வெளியிடப்பட்ட நேரம்: 16:06 (18/07/2018)

கடைசி தொடர்பு:16:06 (18/07/2018)

"கரூர் காவிரியில் குளிக்க நினைப்பவர்களே... உஷார்!" - ஓர் எச்சரிக்கை

``கரூர் மாவட்டத்தில் பாயும் காவிரியில் குளிக்க நினைப்பவர்கள், அந்த எண்ணத்தை கைவிடுவது நல்லது. இல்லையென்றால், அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும்" என்று சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். காரணம், `தமிழகத்திலேயே அதிக அளவில் கரூர் மாவட்டத்தில்தான் மணல் கொள்ளை நடந்திருப்பதாகவும், பல இடங்களில் 20 அடி அளவுக்கு ஆற்று மணலை அள்ளி, ஆங்காங்கே மரணப் பள்ளங்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஆற்றில் குளிக்கச் செல்வோர், இதுபோன்ற பள்ளங்களில் சிக்கினால் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத சூழல் எற்படும்' என்று கரூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் `ரெட் அலர்ட்' செய்கிறார்கள்.

காவிரி

காவிரி என்றாலே ஒருகாலத்தில் நொப்பும், நுரையுமாக ஆற்றின் இரண்டுபக்கக் கரைகளையும் தொட்டபடி பாய்ந்தோடும் தண்ணீர்தான் பலருக்கும் நினைவுக்கு வரும். `மேட்டூர் அணையிலிருந்து, காவிரியில் தண்ணீர் இன்ன தேதியில் திறக்கப்படுகிறது' என்ற அரசின் அறிவிப்பைக் கேட்டாலே, விவசாயிகளின் முகத்தில் பொலிவு ஏற்படும். `வயல்ல இந்தப் போகத்துக்கு இன்ன ரக நெல்லைப் போடணும். அதற்குத் தயாராகும் வகையில் உழவு ஓட்டணும்' என்றபடி, வயலைச் சீர்செய்யக் கிளம்பிவிடுவார்கள்.

ஆனால், சிறுவர்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் காவிரி என்பது, ஜல்லிக்கட்டு மாட்டோடு மோதி வீரத்தைசமூக ஆர்வலர் விஜயன் வளர்க்கும் இளைஞர்களைப் போல், காவிரி நீரில் குதித்து, எதிர் நீச்சலில் நீந்தி, காவிரி நீரோடு கட்டிப்புரண்டு சண்டை போடும் களமாகவே தோன்றும். முங்கு நீச்சல், காக்கா நீச்சல் என்று காவிரி நீரில் ஆசையோடு இளைஞர்கள் நீச்சல் அடிக்கக் கிளம்பி விடுவார்கள். ஆனால், சில வருடங்களாக காவிரியில் அப்படிக் குளிக்கப் போகும் சிறுவர்கள், இளைஞர்களில் சிலர், ஆற்றின் சுழலில் சிக்கி உயிரிழக்கும் சோகச் சம்பவங்களும் கடந்த சில ஆண்டுகளில் நடந்துள்ளன. 

``எச்சரிக்கையாக இல்லை என்றால், இந்த வருடம் அதுபோன்று காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகமாவதை யாராலும் தடுக்க முடியாது. காரணம், கடந்த வருடம், கரூர் மாவட்ட காவிரியில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மணல் கொள்ளை நடந்துள்ளது" என்று அபாய மணியை அடிக்கிறார்கள் காவிரியின் இப்போதைய நிலை பற்றி அறிந்தவர்கள். இரண்டு வருடங்களுக்குப் பின்னர், இந்த வருடம் மேட்டூர் அணையிலிருந்து ஜூலை மாதத்திலேயே தண்ணீர் திறக்கவிருக்கிறார்கள். கர்நாடக நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் கனமழை, மேற்குத்தொடர்ச்சி மலைகளில் பொழியும் கனமழை காரணமாக, மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து முழுக் கொள்ளளவை எட்டும் சூழல் உருவாகியுள்ளது. கர்நாடக அணைகளிலிருந்து ஒரு லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில், காவிரிக் கரையோர மாவட்ட மக்களுக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகம், வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. அமராவதி அணையும் நிரம்பும் நிலையில் இருப்பதால், அந்த அணையிலிருந்து பிரியும் அமராவதி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள ஈரோடு, கரூர் மாவட்ட மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

காவிரி

இந்தச் சூழலில், நம்மிடம் பேசிய காவிரிப் பாதுகாப்பு நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் சமூக ஆர்வலர் விஜயன், ``கரூர் மாவட்டத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த ஆண்டில் கட்டுக்கடங்காத அளவுக்கு மணல் கொள்ளை நடந்துள்ளது. கடம்பன் குறிச்சி, மாயனூர் பகுதிகளில் மணல்குவாரி நடத்த அரசு அனுமதி கொடுத்திருந்தாலும், ஆளுங்கட்சியைச் சேர்ந்த பிரமுகர்கள், தோட்டக்குறிச்சி, நெரூர், வாங்கல், தவுட்டுப்பாளையம் எனத் திருச்சி மாவட்ட எல்லைவரை அறுபது கிலோ மீட்டர் தொலைவுக்குக் களிமண் வெளியே தெரியும் அளவுக்கு ஆற்று மணலைச் சுரண்டி எடுத்துவிட்டார்கள். இதேபோல காவிரியின் மற்றொரு கரையான நாமக்கல் மாவட்டத்திலும் வேலூர் தொடங்கி வெண்கரை, அனிச்சம்பாளையம், பாலப்பட்டி எனப் பல கிலோ மீட்டருக்கு சுமார் இருபதடி ஆழம் வரை மணலை அள்ளி விட்டனர். பல இடங்களில் ஆற்றின் இருகரை ஓரங்களிலும் இருபதடிக்கு மரணப்பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.

எச்சரிக்கும் சமூக ஆர்வலர்கள்

காவிரியில் தண்ணீர் வரும்போது, அந்த இடங்களில் யாராவது இறங்கினால், அங்கு ஏற்படும் சுழலில் உள்ளே இழுத்துச் செல்ல நேரிடும். இதனால், இந்தப் பகுதிகளில் குளிப்பவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு. மேலும், மாயனூர் அணைப் பகுதியில் மக்கள் குளிப்பதற்கும் தடை விதிக்க வேண்டும். இதுபோன்று, காவிரியில் பல இடங்களில் சிற்றோடை போன்று சிறிய அளவில் தண்ணீர் தேங்கிக் காணப்படும். அந்தப் பகுதிகளில் யாராவது சிக்கிக் கொண்டால் அவர்களை மீட்பது மிகவும் கடினம். இதுபோன்ற குறிப்பிட்ட சில இடங்களில் சிறுவர்கள், இளைஞர்கள் என யாரும் குளிக்க வேண்டாம் என்று தடை அறிவிப்புப் பலகை வைக்கலாம்.

கரூர் மாவட்ட நிர்வாகத்தைப் பொறுத்தவரை, காவிரி ஆற்றுப் படுகையில் நடந்த கட்டுக்கடங்காத மணல் கொள்ளையைத் தடுக்கத் கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன்தவறிவிட்டது. அப்பாவி உயிர்கள், காவிரி ஆற்றில் குளிக்கச் சென்று பலியாகாமல் தடுப்பதற்கான நடவடிக்கையையாவது எடுக்க வேண்டும். இல்லையென்றால், காவிரியில் தண்ணீர் வரும்போது, சுழல் எந்தப் பகுதியில் உள்ளது என்று தெரியாமல், அவற்றில் சிக்கி ஏற்படும் உயிர் இழப்புகளை தடுத்து நிறுத்த முடியாது" என்றார்.

இதுபற்றி கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகனிடம் பேசினோம். ``காவிரியில் அளவுக்கு அதிகமான தண்ணீர் வர வாய்ப்புள்ளது. இதனால், காவிரிக் கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு, சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் மூலமாக வெள்ள அபாய எச்சரிக்கை விடச் சொல்லியிருக்கிறோம். அதைத் தொடர்ந்து, காவிரியில் மரணப் பள்ளங்கள் இருக்கும் இடங்களை கண்டறியச் சொல்லி, அந்த இடங்களில் மக்கள் குளிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தும் எச்சரிக்கையை மேற்கொள்ளச் சொல்லியிருக்கிறோம். காவிரியில் தண்ணீர்வரத்து முற்றிலுமாகக் குறையும்வரை, இந்த முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புஉணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்த முறை காவிரியில் உயிர்ச்சேதங்கள் ஏற்படாமல் தடுக்கப்படும்" என்றார் உறுதியான குரலில்.


டிரெண்டிங் @ விகடன்