`ரூ.15 லட்சம் கோடி வாராக்கடன் நிலுவையில் இருக்கிறது!’ - வங்கி ஊழியர் சங்கம் தகவல் | Fifteen lakh crore rupees bad loan still pending, informs Bank employees association GS

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (18/07/2018)

கடைசி தொடர்பு:22:00 (18/07/2018)

`ரூ.15 லட்சம் கோடி வாராக்கடன் நிலுவையில் இருக்கிறது!’ - வங்கி ஊழியர் சங்கம் தகவல்

``கடந்த ஆண்டு அனைத்து வங்கிகளும் சேர்த்து  1,50,000 கோடி ரூபாய் லாபம் ஈட்டி உள்ளன. ஆனால், வாராக்கடனுக்கு ஒதுக்கிய தொகை 2,85,000 கோடி ரூபாய். அதன் காரணமாகவே 85,000 கோடி நஷ்டத்தில் வங்கிகள் இயங்குவதாக ஒரு தோற்றத்தை உருவாக்கி உள்ளனர். வங்கிகள் பெரும் முதலாளிக்கு கொடுத்திருப்பதில் 25 சதவிகிதம் வாராக்கடனாக உள்ளது. அதாவது 15,00,000 கோடி ரூபாய் வாராக்கடன் உள்ளது’’ என  வங்கி ஊழியர் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் அருணாச்சலம் தெரிவித்துள்ளார்.

வங்கி ஊழியர் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் அருணாச்சலம்

தஞ்சாவூர் மாவட்டம் வங்கி ஊழியர் சங்கம் சார்பில், வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட 50-ம் ஆண்டு கருத்தரங்கம் தஞ்சாவூரில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட வங்கி ஊழியர் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் அருணாச்சலம் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது, ``49 அண்டுகளுக்கு முன்பு இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது தொழிற்சங்கங்களின் கோரிக்கையை ஏற்று, தனியாரிடம் இருந்த 14 வங்கிகளை தேசியமயமாக்கிய நாள் இன்று. பொதுத்துறை வங்கிகள் வரும் காலத்திலும் பொதுத்துறை வங்கிகளாகவே இருக்க வேண்டும். தனியாரிடம் தாரை வார்க்கக் கூடாது. 

பொதுத்துறை வங்கிகளாக இருந்தால்தான் நாட்டுக்கும், நாட்டு மக்களின் முன்னேற்றத்துக்கும் உறுதுணையாக இருக்கும். விவசாயிகளும் தேவையான கடனைப் பெறுவதற்கான அமைப்பாக இருக்கும். தனியாரிடம் ஒப்படைத்தால், தனிப்பட்டவர்களின் சுய லாபத்துக்காக மட்டுமே பயன்படும் அமைப்பாக வங்கிகள் மாறிவிடும். அந்த அபாயம் நீங்க வேண்டும் என்பதற்காக  இதுபோன்ற முயற்சியில் தொழிற்சங்கங்கள் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள 21 பொதுத்துறை வங்கிகளில் 2 வங்கிகள் மட்டும் லாபத்தை ஈட்டும் வங்கிகள் என்றும், மற்ற வங்கிகள் நஷ்டத்தில் இயங்கும் வங்கிகள் என்ற கருத்தை தெரிவிக்கிறார்கள். ஆனால், அனைத்து வங்கிகளும் லாபத்தில் இயங்கும் வங்கிகளாகத்தான் செயல்படுகின்றன. 

வாராக்கடனுக்கு, லாபத்தில் இருந்து நிதி ஒதுக்குவதன் காரணமாகத்தான் வங்கிகள் லாபத்தை ஈட்டுவதில்லை என்ற நிலைமை உள்ளது. கடந்த ஆண்டு அனைத்து வங்கிகளும் சேர்த்து 1,50,000 கோடி ரூபாய் லாபம் ஈட்டி உள்ளது. ஆனால், வாராக்கடனுக்கு  ஒதுக்கிய தொகை 2,85,000 கோடி ரூபாய். அதன் காரணமாகவே 85,000 கோடி நஷ்டத்தில் வங்கிகள் இயங்குவதாக ஒரு தோற்றத்தை உருவாக்கி உள்ளனர். வங்கிகள் பெரும் முதலாளிக்கு கொடுத்திருப்பதில் 25 சதவிகித கடன் வாராக்கடனாக உள்ளது. அதாவது, 15,00,000 கோடி ரூபாய் வாராக்கடன் உள்ளது. அதற்கு லாபத்தின் பெரும் பகுதியை ஒதுக்குவதன் காரணாக வங்கிகள் நஷ்டத்தில் இயங்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. எனவே, நல்ல சட்ட திருத்தத்தைக் கொண்டுவந்து வாராக்கடன்களுக்குச் சொந்தக்காரர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க சட்ட  வழிமுறைகள் வகுக்க வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன’’ என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க