வெளியிடப்பட்ட நேரம்: 21:02 (18/07/2018)

கடைசி தொடர்பு:21:37 (18/07/2018)

`ஸ்டாலின் லண்டன் சென்றதால் தமிழகத்தில் மழை பெய்து அணைகள் நிரம்பின!’ - எடப்பாடி பழனிசாமி

வரி செலுத்தாவிட்டால் வருமானவரிச் சோதனை நடப்பது இயல்புதான் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணை நாளை காலை 10 மணிக்கு திறக்கப்படும். சேலம் எட்டு வழிச் சாலைக்காக யாரும் மிரட்டப்படவில்லை. விவசாயிகளிடமிருந்து 85 சதவிகிதம் நிலங்களை அளவிடும் பணிகள் முடிவுற்றுள்ளது. இன்னும் 15 சதவிகித பணிகளே உள்ளது. ஒரு சில நில உரிமையாளர்கள், தங்களது ஆதங்கத்தைத் தெரிவித்துள்ளனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமாக அவர்களது ஒப்புதலோடு நிலங்களைக் கையகப்படுத்தும் நடைபெறும். தமிழக அரசின் டெண்டர்களில் முறைகேடு நடைபெறவில்லை. பல நிறுவனங்கள் ஒப்பந்தம் எடுத்து பல பணிகளைச் செய்கின்றன. அவர்கள் வரி செலுத்தாவிட்டால் சோதனை நடக்கும். ஒப்பந்த சட்ட திட்டத்துக்கு உட்பட்டுதான் டெண்டர்கள் விடப்படுகின்றன” என்றார்.

உறவினர் வீட்டில் சோதனை நடப்பதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு தமிழ்நாடு முழுவதும் உறவினர்கள் உள்ளனர் என்று பதிலளித்தார். தி.மு.க ஆட்சியில் 2008-ல் ஒருவருக்கு 15% கூடுதல் விலையுடன் டெண்டர் விடப்பட்டது. தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் எப்போது, லண்டன் சென்றாரோ அன்று மழை தீவிரமடைந்தது தமிழகத்தின் அனைத்து அணைகளும் நிரம்பியது. ஸ்டாலின் திரும்ப வந்தார்; மழை நின்றுவிட்டது எனப் பேசினார்.