வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (18/07/2018)

கடைசி தொடர்பு:20:00 (18/07/2018)

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நாக் கமிட்டி 3 நாள் ஆய்வு!

நெல்லை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தேசிய தர நிர்ணயக்குழு மூன்று நாள் ஆய்வு நடத்த இருப்பதாகத் துணைவேந்தர் பாஸ்கர் தெரிவித்தார். அதற்காகப் பல்கலைக்கழகம் சார்பாக உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார். 

பல்கலைக்கழகம்

நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட மாணவர்களின் வசதிக்காக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்தப் பல்கலைக்கழகம் தற்போது தரக்கட்டுப்பாடு நிலையில் பி என்ற வகையில் உள்ளது. இந்த நிலையில் பல்கலைக்கழகத்தின் தரத்தை ஆய்வு செய்ய நாக் கமிட்டி நாளை நெல்லை வருகிறது. இந்தக் கமிட்டியினர் நாளை முதல் 3 நாள்கள் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். 

பல்கலைக்கழகத்தின் உள்கட்டமைப்பு வசதிகள், விளையாட்டு மைதான வசதி, நூலகம், ஆசிரியர்களின் திறமை, மாணவர்களின் கற்கும் திறன், சர்வதேச தரத்திலான பயிற்சிகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்ய உள்ளது. தரமான ஆராய்ச்சி, ஆய்வுக் கட்டுரைகள் சர்வதேச பத்திரிகையில் வெளியீடு செய்வது உள்ளிட்டவை குறித்தும் மதிப்பீடு செய்யப்பட்டு அதன் அடிப்படையில் தர நிர்ணயம் செய்யப்படும்.

இது குறித்து பேசிய பல்கலைக்கழகத் துணைவேந்தர் பாஸ்கர், ``பல்கலைக்கழகத்தின் உள்கட்டமைப்பு வசதிகள் சிறப்பான வகையில் செய்து முடிக்கப்பட்டுள்ளன. அதனால், நாக் கமிட்டி ஆய்வு முடிவில் A++ தரச்சான்று கிடைக்கும் என நம்புகிறோம். அந்த நிலையை எட்டினால் பல்கலைக்கழகத்துக்கு மட்டும் அல்லாமல், இதன் கீழ் செயல்படும் அனைத்துக் கல்லூரிகளும் பயனடையும். அதோடு, மாணவர்களின் வேலைவாய்ப்புக்கும் உதவிகரமாக இருக்கும். 

இந்த ஆண்டு கலைக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை சிறப்பாக உள்ளது. அதனால் கல்லூரிகளில் சீட் எண்ணிக்கையை அதிகரிக்க தொடர்ந்து கோரிக்கைகள் வந்தன. அதைச் சிண்டிகேட் கூட்டத்தில் முன்வைத்தபோது, அரசு கல்லூரிகளுக்கு 20 சதவிகித இடங்களை உயர்த்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கு 15 சதவிகிதமும் சுயநிதிக் கல்லூரிகளுக்கு 10 சதவிகிதம் இடங்களையும் கூடுதலாகச் சேர்த்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது’’ என்றார்.