தங்கம் விலை ஐந்து மாதங்களில் இல்லாத வீழ்ச்சி!

அமெரிக்காவிலுள்ள ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியது, ஆடி மாதத்தொடக்கம் காரணமாக திருமண சீசன் ஓய்ந்திருப்பது உள்ளிட்ட காரணங்களால் இந்தியாவில் தங்கம் விலை கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிவடைந்துள்ளது. சென்னையில் இன்று (18.07.2018) 24 காரட் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.23,896 என்றும், ஒரு கிராம் 2,987 ரூபாய் என்ற விலையிலும் விற்பனையாகி வருகிறது. 22 காரட் ஆபரணத் தங்கம், சவரன் ரூ.22,752 என்றும், ஒரு கிராம் ரூ.2,844 என்றும் விற்பனையாகி வருகிறது.

தங்கம்

தங்கத்தின் விலை உயர்வதும் சரிவடைவதும் பெரும்பாலும் சர்வதேசப் பொருளாதாரச்சூழலை ஒட்டியே அமைந்துள்ளது. தங்கத்தின் விலை டாலரில் நிர்ணயிக்கப்படுவதால், அமெரிக்காவின் நிலவரம்தான் பெரிய அளவிலான தாக்கத்தை தங்கத்தின் விலையில் ஏற்படுத்தும். அமெரிக்காவிலுள்ள ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. அதன் எதிரொலியாக அமெரிக்க டாலரின் மதிப்பும் உயர்ந்து வருகிறது. டாலரின் மதிப்பு உயர்ந்ததால், தங்கம் விலை குறையத்தொடங்கியுள்ளது. தங்கத்தின் விலை வீழ்ச்சிக்கு இது ஒரு காரணம். 

தங்கத்தின் விலை சரிவடைவது தெரிந்ததுமே கோல்ட் ஈடிஎஃப் திட்டத்தில் முதலீடு செய்தவர்கள், இழப்பைத் தவிர்ப்பதற்காக பெருமளவில் அத்திட்டத்திலிருந்து வெளியேறத் தொடங்குவார்கள். இதன்காரணமாக ஈடிஎஃப் நிறுவனங்கள் தங்களிடமிருக்கும் தங்கத்தை விற்பனை செய்யத் தொடங்குவதால் அதன் காரணமாகவும் தங்கத்தின் விலை மேலும் குறையத் தொடங்கும். 

சுவாமிநாதன்இத்தகைய சர்வதேசக் காரணிகள் ஒருபுறம் இருந்தாலும், இந்தியாவைப் பொறுத்தவரை ஆடி மாதம் என்பது திருமணம் போன்ற விசேஷங்கள் ஏதும் நடக்காத மாதம். அதுமட்டுமின்றி, இம்மாதத்தில் தங்கம் வாங்குவது உள்ளிட்ட எந்த நற்காரியத்திலும் ஈடுபடமாட்டார்கள். இதன் காரணமாகவும் தங்கத்தின் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில வாரங்களுக்கு இந்நிலை நீடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதுகுறித்து, ஜெம் & ஜூவல்லரி டெக்னாலஜி டிரைனிங் சென்டர் இயக்குநர் க.சுவாமிநாதனிடம் கேட்டபோது, ``தற்போது டாலரின் விலை மிகவும் வலுவாக உள்ளது. அதேபோல அமெரிக்காவின் ஃபெடரல் வங்கியிலும் வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளார்கள். இதன் காரணமாக தங்கத்தின் விலை சரிவடைந்துள்ளது. இந்த விலைவீழ்ச்சி இன்னும் தொடர்ந்து, ரூ.100-150 வரை குறையக்கூடும். அதன்பின்னர், செப்டம்பர் மாதத்தில் தசரா, தீபாவளி எனப் பண்டிகைக்காலத் தொடக்கம் வரவுள்ளதால் தங்கத்தின் தேவை அதிகரிக்கும். எனவே, விலையும் ஏறத்தொடங்கிவிடும்" என்றார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!