`சமரசமாகப்போவது ஸ்டாலினுக்கு நல்லது!’ - கட்சிக்குள் கனிமொழியின் கலகம் | Clash between stalin and kanimozhi

வெளியிடப்பட்ட நேரம்: 15:02 (18/07/2018)

கடைசி தொடர்பு:15:30 (18/07/2018)

`சமரசமாகப்போவது ஸ்டாலினுக்கு நல்லது!’ - கட்சிக்குள் கனிமொழியின் கலகம்

`இந்தமுறை எம்.பி அல்லது எம்.எல்.ஏ சீட்டை ஸ்டாலின் ஒதுக்க வேண்டும்' எனக் கனிமொழி எதிர்பார்க்கிறார். குடும்ப உறுப்பினர்களின் அழுத்தத்தால், சீட் கொடுக்கும் முடிவிலிருந்து ஸ்டாலின் பின்வாங்கிவிட்டால், கனிமொழியின் அரசியல் ஆட்டம் தொடங்கிவிடும்.

`சமரசமாகப்போவது ஸ்டாலினுக்கு நல்லது!’ - கட்சிக்குள் கனிமொழியின் கலகம்

'கனிமொழிக்கு மீண்டும் எம்.பி சீட் கொடுத்துவிடக் கூடாது' என வரிந்து கட்டிக்கொண்டு களமிறங்கியுள்ளனர் தி.மு.க குடும்ப உறவுகள். 'ராஜ்யசபா சீட்டைவிடவும் மக்களை நேரடியாகச் சந்தித்துப் போட்டியிட விரும்புகிறார் கனிமொழி. சீட்டை ஒதுக்குவதற்கு ஸ்டாலின் மறுத்துவிட்டால், அடுத்தகட்ட ஆட்டத்தை அவர் தொடங்குவார்' என்கின்றனர் அறிவாலய வட்டாரத்தில்.

தமிழ்நாட்டில் ராஜ்யசபா எம்.பி-க்கள் 6 பேரின் பதவிக்காலம் நிறைவடைய உள்ளது. இந்தப் பதவிகளுக்காக இப்போதே அறிவாலயத்தில் முட்டல் மோதல்கள் தொடங்கிவிட்டன. இதுகுறித்து நம்மிடம் பேசிய அறிவாலய நிர்வாகி ஒருவர், "தி.மு.க-வுக்குள் கனிமொழி செல்வாக்குப் பெறுவதை குடும்ப உறுப்பினர்கள் ரசிக்கவில்லை. 'மீண்டும் ராஜ்யசபா சீட்டுக்கு அவர் பெயரைப் பரிந்துரைக்கக் கூடாது' எனச் செல்வி உள்ளிட்டவர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். 'எடப்பாடி பழனிசாமி அரசு தொடர்ந்து நீடித்தால், பிரதிநிதித்துவ அடிப்படையில் தி.மு.க-வுக்கு மூன்று சீட்டுகள் கிடைக்கும். அதில் ஓர் இடத்தைத் தயாநிதி மாறனுக்குக் கொடுக்க வேண்டும்' எனப் பிடிவாதமாக இருக்கிறார் செல்வி. ஸ்டாலின் மருமகன் சபரீசனும் தன்னுடைய பங்குக்கு ஒரு நபரை முன்னிறுத்துகிறார். ஆனால், 'கட்சியின் சீனியர்களுக்கு இந்தமுறை வாய்ப்பு கொடுக்க வேண்டும்' என ஸ்டாலின் விரும்புகிறார். தொ.மு.ச தலைவர் சண்முகம், வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆகியோரும் ராஜ்யசபா சீட்டுகளை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இதில், சண்முகம் மீது ஏராளமான புகார்கள் இருப்பதால் ஸ்டாலின் எந்தப் பதிலையும் சொல்லவில்லை. மூன்று சீட்டுகளை குறிவைத்து அறிவாலயத்தில் மும்முனைத் தாக்குதல் நடந்துகொண்டிருக்கிறது. இந்தமுறை கனிமொழிக்கு சீட் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை" என்றார். 

``உண்மையில், ராஜ்யசபா எம்.பி சீட்டை கனிமொழி எதிர்பார்த்துக் காத்திருக்கவில்லை" என விவரித்த தி.மு.க முக்கிய பிரமுகர் ஒருவர், "நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகுதான் ராஜ்யசபா தேர்தல் வரவிருக்கிறது. இந்தமுறை மக்களைச் சந்தித்துப் போட்டியிடும் முடிவில் இருக்கிறார் கனிமொழி. இதை அறிந்த தூத்துக்குடியைச் சேர்ந்த சமூக பிரமுகர்களும், 'தென்மாவட்டங்களின் வளர்ச்சிக்காகப் பாடுபடும் கனிமொழி, எங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டும்' என அறிவாலயத்துக்கே மனு அனுப்பியுள்ளனர். அரசியல்ரீதியாக அவர் வளர்வதை குடும்ப உறுப்பினர்கள் விரும்பவில்லை. 'ஸ்டாலினுக்குப் பிறகு, உதயநிதி வர வேண்டும்' என துர்கா விரும்புகிறார். ஆனால், கனிமொழிக்குக் கட்சியைத் தாண்டியும் பெண்கள், மாற்றுத் திறனாளிகள் என சமூகதளத்தில் அதிக ஆதரவு இருக்கிறது. தி.மு.க-வில் உள்ள வன்னியர்களும் நாடார்களும் முத்தரையர்களும் ஸ்டாலினுக்கு அடுத்தபடியாகக் கனிமொழியைத்தான் பார்க்கின்றனர்.

அண்ணா அறிவாலயம்

'இந்தமுறை எம்.பி அல்லது எம்.எல்.ஏ சீட்டை ஸ்டாலின் ஒதுக்க வேண்டும்' எனக் கனிமொழி எதிர்பார்க்கிறார். குடும்ப உறுப்பினர்களின் அழுத்தத்தால், சீட் கொடுக்கும் முடிவிலிருந்து ஸ்டாலின் பின்வாங்கிவிட்டால், கனிமொழியின் அரசியல் ஆட்டம் தொடங்கிவிடும். ஸ்டாலினுக்கு எதிராக மூன்று முக்கிய சமூகங்களை மடை மாற்றும் வேலையையும் அவர் செய்யத் தொடங்குவார். இது அரசியல்ரீதியாக ஸ்டாலினுக்குப் பெரும் பின்னடைவை உருவாக்கும். கனிமொழியிடம் சமரசமாகப் போனால்தான் ஸ்டாலினால் அரசியல் செய்ய முடியும் என்ற சூழல் உருவாகி வருகிறது. 'ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவுகளைப் பொறுத்து அரசியல் நகர்வுகளை முன்னெடுப்போம்' என அமைதியாகக் காத்திருக்கிறார் கனிமொழி. 

இப்படியொரு அரசியல் மூவ் நடப்பதை அறிந்துதான், கட்சியின் மாவட்ட நிர்வாகிகளை மாற்றியமைக்கும் வேலைகளைச் செய்து வருகிறார் ஸ்டாலின். தென்மாவட்டங்களில் பெரும்பான்மையாக இருக்கும் சமூகங்களைச் சேர்ந்தவர்களைப் புறக்கணித்துவிட்டு, மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்களைப் பதவிக்குக் கொண்டு வந்துவிட்டார். வடமாவட்டங்களிலும் டெல்டாவிலும் இதே பாணியைத்தான் கடைப்பிடிக்கிறார். இதெல்லாம் கனிமொழிக்கு எதிரான நடவடிக்கையாகவே பார்க்க வேண்டியதாக இருக்கிறது. 'தனக்கு எதிராகக் கனிமொழி ஒரு சக்தியாக உருவெடுத்துவிடக் கூடாது' என நினைக்கிறார் ஸ்டாலின். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கல்ஃப் நாடுகளுக்குப் பயணம் சென்றார் கனிமொழி. அப்போது ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் பெருவாரியாகத் திரண்டு கனிமொழியை வரவேற்றதையும் கவனித்தார் ஸ்டாலின். வரக் கூடிய நாள்களில் ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவுகளையொட்டியே, கனிமொழியின் அரசியல் பயணம் அமையும்" என்றார் விரிவாக. 

தி.மு.க தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜுன் 3 அன்று, ஒரு கவிதை எழுதியிருந்தார் கனிமொழி. அதில், 'ஊர்கூடி வடமிழுக்கிறோம், தேர் நகரவில்லை, கைகள் சோர்ந்து நம்பிக்கை இற்று விழும்முன் வா. உன் கரகரத்த குரல் வாளெடுத்து எழுத்துக் கேடயம் ஏந்தி வா. வீதிகளெங்கும் காத்திருக்கிறோம் ரட்சகனுக்காக' எனப் பதிவு செய்திருந்தார். ஸ்டாலினுக்கு எதிரான கவிதையாகவே இதைக் கவனித்தனர் உடன்பிறப்புகள்.