`நியூட்ரினோ திட்டத்தால் முல்லைப் பெரியாறு, வைகை அணைகளுக்குப் பாதிப்பில்லை!’ - மத்திய அமைச்சர் தகவல் | Mullai periyar, vaigai Dams will not be affected of Neutrino Project, Minister Inform Parliament

வெளியிடப்பட்ட நேரம்: 16:44 (18/07/2018)

கடைசி தொடர்பு:16:44 (18/07/2018)

`நியூட்ரினோ திட்டத்தால் முல்லைப் பெரியாறு, வைகை அணைகளுக்குப் பாதிப்பில்லை!’ - மத்திய அமைச்சர் தகவல்

``நியூட்ரினோ திட்டத்தால் முல்லைப்பெரியாறு மற்றும் வைகை அணைகளுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை'' என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

முல்லைப்பெரியாறு

தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கப்படவுள்ளது. மத்திய சுற்றுச்சுழல் துறை இதற்கான அனுமதியை சமீபத்தில் வழங்கியது. இந்நிலையில், நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் பணிகளின்போது அப்பகுதிகளில் உள்ள அணைகளுக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமா, இந்தப்பணிகள் எந்தக்கட்டத்தில் உள்ளது என்பது தொடர்பாக 5 கேள்விகள் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

இதற்கு மத்திய அமைச்சர் ஜிதேந்தர் சிங் எழுத்துபூர்வமாக அளித்துள்ள விளக்கத்தில், ``நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கியுள்ளது. தற்போது, அடுத்தகட்டமாக மத்திய வன உயிரின வாரியம் மற்றும் தமிழக சுற்றுச்சூழல் அனுமதிக்காக காத்திருக்கிறோம். சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு சுரங்கம் மற்றும் ஆய்வகம் அமைக்கும் பணிக்கு 3 வருடங்கள் ஆகும் என்றும் சுமார் 2.30 லட்சம் கியூபிக் மீட்டர் அளவுக்குப் பாறைகள் அகற்றப்படும். இந்தப்பணிகளின்போது 200 மீட்டர் தொலைவில் அனுமதிக்கப்பட்ட அளவான 1 நொடிக்கு 1 மி.மீ அளவுக்கு குறைவாக அதிர்வுகள் இருக்கும். இந்த அதிர்வுகளால் அருகில் உள்ள கிராமங்களில் பாதிப்பு ஏற்படாது. இதனால் முல்லைப்பெரியாறு மற்றும் வைகை அணைகளுக்குப் பாதிப்பு இருக்காது. இந்த அணைகள் ஆய்வகம் அமைக்கும் இடத்திலிருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது” என தெரிவித்துள்ளார்.