வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (18/07/2018)

கடைசி தொடர்பு:19:00 (18/07/2018)

குமரியில் வளைந்த மேம்பாலத்தின் பீம் - பீதியில் மக்கள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தின் பீம், வளைந்த நிலையில் காணப்பட்ட சம்பவம் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேம்பாலம்

கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பார்வதிபுரம் மற்றும் மார்த்தாண்டத்தில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. தமிழகத்தில் முதன்முறையாக இரும்பால் இந்த மேம்பாலங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்காகப் பூமியில் பெரிய துளை போடப்பட்டு கான்கிரீட் கலவையால் பவுண்டேசன் போடப்பட்டது. மேம்பாலத்துக்கான பில்லர் மற்றும் பீம்கள் என அனைத்தும் இரும்பால் அமைக்கப்பட்டு வருகின்றன. கொல்கத்தாவில் இரும்புப் பாலம் விழுந்துவிட்டதைச் சுட்டிக்காட்டிய சிலர் மேம்பாலத்துக்கு எதிரான கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த நிலையில் பார்வதிபுரம் மேம்பாலப் பணிகள் நடக்கும்போது இரண்டு தூண்களுக்கு இடையே அமைக்கப்படும் இணைப்பு பீம் ஒன்று வளைந்திருக்கிறது. பீம் வளைந்து நிற்பதுபோன்ற புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. மேம்பாலம் அமைக்கும்போதே இரும்பு பீம் வளைகிறது என்றால் வாகனம் செல்லும்போது பலமாக இருக்குமா எனச் சந்தேகத்தையும் கிளப்பினர்.

பீம்

இதுகுறித்து மேம்பாலப் பணியைக் கவனித்துவரும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவரிடம் பேசினோம், "மேம்பால பீம் கிரேன் மூலம் பொருத்தும் பணி நடந்துகொண்டிருந்தது. அப்போது பீம் ஒருப்பக்கம் பொருத்தப்பட்டும் மறுபக்கம் பொருத்தப்படாமலும் இருந்தது. இதைக் கவனிக்காமல் கிரேன் ஆப்ரேட்டர் பீம் மீதிருந்த பிடியைத் தளர்த்திவிட்டார். இதையடுத்தே பீம் ஒரு பக்கமாகச் சாய்ந்து வளைந்தது. பிறகு, அந்த பீம் சரிசெய்யப்பட்டுவிட்டது. பீம் முழுவதும் பொருத்திவிட்டால் பலமாக இருக்கும். நாங்கள் இந்தப் பணியைத் தொடங்குவதற்கு முன்பு கொல்கத்தா பாலப்பணியை முழுமையாக ஆய்வுசெய்துவிட்டுதான் வந்தோம். மேம்பாலப் பணிகள் முடிந்த பிறகு, அதில் டன் கணக்கில் எடைகளை வைத்து பலத்தை நிரூபித்துவிட்டே திறப்போம். இதனால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை" என்றார்.