`நான்தான் இன்ஸ்பெக்டர்' - பெண்ணுடன் காரிலிருந்த டிரைவரை கலங்கடித்த எலெக்ட்ரிசியன் | Electrician arrested in threatning women

வெளியிடப்பட்ட நேரம்: 17:28 (18/07/2018)

கடைசி தொடர்பு:17:35 (18/07/2018)

`நான்தான் இன்ஸ்பெக்டர்' - பெண்ணுடன் காரிலிருந்த டிரைவரை கலங்கடித்த எலெக்ட்ரிசியன்

இன்ஸ்பெக்டர் என்று கூறி மிரட்டிய எலெக்ட்டீரிசியன்

சென்னை அண்ணாசாலை மின்வாரிய அலுவலகம் அருகே காரில் பெண்ணுடன் இருந்த டிரைவரை போலீஸ் இன்ஸ்பெக்டர் என்று மிரட்டிய எலெக்ட்ரிசியனை போலீஸார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அண்ணாசாலை மின்வாரிய அலுவலகம் பின்புறத்தில் கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அந்தக் காரில் பெண் ஒருவரும், டிரைவரும் அமர்ந்திருந்தனர். அப்போது, பைக்கில் வந்த ஒருவர், காரின் அருகே நிறுத்தினார். `நான்தான் இன்ஸ்பெக்டர், ஏன் இங்கு காரை நிறுத்தியுள்ளாய். டிரைவிங் லைசென்ஸ், ஆர்.சி.புக், இன்ஷூரன்ஸ் எல்லாம் எடு' என்று மிரட்டும் தொனியில் பைக்கில் வந்தவர் கேட்டுள்ளார். உடனே, காரில் இருந்த பெண், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போனில் தகவல் கொடுத்தார். உடனே பைக்கில் வந்தவர், அங்கிருந்து தப்பி ஓடினார். 

காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து எழும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேட்டுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே இன்ஸ்பெக்டர் சேட்டு மற்றும் போலீஸார், பைக்கில் வந்த நபரை விரட்டினர். ரோந்து போலீஸாரும் அவரைத் தேடினர். எத்திராஜ் பஸ் நிலையம் அருகே அந்த நபரை போலீஸார் மடக்கிப்பிடித்தனர். பிறகு அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில் இன்ஸ்பெக்டர் என்று மிரட்டியது ராயபுரத்தைச் சேர்ந்த நிஜாம் என்று தெரியவந்தது. இவர்,எலெக்ட்ரிசியன் வேலை பார்த்துவருகிறார். காரிலிருந்த பெண்ணிடம் ஆயிரம் ரூபாய் கொடுத்தால் விட்டுவிடுகிறேன் என்ற நிஜாம் கூறியுள்ளார். இதனால், அவரை போலீஸார் கைதுசெய்தனர்.