`ஒப்பந்தத்தை மீறுவதா?’ - கூடங்குளம் அணுமின் நிலையப் பணி நியமனங்களுக்கு இடைக்காலத் தடை விதித்த நீதிமன்றம் | Madurai HC bench passed interim stays on kudankulam power plants new employment announcement

வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (18/07/2018)

கடைசி தொடர்பு:20:40 (18/07/2018)

`ஒப்பந்தத்தை மீறுவதா?’ - கூடங்குளம் அணுமின் நிலையப் பணி நியமனங்களுக்கு இடைக்காலத் தடை விதித்த நீதிமன்றம்

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் புதிய பணி நியமனங்களுக்கு இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தர விட்டிருக்கிறது. 

கூடங்குளம் அணுமின் நிலையம்

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதி முன்னாள் தி.மு.க எம்.எல்.ஏ அப்பாவு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், ``நெல்லை மாவட்டத்தில் கூடங்குளம் அணுமின் நிலையம் அமைந்துள்ளது. இந்தக் கூடங்குளம் அணுமின் நிலையம் அமைவதற்கு அப்பகுதி மக்கள் தங்களது நிலங்களை வழங்கினர். அதற்காக நிலம் அளித்த பொதுமக்களுக்கு அணுமின் நிலையத்தில், கல்வித் தகுதியின் அடிப்படையில் சி மற்றும் டி பிரிவில் வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என 12.02.1999-ல் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த அமைதிக் கூட்டத்தில் ஒப்பந்தம் போடப்பட்டது.

இந்நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சி மற்றும் டி பிரிவில் பணிபுரிய ஆட்கள் தேவை என இந்த ஆண்டு ஏப்ரல் 18-ல் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பாணையில் நிலம் அளித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என்று எதுவும் குறிப்பிடவில்லை. நிலம் அளித்தவர்களுக்கு சி மற்றும் டி பிரிவில் வேலை அளிக்கப்படும் என்ற 1999-ம் ஆண்டு ஒப்பந்தப்படி வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்காமல் அந்தப் பிரிவுகளில் வேலையாட்கள் தேவை என ஏப்ரல் 18-ல் வெளியிட்ட அறிவிப்பாணைக்கு இடைகால தடைவிதித்து உத்தரவிட வேண்டும். மேலும், கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு 1999-ம் ஆண்டு ஒப்பந்தப்படி நிலம் அளித்தவர்களுக்கு சி மற்றும் டி பிரிவில் வேலையில் பணியமர்த்த உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் சி.டி.செல்வம் - ஏ.எம்.பஷீர் முகமது முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கூடங்குளம் அணுமின் நிலையத்தில் புதிய பணி நியமனங்களுக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். 
1999-ம் ஆண்டு ஒப்பந்தப்படி அணுமின் நிலையத்துக்கு நிலம் அளித்தவர்கள் தவிர மற்றவர்களை சி மற்றும் டி பிரிவில் பணியமர்த்தத் தடை விதித்ததுடன், இதுகுறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர், கூடங்குளம் அணுமின் நிலைய திட்ட இயக்குநர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர். அவர்கள் பதிலளிக்க இரண்டு வார கால அவகாசம் வழங்கி, வழக்கு விசாரணையை ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


[X] Close

[X] Close