வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (18/07/2018)

கடைசி தொடர்பு:17:30 (18/07/2018)

`இவ்வளவு பணம், நகை எப்படி வந்தது?’ ஐ.டி ரெய்டு குறித்து இயக்குநர் கெளதமன்

``ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் இருவரும் ஊழல் கறைபடிந்துள்ளவர்கள். தங்களது பதவியை ராஜினாமா வேண்டும்'' என்று இயக்குநர் கெளதமன் கூறினார்.

இயக்குநர் கெளதமன்

திரைப்பட இயக்குநர் கெளதமன் மீது ஜல்லிக்கட்டு, ஐ.பி.எல், ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டம், நீட் அனிதா இறுதிச் சடங்கின்போது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டது உள்ளிட்ட 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வழக்குகளில் கெளதமனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம், அரியலூர் காவல் நிலையத்தில் காலை மற்றும் மாலை என இருவேளையிலும் மறுஉத்தரவு வரும் வரை கையெழுத்துப் போட வேண்டும் என உத்தரவிட்டது.

அதன்பேரில் இயக்குநர் கெளதமன் இன்று அரியலூர் காவல் நிலையத்துக்கு வந்து கையெழுத்து போட்டுவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், ``தமிழக முதல்வர் ஈ.பி.எஸ் மற்றும் துணை முதல்வர் ஓ.பி.எஸ் ஆகிய இருவரும் சொல்ல முடியாத அளவுக்கு ஊழல்கள் செய்து சட்டத்தின் பிடியில் மாட்டிஉள்ளனர். முதல்வர் ஈ.பி.எஸ் உறவினர் என்று சொல்லப்படுகின்ற நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் வீட்டில் ஐ.டி ரெய்டில் பெருமளவில் ரொக்கப்பணம் மற்றும் கிலோ கணக்கில் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. இவ்வளவு பணமும் நகையும் எப்படி ஒரு இடத்தில் இருக்க முடியும். முதல்வரின் உறவினர் எனச் சொல்லப்படும் பட்சத்தில் இக்குற்றங்களுக்கு யார் பொறுப்பேற்பது. மேலும், துணை முதல்வர் பன்னீர்செல்வம் மீதும் ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றமே ஏன் சி.பி.ஐ விசாரணை வைக்கக்கூடாது எனக் கேள்வி எழுப்பியுள்ளது.

எனவே, ஊழல் கறை படிந்துள்ள இருவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு சட்டத்தின் முன் நின்று இந்த ஊழலில் சம்பந்தப்பட்டவர்களா இல்லையா என நிரூபிக்க வேண்டிய இடத்தில் இருக்கிறீர்கள். எங்கள் மண்ணை ஆளுகின்ற தகுதியை இழந்துவிட்டீர்கள். சட்டத்தையும் நீதியையும் காப்பாற்ற வேண்டும். தற்போது நெடுஞ்சாலையில்தான் இந்த ஊழல் நடந்துள்ளதாகக் கூறுகிறார்கள். இந்நிலையில் 8 வழிச்சாலைப் பணி தொடங்கினால் இந்தப் பணி யாரிடம் போகும். யாருக்குச் செல்வம் கொழிக்க யார் பாதிப்படைவது. உயிர்வாழ உணவுப்பொருள்களை உற்பத்தி செய்யக்கூடிய விவசாயிகளைப் பாதிக்கக்கூடிய திட்டங்களைக் கைவிட வேண்டும்.

அதிகாரத்தில் இருப்பவர்கள் மக்களுக்குப் போராடும் போராளிகள் மீது பொய் வழக்குப் போட்டால் போராட்டங்களை அடக்கி விடலாம் என எண்ணுகிறார்கள். இவற்றையெல்லாம் உள்வாங்கிக் கொண்டு மாணவ சமுதாயமும், இளைஞர் சமுதாயமும் எரிமலையாக எரிந்துகொண்டிருக்கிறார்கள். பொய் வழக்குகளைக் கண்டு அஞ்சப்போவதில்லை. ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைப்போல ஆயிரம் மடங்கு போராட்டம் வெடிக்கும்" எனக் கொந்தளித்தார்.