`பெண்கள் மீதான வன்முறைகளில் 80 சதவிகிதம் தெரிந்தவர்களால் நிகழ்த்தப்படுகிறது!’ - எவிடென்ஸ் கதிர் வேதனை

சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருந்த 7-ம் வகுப்பு மாற்றுத்திறனாளி மாணவி பாலியல் தொல்லை வழக்கில், அக்குடியிருப்பில் பணியாற்றிய காவலாளிகள், லிஃப்ட் ஆபரேட்டர்கள், பிளம்பர் என 17 பேரை போலீஸார் கைதுசெய்துள்ளனர். இந்த விவகாரத்தில் அடுத்தடுத்து வெளியாகும் தகவல்கள் தமிழகத்தில் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது. குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதாடமாட்டோம் என வழக்கறிஞர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது. மேலும், அந்த 17 பேர் மீது வழக்கறிஞர்கள் தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து குற்றவாளிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

குற்றவாளிகள்

இந்நிலையில், சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரம் குறித்து சமூக ஆர்வலர் எவிடென்ஸ் கதிரிடம் பேசினோம். அதில், ``சிறுமி பல மாத காலம் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டது குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. பாதிக்கப்பட்ட மற்றும் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு தரப்பினரின் குடும்பப் பின்னணி, வர்க்கம், சாதி உள்ளிட்ட சமூகப் பின்னணிகள் விவாதிக்கப்படுகின்றன. இந்த நேரத்தில் இதுபோன்ற விவாதம் தேவையில்லை. குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்கிற ஒற்றை இலக்கு மயமாக கொண்டும் விவாதம் நடைபெறுகிறது. சில பதிவுகள் கோபத்தின் உச்சியில் எழுதப்படுகின்றன. 

மாநகரம், உயர்சாதி, மருத்துவக் கல்லூரி மாணவி, மேட்டுக்குடி, கார்ப்பரேட் வேலை போன்ற நிலைகளில் வன்முறை நடந்தால் தேசமே கொந்தளிப்பதும் கிராமம், தலித், ஏழை, கூலி வேலை போன்ற நிலையில் உள்ள பெண்கள் பாதிக்கப்பட்டால் அமைதியாக இருப்பதும் நம்நாட்டின் இயல்பாக இருக்கிறது என்கிற விமர்சனமும் வருகிறது. இதையெல்லாம் கடந்து நம் கோபத்தின் பயணம் எந்த அளவுக்குச் செல்லும். நம் கோபம் என்பது அந்த நேரத்தில் ஏற்படும் உணர்ச்சி வேகமாக மட்டுமே இருக்கிறதா, நீதியை வென்று கொடுக்கக்கூடிய கடைசி நிலை அளவுக்குச் செல்கிறதா என்கிற கேள்வி எழாமல் இல்லை.

கடந்த 2012-ம் ஆண்டு நிர்பயா பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டபோது இந்தியாவே கொந்தளித்தது. சட்டத்தில் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. பெண்கள் மீதான வன்முறை நடந்த பிறகு 2 மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட 3 மாதத்தில் தீர்ப்பளிக்க வேண்டும் என்றெல்லாம் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. நடவடிக்கை எடுக்கத் தவறுகிற மருத்துவர்கள் மீதும் காவல் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றெல்லாம் சட்டத்தில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

ஆனால், இங்கு எதுவும் நடக்கவில்லை என்பதுதான் உண்மை. வழக்கறிஞர்கள் குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதாட மாட்டோம் என்கிற முடிவு வரவேற்கக்கூடியதுதான். ஆனால், நாம் பாலியல் வன்முறைகளில் ஈடுபடுகிற குற்றவாளிகளுக்கு எத்தனை பேருக்கு வழக்கறிஞர் சங்கம் இணைந்து நீதி வாங்கிக் கொடுத்திருக்கிறது. வாதாடமாட்டோம் என்பது ஒரு உணர்ச்சி ரீதியான முடிவு. ஆனால், பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவாக எங்கள் சங்கத்தினர் ஒன்றிணைந்து வழக்கினை நடத்துவோம் என்று முடிவெடுக்க வேண்டும். ஏன் என்றால் நாட்டில் ஏழை, எளிய குழந்தைகள் ஆயிரக்கணக்கானோர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு வழக்கு நடத்துவதற்கு வசதியில்லாமல் துயரப்பட்டு வருகின்றனர். அங்கெல்லாம் சென்று இந்த வழக்கறிஞர்கள் சங்கத்தினர் உறுதுணையாக இருந்திருந்தால் இதுபோன்ற வன்முறை நடந்திருக்காது. கோபத்தைவிட செயல்தான் தேவைப்படுகிறது.

எவிடென்ஸ் கதிர்ஒரு பெண்ணிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்கிற பயிற்சிதான் இங்கே தேவைப்படுகிறது. அதுமட்டுமல்ல பெண்கள் தனியாக செல்லக்கூடாது, இரவு நேரத்தில் வெளியே செல்லக்கூடாது, 6 மணிக்குள் வீட்டுக்குள் வந்துவிட வேண்டும் என்கிற அறிவுரைகள்தான், இங்கே அதிகமாக கொடுக்கப்படுகிறது. இந்த அறிவுரையை ஆண்களுக்குச் சொல்லலாம். பாதிக்கப்பட்டோருக்கு அறிவுரை வழங்குவது குற்றவாளிகளை கண்டுகொள்ளாமல் இருப்பதும் ஆணாதிக்கம். பெண்கள் மீதான வன்முறைகளில் 80 சதவிகிதம் தெரிந்தவர்களாலும், உறவினர்களாலும் நடத்தப்படுகிறது. குடும்பம்தான் ஒரு பெண்ணுக்குப் பாதுகாப்பு என்று சொல்லி வளர்ப்பது ஏற்புடையதல்ல. வெளி உலகம்தான் ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. வெளி உலகம் என்பது இடத்தை மட்டும் சொல்லவில்லை. பயணம், கற்றுக்கொள்வது, வேலையில் இணைத்துக்கொள்வது போன்ற பல நிலைகளைச் சொல்லலாம்.

கடந்த 2016-ம் ஆண்டு சிவகங்கையைச் சேர்ந்த 14 வயது சிறுமியை காவல்துறை அதிகாரிகள் உட்பட 13 பேர் ஒரு வருடமாக பாலியல் வன்முறையில் ஈடுபட்டு வந்தனர். அந்த வன்முறையில் ஈடுபட்ட இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆனால், குழந்தையின் குடும்பத்தினரை மிரட்டி வங்கியில் ரூ.6 லட்சம் பணம் போட்டு வழக்கை தள்ளுபடி செய்துவிட்டனர். இதில் கொடுமை என்னவென்றால் அந்த இன்ஸ்பெக்டர் மறுபடியும் பணியில் இருக்கிறார்.

காரைக்குடியைச் சேர்ந்த 14 மற்றும் 13 வயது கொண்ட இரண்டு சிறுமிகள் கடந்த வருடம் 6 மாத காலம் அடைத்து வைக்கப்பட்டு 30-க்கும் மேற்பட்ட கும்பலால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டனர். அதன் குற்றவாளிகள் ஜாமீனில் வெளியே வந்துவிட்டனர். அரசு எந்திரங்கள் இதுபோன்ற வன்முறைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பது கிடையாது. பாதிக்கப்பட்டோர் ஏழையா, பணக்காரரா என்று பார்ப்பது இல்லை. குற்றவாளிகள் பலம் பொருந்தியவராக இருந்தால் நடவடிக்கை எடுப்பது கிடையாது. அரசு நிறுவனங்கள் செயலிழந்து போய் நிற்கின்றன" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!