வெளியிடப்பட்ட நேரம்: 14:56 (18/07/2018)

கடைசி தொடர்பு:16:36 (18/07/2018)

`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன?’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்

   மாணவி விவகாரத்தில் கைதானவர்கள்

சென்னையில், 7-ம் வகுப்பு மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் என்ன நடந்தது என்று கைதான 66 வயது முதியவர் பகீர் வாக்குமூலம் கொடுத்துள்ளார். 

சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருந்த 7-ம் வகுப்பு மாற்றுத்திறனாளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில், அடுக்குமாடி குடியிருப்பில் பணியாற்றிய காவலாளிகள், லிஃப்ட் ஆபரேட்டர்கள், பிளம்பர் என 17 பேரை போலீஸார் கைதுசெய்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவியிடமும், அவரின் பெற்றோரிடமும் போலீஸார்  விசாரித்தனர். கைதான 17 பேரும்  தனித்தனியாக விசாரிக்கப்பட்டனர். அப்போது, கைதானவர்கள் கூறிய ஒரே பெயர் ரவிக்குமார். 

 யார் இந்த ரவிக்குமார்? இவரின் பின்னணிகுறித்து போலீஸாரிடம் கேட்டபோது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. 

``அயனாவரம், பங்காரு தெருவைச் சேர்ந்தவர் ரவிக்குமார். 66 வயதான இவர், அந்த அடுக்குமாடி குடியிருப்பில் 10 ஆண்டுகளாக வேலைபார்த்து வந்துள்ளார். லிஃப்ட் ஆபரேட்டராகப் பணியாற்றிய ரவிக்குமாரைத் தெரியாதவர்கள் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் யாரும் இருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு ரவிக்குமார் எல்லோரிடமும் மரியாதையாகப்  பழகுவார். மற்றவர்களைப் போலதான் 7-ம் வகுப்பு மாணவியும் ரவிக்குமாரிடம் பழகியுள்ளார். அதை யாரும் தவறாகக் கருதவில்லை. வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் சைகை மூலம் அந்த மாணவியும் ரவிக்குமாரும் பேசிச் சிரித்துக்கொண்டே இருப்பார்கள். தாத்தா என்றுதான் மாணவி அவரை அழைத்துவந்தார். ஆனால், 66 வயதான ரவிக்குமாரோ மாணவியைத் தவறான கண்ணோட்டத்தில் பார்த்துவந்துள்ளார். 

    மாணவி விவகாரத்தில் கைதான ரவிக்குமார்

மாணவியின் குடும்பச் சூழ்நிலையைத் தெரிந்துகொண்ட ரவிக்குமார், அவரிடம் கொஞ்சம் கொஞ்சமாக அத்துமீறத் தொடங்கியுள்ளார். இது, நீண்டகாலமாகத் தொடர்ந்துள்ளது. தனக்கு நேர்ந்த கொடுமைகளை வெளியில் சொல்ல முடியாமல் மாணவி தவித்துள்ளார். அதற்கு, மிரட்டல் ஒரு காரணமே. ஆனால், முக்கியக் காரணம் வேறு. மாணவியிடம் தவறாக நடந்த ரவிக்குமார், போதையில் அதை அங்கு பணியாற்றும் சில நண்பர்களிடம் தெரிவித்துள்ளார். அதன்பிறகு அவர்களும், மாணவியிடம் அத்துமீறத் தொடங்கியுள்ளனர். அப்போதுதான், மயக்க ஊசி, கூல்டீரிங்ஸில் மயக்க மருந்து என்று மாணவிக்குக் கொடுத்துள்ளனர். இதனால், மாணவிக்கு என்ன நடந்தது என்றுகூட தெரியவில்லை. அடிக்கடி வயிறு வலிப்பதாக மட்டுமே பெற்றோரிடம் சொல்லிய மாணவி, அதுதொடர்பாக வேறு எதையும் சொல்லவில்லை. இது, மாணவியிடம் தவறாக நடந்த கும்பலுக்கு சாதகமாக அமைந்தது" என்கின்றனர் போலீஸார்.

  ரவிக்குமாரிடம் தனியாக  போலீஸார் விசாரணை நடத்தியபோது, அதிர்ச்சித் தகவல் ஒன்றை குறிப்பிட்டுள்ளார். `மாணவியிடம் தவறாக நடந்தது நான் மட்டுமல்ல... இந்த விவகாரத்தில் இன்னும் சிலர் திரைமறைவில் இருக்கின்றனர். நான் ஒரு கருவிதான்' என்று சொல்லியுள்ளார். அவர் குறிப்பிட்டபடி, மாணவி விவகாரத்தில் இன்னும் சிலர் உள்ளனர். அவர்கள் குறித்த தகவல்களை போலீஸார் ரகசியமாகச் சேகரித்துவருகின்றனர். சம்பந்தப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருப்பவர்கள், ரவிக்குமார் குறித்த தகவல்களைக் கேட்டதும் முதலில் நம்பவில்லை. ஆனால், அவர் மீதான குற்றச்சாட்டுகளை மாணவியே வாக்குமூலமாகக் கொடுத்ததால், ரவிக்குமாரின் உண்மை முகத்தைத் தெரிந்தவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ரவிக்குமாரால் வேறுயாரும் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்று போலீஸார் விசாரித்துவருகின்றனர். ரவிக்குமாரின் குடும்பத்தினரிடம் போலீஸார் விசாரித்தபோது, அவர் ஆரம்பத்திலிருந்தே அப்படித்தான் என்று ஒற்றை வரியை மட்டும் பதிலாகச் சொல்லியிருக்கிறார்கள். இதனால், ரவிக்குமாரின் பின்புலம்குறித்த விசாரணையில் போலீஸார்  இறங்கியுள்ளனர். 

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``மாணவி விவகாரத்தில் வழக்கு விசாரணையைத் துரிதப்படுத்தியுள்ளோம். அடுக்குமாடியிலிருந்து கிடைத்த ஆதாரங்களை ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம். ஆய்வின் முடிவு வந்ததும், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மாணவி மற்றும் கைதானவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டு, அந்த முடிவுகளும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். இந்த வழக்கைப் பொறுத்தவரை, இதுவரை 17 பேர் மட்டுமே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, அவர்கள்மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால், சிறையிலும் அவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில், இன்னும் ஒரு மாதத்துக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல்செய்ய முடிவு செய்துள்ளோம். தஷ்வந்த் வழக்கைபோல குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வாங்கிக்கொடுக்க உள்ளோம். மாணவியிடம் முதல் முதலாக தவறாக நடந்த ரவிக்குமாரை காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டம் உள்ளது. அவர் சொல்லும் தகவல்களும் மாணவி கூறிய தகவல்களும் ஒரே மாதிரியாக உள்ளன. மாணவியின் வாக்குமூலம், ரவிக்குமாரின் வாக்குமூலம்தான் இந்த வழக்கின் முக்கிய ஆதாரம். அவற்றை ரகசியமாக வைத்துள்ளோம்" என்றார்.