வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (18/07/2018)

கடைசி தொடர்பு:20:14 (18/07/2018)

புதுக்கோட்டைக்கு ஆளுநர் வருகை… ’லண்டன் ரிட்டர்ன்’ ஸ்டாலின் எதிர்க்க வருவாரா?

``இனிவரும் காலங்களில் ஆளுநர் எங்கு ஆய்வு செய்கிறாரோ, அங்கு நானே வந்து கறுப்புக்கொடிக் காட்டிப் போராடுவேன்" என அறிவித்தார் ஸ்டாலின்.

புதுக்கோட்டைக்கு ஆளுநர் வருகை… ’லண்டன் ரிட்டர்ன்’ ஸ்டாலின் எதிர்க்க வருவாரா?

மிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், நாமக்கல் மாவட்டத்தில் ஆய்வுக்குச் சென்றபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க-வினர் நடத்திய போராட்டங்கள் பெரும் பரபரப்பை உண்டாக்கின. இந்த ஆய்வு முடிந்து ஒரு மாதத்துக்குப் பிறகு திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெறவுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக திருச்சிக்கு வரும் வெள்ளிக்கிழமை (20.07.2018) அன்று, ஆளுநர் வரவுள்ளார். ஆளுநரின் திருச்சி வருகை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வியாழக்கிழமை இரவு சென்னையிலிருந்து மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயிலில் புறப்படும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அடுத்தநாள் அதிகாலை திருச்சி வருகிறார். திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆளுநருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. அடுத்து அங்கிருந்து கார் மூலம் புதுக்கோட்டை செல்லும் ஆளுநர், புதுக்கோட்டை விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். அங்கு வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணி முதல் 3.30 மணிவரை பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக்கொள்கிறார். தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட அரசு அதிகாரிகளுடன் ஆளுநர் ஆலோசனை நடத்துகிறார். பின்னர், சித்தன்னவாசல் சென்று, பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றுக்கொள்கிறார். இதைத் தொடர்ந்து காரில் திருச்சி வந்து, சுற்றுலா மாளிகையில் தங்குவதுடன், திருச்சி சங்கம் ஹோட்டலில் நடைபெறும் தனியார் பள்ளி ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக ஆளுநர் கலந்துகொள்கிறார். மறுநாள் சனிக்கிழமை காலை 10 மணியளவில், திருச்சியில் தனியார் மருத்துவமனை சார்பில் நடைபெறும் `உடல் உறுப்பு தானம்’ குறித்த விழிப்பு உணர்வு நிகழ்ச்சியில் ஆளுநர் பங்கேற்கிறார். கார் மூலம் தஞ்சாவூருக்குச் செல்லும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு திருச்சி விமான நிலையம் வந்து, சென்னை திரும்புகிறார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

ஆளுநரின் வருகையை முன்னிட்டு, திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்நிலையில், திருச்சி காவல்துறை டி.ஐ.ஜி லலிதா லட்சுமியை, புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க பொறுப்பாளர்கள் ரகுபதி எம்.எல்.ஏ செல்லப்பாண்டியன் ஆகியோர் ஆளுநருக்கு எதிராகக் கறுப்புக்கொடி காட்டுவதற்கு அனுமதி கோரினர். ஆனால், அவர் அதற்கான அனுமதியை வழங்க முடியாது என்று மறுத்துவிட்டார். தடையை மீறி தி.மு.க-வினர் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குப் போட்டியாகப் புதிய தமிழகம் சார்பில், ஆளுநர் வருகைக்கு ஆதரவு தெரிவித்து கட்சிக் கொடி அசைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், புதுக்கோட்டையில் பரபரப்பு நிலவுகிறது.

ஆளுநர்

இந்நிலையில் லண்டன் சென்றிருந்த தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னை திரும்பியுள்ளார். ஸ்டாலின் வருகைக்கு எதிராக #GoBackStalin எனும் ஹேஷ்டேக்கும் ஆதரவாக #WelcomeStalin என்ற ஹேஷ்டேக்கும் சமூக வலைதளங்களில் 'டிரெண்டிங்' ஆனது. இதனால், 'தி.மு.க.-வில் புதிய உத்தியுடன் அடுத்த நகர்வுகளை ஸ்டாலின் எடுத்து வைப்பார்' என்கின்றனர் கட்சியின் நிர்வாகிகள் சிலர். 

இந்நிலையில், மக்கள் நலத்திட்டங்கள் பற்றிய ஆளுநரின் ஆய்வுப் பணிகள் தொடரும் என்றும், மாநிலத்தின் எந்தப் பகுதியிலும் ஆய்வு செய்ய ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என்றும், ஆளுநரின் பணிகளுக்கு இடையூறு செய்பவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் ஆளுநர் மாளிகை கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்டது. தவிர, ஆளுநரைப் பணி செய்ய விடாமல் தடுப்பவர்களுக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்ற எச்சரிக்கையால் கொதிப்படைந்தார் மு.க. ஸ்டாலின்.

ஸ்டாலின்

அவர், ``ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் 'விளக்கம்' என்ற பெயரில், மிரட்டல் விடுப்பது அரசியல் சட்டத்துக்கு முரணானது. ஆளுநர் கலந்துகொள்ளச் செல்லும் தனிப்பட்ட நிகழ்ச்சிகளிலோ, வேந்தர் என்கிற முறையில் அவர் கலந்துகொள்ளும் பல்கலைக்கழக நிகழ்ச்சிகளிலோ தி.மு.க-வினர் கறுப்புக்கொடி காட்டவில்லை. ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் உரிமையிலும், கடமையிலும் அதிகாரத்திலும் அரசியல் சட்ட வரையறைகளுக்கும், மரபுகளுக்கும் மாறாகத் தலையிட்டு, மாவட்ட அளவில் அரசு அதிகாரிகளைக் கூட்டி, ஆளுநர் நடத்தும் ஆய்வுக்குத்தான் தி.மு.க எதிர்ப்பு தெரிவிக்கிறது. எதிர்ப்பின் அடையாளமாக, அனுமதிக்கப்பட்ட வழக்கத்தின் அடிப்படையில் கறுப்புக்கொடி காட்டுகிறோம். 

மாநில சுயாட்சிக்காகவும் மாநில உரிமைகளைப் பாதுகாக்கவும் போராடிவரும் தி.மு.க, ஆளுநரின் இதுபோன்ற நடவடிக்கைகளை ஒரு போதும் ஏற்றுக்கொள்ளாது. ஆளுநர் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறைத்தண்டனை என்று கூறி, தி.மு.க-வை மிரட்டிப் பார்க்க முயற்சி செய்கிறார்கள். வெற்று மிரட்டல்களுக்கு எல்லாம் அஞ்சி நடுங்கும் இயக்கம் அல்ல தி.மு.க. இனிவரும் காலங்களில் ஆளுநர் எங்கு ஆய்வு செய்கிறாரோ, அங்கு நானே வந்து கறுப்புக்கொடிக் காட்டிப் போராடுவேன்" என அறிவித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்