ராமேஸ்வரம் அருகே இலங்கைக்குக் கடத்த முயன்ற 304 கிலோ கஞ்சா பறிமுதல்!

ராமநாதபுரம் மாவட்டம் சீனியப்பா தர்ஹா அருகே மறைத்து வைக்கப்பட்டிருந்த 304 கிலோ கஞ்சாவைக் க்யூ பிரிவு போலீஸார் கைப்பற்றினர். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மண்டபம் அருகே பிடிபட்ட கஞ்சா பார்சல்கள்

ராமநாதபுரம் மாவட்டக் கடலோரப் பகுதிகளிலிருந்து இலங்கைக்கு கஞ்சா, கடல் அட்டை, வலி நிவாரணி மற்றும் போதை மாத்திரைகள் கடத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இதைத் தொடர்ந்து க்யூ பிரிவு, கடலோர பாதுகாப்பு குழுமம் ஆகியவற்றைச் சேர்ந்த போலீஸார் மண்டபம், உச்சிப்புளி உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு மண்டபத்தை அடுத்துள்ள சீனியப்பா தர்ஹா கடற்கரைப் பகுதியில் ரோந்து சென்ற க்யூ பிரிவு போலீஸார் அப்பகுதியில், சந்தேகத்துக்கு இடமாக நின்றுகொண்டிருந்த சிலரைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் இலங்கைக்குக் கஞ்சா கடத்திச் செல்லவிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் மறைத்து வைத்திருந்த 152 கஞ்சா பார்சல்களைக் கைப்பற்றினர். இந்தப் பார்சல்களில் 304 கிலோ கஞ்சா இருந்துள்ளது. இவற்றை பறிமுதல் செய்த க்யூ பிரிவு போலீஸார், இதுதொடர்பாகச் சுந்தரமுடையான் பகுதியைச் சேர்ந்த முருகன், ஜெய்கணேஷ், முத்து ஆகிய 3 பேரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்வர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட ரூ.3 கோடி மதிப்புடைய கஞ்சா பார்சல்களை மண்டபம் கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாரிடம், க்யூ பிரிவு போலீஸார் ஒப்படைத்தனர். இதுதொடர்பாகக் கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!