வெளியிடப்பட்ட நேரம்: 20:56 (18/07/2018)

கடைசி தொடர்பு:21:15 (18/07/2018)

திருப்போரூர் கந்தசாமி கோயில் நிலம் மீட்பு... அம்பலமான தனியார் நிறுவன நிலமோசடி!

கடலில் திருச்செந்தூரிலும் நிலத்தில் திருப்பரங்குன்றத்திலும், விண்ணில் திருப்போரூரிலும் என மூன்று இடத்தில் முருகன் போர் புரிந்ததாக ஆன்மிக வரலாறு உண்டு. தாரகாசூரனை விண்ணில் வதம் செய்த இடம் திருப்போரூர். திருப்போரூர் கந்தசாமி கோயிலுக்குச் சொந்தமாக பலஆயிரம் கோடி மதிப்புள்ள நிலங்கள் இருக்கின்றன. கொள்ளைப் போகும் அபாயத்தில் இருந்த சிலபகுதிகள் தற்போது அதிரடியாக மீட்கப்பட்டுள்ளன.

திருப்போரூர் கந்தசாமி கோயில் நிலம் மீட்பு... அம்பலமான தனியார் நிறுவன நிலமோசடி!

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு கந்தசாமி திருக்கோயில். இந்து அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் இந்தக் கோயிலுக்குச் சொந்தமாகத் திருப்போரூர், சென்னை உள்ளிட்ட பல இடங்களில் சொத்துகள் இருக்கின்றன. திருப்போரூரில் இந்தக் கோயிலுக்குச் சொந்தமான 2.51 ஏக்கர் நிலம் (சர்வே எண் 239/1-ல் உள்ளது) தனியார் நிறுவனம் ஒன்றுக்குப் போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாகப் பட்டா மாற்றம் செய்யப்பட்டிருந்தது. வருவாய்த்துறையின் ‘அ’ பதிவேட்டில் வள்ளி தேவஸ்தானம் (பட்டா எண்-3) எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலத்தைப் போலி ஆவணங்கள் தயாரித்து, தனிநபர் மற்றும் அந்த நிறுவனத்தின் பெயரில் போலியாகப் பட்டா பெற்றுள்ளனர். இந்தப் பட்டா மாற்றம் 1994-ல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கு செங்கல்பட்டு வருவாய்த் துறை அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளனர்.

திருப்போரூர் கந்தசாமி கோயில் நிலம்

திருப்போரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட குறிப்பிட்ட ஒரு பகுதியில் தனிநபரிடமிருந்து நிலங்களை வாங்கியது அந்த நிறுவனம். பழைய மாமல்லபுரம் சாலையிலிருந்து அவர்கள் வாங்கிய பகுதிக்குச் செல்ல பாதை உண்டு. இந்த நிலையில் வேறொரு தனியார் நிறுவனத்துக்கு அந்த இடம் விற்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. புதிதாக அந்த இடத்தை வாங்கிய தனியார் நிறுவனம், அந்த நிலத்தின் மதிப்பை அதிகரிக்கும் பொருட்டு, அந்த நிலத்திலிருந்து கிழக்கு கடற்கரைச் சாலை பகுதிக்கு சாலை அமைக்க முடிவுசெய்தது. இதனால் திருப்போரூர் பகுதியிலிருந்து கிழக்குக் கடற்கரைச் சாலை பகுதியில் உள்ள நெம்மேலி வரை புதிய சாலை அமைக்கத் திட்டமிட்டனர். அப்போது நெம்மேலி பகுதி அருகில் 2.51 ஏக்கர் கோயில் நிலம் வழியாக அந்தச் சாலை அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த நிலம்தான், திருப்போரூர் கோயில் நிலம். அந்த நிலத்துக்குப் போலி ஆவணங்கள் தயாரித்து தனி நபர் பெயரில் பட்டா மாற்றம் செய்தனர். அதன்பிறகு அந்த இடத்தை அந்தத் தனியார் நிறுவனம் வாங்கியது.

போலியாகப் பட்டா மாற்றம் செய்யப்பட்ட அந்த இடத்தின் ‘அ’ பதிவேட்டில் கந்தசுவாமியார் சேர்ந்த வள்ளியம்மன் கோயில் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலமோசடி குறித்து கோயில் நிர்வாகத்துக்கு உடனடியாகத் தெரியவில்லை. இதனால் அந்தத் தனியார் நிறுவனம் உள்ளூர் திட்டக் குழும அங்கீகார அனுமதிக்கு அந்த இடத்தை வழங்கி பொதுவழியாக மாற்றம் செய்து பேரூராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைப்பு செய்தது. ‘அ’ பதிவேட்டில் மாற்றம் செய்தால் மோசடி செய்தது அம்பலமாகும் என்பதால் ‘அ’ பதிவேட்டில் கோயில் பெயரில் உள்ள பெயரில் கோயில் சொத்தாகவே தொடர்ந்து வந்தது.

திருப்போரூர் கந்தசாமி கோயில்

பேரூராட்சி நிர்வாகத்தினரும் இந்து அறநிலையத்துறைக்குச் சொந்தமான அந்த இடத்தில் தனியார் நிறுவனம் சாலை அமைப்பதற்கு அனுமதி கொடுத்தனர். தனியார் நிறுவனம் சாலை அமைக்க முற்படும்போதுதான், கோயில் சொத்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனால் சாலைகள் அமைக்காதவாறு, கோயில் நிர்வாகத்தினர் அப்பகுதியில் பள்ளங்களை ஏற்படுத்தினர். பிறகு அரசு ஆவணங்களைச் சரிபார்த்தபோது, கோயில் நிலம் தனிநபர் பெயரில் முறைகேடாகப் பட்டா மாற்றம் செய்திருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கோயில் நிர்வாகத்தினர், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர். இதுகுறித்து விசாரணை செய்ய மாவட்ட ஆட்சியர் பொன்னையா, வருவாய்த்துறையினருக்கு உத்தரவிட்டார். ஆனால், வருவாய்த்துறையினரோ, தங்களின் குட்டு வெளிப்பட்டுவிடும் என்பதால் அந்த விஷயத்தில் மெத்தனமாகவே செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.

திருப்போரூர் கந்தசாமி கோயில் நிலம்

திருப்போரூர் கந்தசாமி கோயில் செயல் அலுவலர் நற்சோணை, நிலம் தொடர்பான ஆவணங்களை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தார். மேலும், கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை மீட்க மாவட்ட ஆட்சியர் பொன்னையாவிடம் கேட்டுக்கொண்டார். மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், சார் ஆட்சியர் ஆய்வு செய்து அந்த இடம் கோயிலுக்குச் சொந்தமானது என்பதை உறுதி செய்தார். ஆனால், திருப்போரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்த நிலையில் செயல் அலுவலர் நற்சோணை, செங்கல்பட்டு கோட்டாட்சியர் முத்து வடிவேலிடம் தெரிவித்தார். கோட்டாட்சியர் முத்துவடிவேல் விசாரணையில், இந்து அறநிலையத்துறைக்கு தெரிவிக்காமல், நிலம் பட்டா மாற்றம் செய்யப்பட்டது தவறு எனத் தெரியவந்தது. இதனால், ஏற்கெனவே தனிநபர் பெயரில் மாற்றம் செய்யப்பட்ட பட்டாக்களை ரத்து செய்து கோட்டாட்சியர் உத்தரவிட்டார். இதனால் திருப்போரூர் கந்தசாமி கோயிலுக்குச் சொந்தமான அந்த நிலம் மீண்டும் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. மீட்கப்பட்ட அந்த நிலத்தின் மதிப்பு மட்டும் சுமார் 25 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும்.

திருப்போரூரில் விண்ணில் வதம் செய்தவர் முருகப்பெருமான். அப்படிப்பட்ட கடவுளாகிய முருகனின் மண்ணை (நிலத்தை) சூறையாடுவது நியாயமா?

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்