வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (18/07/2018)

கடைசி தொடர்பு:18:40 (18/07/2018)

`செம்பருத்தி' சீரியலால் மனஉளைச்சல்..! - கமிஷனரிடம் புகார் அளித்த திருப்பூர் வழக்கறிஞர்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் `செம்பருத்தி' சீரியல் தொடரில், இந்துக் கடவுள்களான `ராமன் - சீதையை' அவமதிக்கும் வகையில் காட்சிகள் வைக்கப்பட்டதாகவும், மக்களின் மனதைப் புண்படுத்தும் அந்தக் காட்சியை உருவாக்கியவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் திருப்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஈஸ்வரமூர்த்தி என்பவர் திருப்பூர் மாநகரக் காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

வழக்கறிஞர் ஈஸ்வரமூர்த்தி

காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்துவிட்டு வந்த வழக்கறிஞர் ஈஸ்வரமூர்த்தி கூறுகையில், ``கடந்த சனிக்கிழமை விடுமுறை என்பதால் நான் வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன். இரவு 9 மணி இருக்கும் ஜீ தமிழ் என்ற சேனலில் `செம்பருத்தி' சீரியல் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது. அப்போது அதில் நான் கண்ட காட்சி இப்போதுவரை என் மனதைவிட்டு நீங்காமல் என்னை துயரத்தில் ஆழ்த்திவருகிறது. அதாவது அந்த சீரியலின் குறிப்பிட்ட காட்சியில், வீட்டிலிருக்கும் கதாநாயகன் தன் சித்தியிடம், ராமனும் - சீதையும் ஜோடியாக இருக்கும் ஒரு சிலையைக் காண்பித்து, நானும் என் காதலியும் அந்த கடவுள்களைப் போலவே இருக்கிறோம் என்று வர்ணித்தார். உடனே அதைக்கேட்டு கோபமடைந்த சித்தி, அந்தச் சிலையை தூக்கி கீழே போட்டு உடைத்துவிட்டார். 

அதை டி.வி-யில் பார்த்துக்கொண்டிருந்த நான் திடுக்கிட்டுப் போனேன். என் மனம் மிகவும் வேதனையடைந்தது. உடனே என் நண்பர்களுக்கு செல்போனில் அழைத்து தகவலைச் சொல்லி என் வேதனையைப் பகிர்ந்துகொண்டேன். இருப்பினும் அந்தக் காட்சியானது தொடர்ந்து 2 நாள்களாக என் மனதை உறுத்திக்கொண்டே இருந்தது. எனவேதான் என்னுடைய நண்பர்களான வசந்த் மற்றும் இந்து வழக்கறிஞர் முன்னணி கோட்டச் செயலாளர் பிரபு ஆகியோருடன் நேரில் சென்று கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துவிட்டு வந்திருக்கிறேன். தேசம் முழுவதும் வணங்கப்படும் இந்துக் கடவுளை அவமரியாதை செய்யும் விதமாகவும், இந்துக்களின் மனதைப் புண்படுத்தும்படியும் அமைந்திருந்த அந்தக் காட்சியைப் படமாக்கியது கிரிமினல் குற்றமாகும். 

கோடிக்கணக்கான மக்களின் இதயத்தை ரணமாக்கும் முயற்சியாகவே அந்தக் காட்சியை உருவாக்கியிருக்கிறார்கள். இதுபோன்ற காட்சிகளைப் பார்க்கும்போது, பொதுமக்களிடையே ஒருவித அச்ச உணர்வு மேலோங்கும். அதன்மூலம் மனஉளைச்சலும் ஏற்படும். எனவே, அந்த தொலைக்காட்சித் தொடரை தயாரித்தவரையும், இயக்கியவரையும், அதில் நடித்த நடிகர்கள்மீதும், அந்த தொலைக்காட்சி நிறுவனத்தின்மீதும் குற்ற வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே என் விருப்பம். அப்படிச் செய்தால்தான் இனி வரும் காலங்களில் இதுபோன்ற தவறுகள் நடக்காது. சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதால், நிச்சயமாக நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என காவல்துறை கமிஷனரும் கூறியிருக்கிறார்" எனத் தெரிவித்துள்ளார்.