`வைகோவின் மனுவை ஏற்கக் கூடாது' - பசுமைத் தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை வாதம்

ஸ்டெர்லைட் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் வைகோவை மனுதாரராக சேர்க்கக் கூடாது என ஆலை நிர்வாகம் முறையிட்டுள்ளது. 

வைகோ

ஸ்டெர்லைட் ஆலையை மூடிய தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் அந்நிறுவனம் வழக்கு தொடுத்திருந்தது. இந்த வழக்கின் விசாரணை நீதிபதி ரகுவேந்திர ரத்தோர், நிபுணர் சத்யவான் சிங் அமர்வு முன் நடைபெற்றது. இதில், தமிழக அரசுத் தரப்பில், மூத்த வழக்கறிஞர் வைத்தியநாதனும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பாக மூத்த வழக்கறிஞர் திவிவேதியும் ஆஜரானார்கள். முன்னதாக வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டவுடன், இந்த வழக்கில் தன்னையும் ஒருமனுதாரராக விசாரிக்க வேண்டும் என்று வைகோ தாக்கல் செய்த மனுவை ஏற்கக் கூடாது என்று, ஸ்டெர்லைட் தரப்பு வழக்கறிஞர் அரிமா சுந்தரம் எதிர்ப்புத் தெரிவித்தார். ஆனால், இதே வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மற்ற இருவரின் மனுக்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. எனவே, ‘வைகோ மனுவை மட்டும் ஏன் எதிர்க்கின்றீர்கள்?’ என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 

அதற்குப் பதிலளித்த அரிமா சுந்தரம் `முடிந்து போன பழைய விஷயங்களை எல்லாம் வைகோ கிளறுவார்’ என்றார். அப்போது பேசிய வைகோ, ``ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து 1996-ம் ஆண்டு முதல் போராடி வருகின்றேன். 1997-ல் நான் தொடுத்த வழக்கில்தான் சென்னை உயர் நீதிமன்றம், ஆலையை மூடுவதற்கான தீர்ப்பை 2010-ல் வழங்கியது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் மேல் முறையீடு செய்த அத்தனை அமர்வுகளிலும் நான் பங்கெடுத்திருக்கிறேன். மேலும், தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்திலும் நான் மனுதாரராக இருந்த வழக்கிலும், 2013-ல் விசாரணை நடந்தது. அந்த விசாரணை, டெல்லியில் உள்ள தலைமைத் தீர்ப்பாயத்துக்கு வந்தபோது, அங்கும் நான் வாதங்களை வைத்தேன். 

எனது மனு தலைமை தீர்ப்பாயத்தில் தள்ளுபடியானபின், தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவுடன், எனது மேல் முறையீட்டு மனுவும் தற்போது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு அண்மையில் வழக்குத் தொடுத்தேன். அந்த வழக்கில்தான் தமிழக அரசு ஆலையை மூடுவது அரசாங்கத்தின் முடிவு என்று அறிவித்துள்ளது. எனவே, இந்த விசாரணையில் பங்கேற்க எனக்குத் தகுதியும் உரிமையும் உள்ளது" என்றார். இதன்பிறகும் ஸ்டெர்லைட் வழக்கறிஞர் எதிர்ப்புத் தெரிவித்ததால், ‘உங்கள் எதிர்ப்பை எழுத்துபூர்வமாகத் தாக்கல் செய்யுங்கள்’ என்று கூறிய நீதிபதி, ஜூலை 30-ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தார். இதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, ``ஸ்டெர்லைட் ஆலை குறித்த வழக்கில், எனது ஆணித்தரமான வாதங்களை எதிர்கொள்ள அஞ்சித்தான், ஆலை நிர்வாகம் நீதிமன்றத்தில் எனக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறது" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!