலோ தங்கம்... யார் இந்த எஸ்.பி.கே. எனும் செய்யாத்துரை!

மிழகத்தின் மணல் குவாரிகளுக்கு சேகர் ரெட்டி எப்படியோ... அப்படித்தான் தமிழகத்தின் நெடுஞ்சாலைத் துறைக்குச் செய்யாத்துரை. விருதுநகர், அருப்புக்கோட்டை ஏரியாவின் குட்டி ராஜாவாகத் திகழும் செய்யாத்துரை அண்டு சன்ஸ்-க்குச் சொந்தமானதுதான் எஸ்.பி.கே குழுமம். கடந்த இரண்டு நாள்களாக அந்தக் குழுமத்தின் வணிக நிறுவனங்கள், அலுவலகங்கள், நண்பர்களின் வீடுகளைத்தான் வருமான வரித் துறை குடைந்து, 170 கோடி ரூபாய் பணம், 105 கிலோ தங்கத்தைக் கைப்பற்றியது. செய்யாத்துரையின் வாரிசுகள், அவர்களுடன் வணிக வர்த்தகத் தொடர்பில் உள்ளவர்களிடம் கைப்பற்றப்பட்டுள்ள இந்தப் பணமும் தங்கமும் மிகச் சொற்பம் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். ஸ்பின்னிங் மில், ஹோட்டல், கட்டுமானத் தொழில், கல்வி நிறுவனங்கள் என்று எஸ்.பி.கே பல தொழில்களில் கால் பதித்து இருந்தாலும், நெடுஞ்சாலைத்துறைதான் அந்தக் குழுமத்தின் அட்ஷய பாத்திரம். அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் துணையோடு எஸ்.பி.கே குழுமம் நெடுஞ்சாலைத்துறையை கபளீகரம் செய்துள்ள விவரங்களை தெளிவாக எடுத்துரைத்தனர் விருதுநகர் கோட்ட நெடுஞ்சாலைத்துறைப் பொறியாளர்கள். 

நெடுஞ்சாலைத்துறை சாலை

நெடுஞ்சாலைத்துறையின் மொத்த குத்தகை... 

விருதுநகர் மாவட்டத்தில் உள் மாவட்டச் சாலைகள் அமைப்பு, மாநிலச் சாலைகள் பராமரிப்பு 5 ஆண்டுகளுக்கு மேற்கொள்ளப்பட உள்ளது. அதற்காக தற்போது 570 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை எடுத்துள்ளது செய்யாத்துறைக்குச் சொந்தமான எஸ்.பி.கே நிறுவனம்தான். இந்த மொத்த ஒப்பந்தம் மூலம் அவர்களின் லாப நோக்கில் நெடுஞ்சாலைத் துறை சாலைகள் மட்டும் அபகரிக்கப்படவில்லை. மாறாக, பொறியாளர்களின் அதிகாரமும் பறிபோகும் நிலை உருவாகி உள்ளது. 

ஆதிக்கம் செய்யும் எஸ்.பி.கே... அதிகாரம் இழந்த அரசுப் பொறியாளர்கள்!  

கமிஷனுக்காக டெண்டர் விடப்பட்டு, அதற்காக தனியார் நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது போய், தற்போது பொறியாளர்களும் பலிகடாக்கள் ஆகும் நிலை நெடுஞ்சாலைத்துறையில் ஏற்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறையில் 42 கோட்டங்கள் உள்ளன. 250 சப்-டிவிஷன்கள் அதில் அடக்கம். இந்தத் துறை அமைக்கப்படும் சாலைகள், அந்தச் சாலைகளின் பராமரிப்பைக் கண்காணிப்பது எல்லாம் உதவிப் பொறியாளர், கோட்டப் பொறியாளர், உதவி கோட்டப் பொறியாளர்களின் வேலை. இவர்கள் எல்லாம் கூட்டாகச் சேர்ந்துதான், சாலைகள் அமைக்க ஆகும் செலவு, செய்யப்பட வேண்டிய வேலைகள் குறித்து திட்ட மதிப்பீடு செய்வார்கள். அதன் அடிப்படையில் ஒப்பந்தப் புள்ளிகள்(டெண்டர்) கோரப்படும். ஆனால், இதைத் தலைகீழாக மாற்றிப்போட்டது எஸ்.பி.கே நிறுவனம். அரசாங்கப் பொறியாளர்கள் செய்யும் வேலைகளை எல்லாம், எஸ்.பி.கே கையில் எடுத்துக்கொண்டது. எஸ்.பி.கே-நிறுவனத்தின் ஆட்களே சாலைகள் அமைப்பதற்கான செலவு, பராமரிப்புச் செலவு என அனைத்தையும் கணக்கிட்டு, திட்ட மதிப்பீட்டை தயாரிப்பார்கள். கடைசியில் அதில் நெடுஞ்சாலைத்துறை அரசுப் பொறியாளர்கள் எந்தக் கேள்வியும் கேட்காமல் கையெழுத்துப் போட வேண்டும். அவர்கள் ஒப்பமிட்டு அளித்தபின், அந்தத் தொகைக்கு அரசாங்கம் டெண்டர் விடும். இப்படி அரசாங்கத்தின் பொறியாளர்களை வெறும் பொம்மைகளாக மாற்றி வைத்துள்ளது எஸ்.பி.கே நிறுவனம். 

செய்யாத்துறையின் ஹை-வே கான்டிராக் என்ட்ரி!

செய்யாத்துறை அருப்புக் கோட்டை பகுதியில் ஆட்டு வியாபாரம் செய்து வந்தார். அவருக்கு நாகராஜ், பாலசுப்பிரமணியம், நாச்சியப்பன், கருப்பசாமி, ஈஸ்வர் என 5 மகன்கள். ஆட்டு வியாபாரம் மூலம் அன்சாரிபாய் என்பவரின் நட்பு செய்யாத்துரைக்குக் கிடைத்தது. அவர் மூலம் ரோடு கான்டிராக்ட் வேலைகளில் சின்னச் சின்ன வேலைகளை எடுத்துச் செய்து வந்தார். ஒரு கட்டத்தில் இன்றைய துணை முதல்வர் ஓ.பி.எஸ்  நட்பும் செய்யாத்துறை அண்டு சன்ஸ்-க்குக் கிடைத்தது. அதன்மூலம் தமிழக அரசாங்கக் கான்டிராக்டுகள் எடுக்கும் முக்கியப் புள்ளியாக செய்யாத்துரை வளர்ந்தார். அதன்பிறகு இன்றைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியோடும் நெருக்கமானது செய்யாத்துரை குடும்பம். எஸ்.பி.கே அன்டு கோ எக்ஸ்பிரஸ் வே என்ற பெயரில் செய்யாத்துரை நடத்தும் நிறுவனத்தில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சம்பந்தி சுப்பிரமணியம் பழனிச்சாமியும் ஒரு டைரக்டர். செய்யாத்துரையின் மகன்களில் நாகராஜ் என்பவர்தான் கான்டிராக்ட் தொழில்களை பார்த்துக் கொள்வது, அரசாங்க லாபிகளைக் கவனிப்பதில் கில்லி. மற்றவர்கள் அலுவலக நிர்வாகத்தை மட்டும் பார்த்துக் கொள்கின்றனர்.

`குவாலிட்டி செக்’-கிற்கு ‘செக்’ வைத்த எஸ்.பி.கே! 

நெடுஞ்சாலைத் துறை, எஸ் பி கே

ஒப்பந்தங்களை எடுத்த தனியார் நிறுவனங்கள் எந்த லட்சணத்தில் வேலை செய்துள்ளன என்பதை நெடுஞ்சாலைத் துறைப் பொறியாளர்கள் மதிப்பிடுவார்கள். அவர்கள் அதில் குறைகள் தெரிந்தால், அதுபற்றி அரசுக்கு அறிக்கை கொடுப்பார்கள். அதன் அடிப்படையில் அந்த வேலையைச் செய்த தனியார் நிறுவனத்துக்குக் கொடுக்க வேண்டிய தொகை நிறுத்தி வைக்கப்படும். குறை உள்ள இடங்கள் சரி செய்யப்பட்டு, அதன்பிறகு மீண்டும் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்படும். அதில் திருப்தி ஏற்பட்டால்தான் தனியார் நிறுவனத்துக்கு மீதித் தொகை கொடுக்கப்படும். ஆனால், தற்போது அப்படி அல்ல! வேலை எப்படி நடந்திருக்கிறது என்பதை மதிப்பிடும் `குவாலிட்டி செக்’ என்ற தரப் பரிசோதனையையும் எஸ்.பி.கே நிறுவனமே செய்கிறது. அப்படிச் செய்து எஸ்.பி.கே நிறுவனம் தயாரிக்கும் அறிக்கையிலும் எந்தக் கேள்வியும் கேட்காமல் நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் வெறுமனே கையெழுத்துப் போட வேண்டும்! 

எஸ்.பி.கே டிரான்ஸ்பர்!

அரசாங்கப் பணியாளர்களுக்கு அரசாங்கம் பல்வேறு காரணங்களை முன்னிட்டு டிரான்ஸ்பர் வழங்கும். ஆனால், நெடுஞ்சாலைத்துறையில் எஸ்.பி.கே டிரான்ஸ்பர் என ஒன்று உள்ளது. தங்கள் வேலை நடக்கும் இடங்களில், தாங்கள் தயாரிக்கும் திட்ட மதிப்பீடுகளை எந்தக் கேள்வியும் கேட்காமல் அரசுப் பொறியாளர்கள் அங்கீகரித்தால்தான் வேலையும் நடக்கும்; வியாபாரமும் நடக்கும். இதற்காகவே எஸ்.பி.கே. நிறுவனம், அவர்களுடைய வேலை நடக்கும் இடங்களுக்கு அவர்களுக்கு ஒத்துப் போகும் அதிகாரிகளை, வேலை தொடங்குவதற்கு முன்பே கொண்டுவந்துவிடும். அதற்காக எஸ்.பி.கே டிரான்ஸ்பர் சர்வீஸே அரசாங்கத்தில் தனியாக நடக்கிறது. 

நெடுஞ்சாலைத்துறை கல்லாபெட்டி! 

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம்

தற்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ-க்களின் கல்லாப்பெட்டியாக இருக்கிறது நெடுஞ்சாலைத்துறை. குறிப்பாக எம்.எல்.ஏ-க்கள் மற்றும் கட்சிக்காரர்களுக்குப் பணம் எடுத்துக் கொடுப்பதற்காக மட்டுமே இந்தத் துறை உள்ளது. உதாரணத்துக்கு அமைச்சருக்கு ஆதரவான எம்.எல்.ஏ கோட்டப் பொறியாளரிடம் தொலைபேசியில் பேசி, ``நம்ம ஆள் ஒருத்தர் வருவார். விதிமுறைப்படி என்ன செய்ய வேண்டுமோ... அதைச் செய்து கொடுங்கள்” என்பார். அதன்பிறகு, சம்பந்தப்பட்ட நபர் கோட்டப் பொறியாளரைப் போய்ச் சந்திப்பார். அவர் ஏதாவது ஒரு கான்டிராக்டரிடம் சொல்லி, அந்த நபருக்குப் பணத்தைக் கொடுக்கச் சொல்லிவிடுவார். அதற்குப் பதிலாக அந்த கான்டிராக்டருக்கு `எமர்ஜென்சி வொர்க்’ என்று சொல்லப்படும் அவசர வேலைகள் உடனடியாக ஒதுக்கிக் கொடுக்கப்பட்டு, அதற்கான தொகை கண்காணிப்புப் பொறியாளர் பெயரில் செக் போட்டு கொடுத்துவிடுவார்கள். அந்த செக்கை எடுத்துக் கொண்டுபோய் அரசு கருவூலத்தில் கொடுத்ததும், அந்த கான்டிராக்டருக்குப் பணம் கிடைத்துவிடும். 

அவசர வேலை என்ற பெயரில் எதுவும் நடந்திருக்காது. அதை பொதுவான வேலைகளோடு சேர்த்துப் பார்த்துவிடுவார்கள்; அவ்வளவுதான்! இப்படிப்பட்ட கல்லாப்பெட்டி கான்டிராக்டர்களில் முக்கியமான ஆள் எஸ்.பி.கேதான்!  இப்படிப்பட்ட வேலைகள் மூலம்தான் எஸ்.பி.கே நிறுவனம் பல கோடிகள் புரளும் நெடுஞ்சாலைத்துறையின் மொத்த குத்தகைதாரராக ஆனது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!