`சீமானை விடுவியுங்கள்!’ - சேலம் திருமண மண்டபம் முன் குவிந்த ஆதரவாளர்கள் | Tension increase in salem After Seeman Arrest

வெளியிடப்பட்ட நேரம்: 00:30 (19/07/2018)

கடைசி தொடர்பு:00:30 (19/07/2018)

`சீமானை விடுவியுங்கள்!’ - சேலம் திருமண மண்டபம் முன் குவிந்த ஆதரவாளர்கள்

சேலம் மக்களை சந்திப்பதற்காகச் சென்றபோது கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்னும் விடுவிக்கப்படாததால், அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. 

சேலம்

சேலம் டு சென்னை 8 வழி பசுமைச் சாலையால் பாதிக்கப்பட்ட கிராம மக்களைச் சந்திப்பதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன் தொண்டர்களோடு பூலாவரியை அடுத்த கூமாங்காடு பகுதிக்குச் சென்று அங்குள்ள மக்களைச் சந்தித்து பேசிக்கொண்டிருக்கும்போது காவல்துறையினர் அவர்களை சூழ்ந்துகொண்டு  சீமான், யுவராஜ்குமார், தேவி, ஜெகதீசன், ஜானகி, தமிழ்செல்வன், சிவக்குமார், தமிழரசன், மணி, ஆதிதீபக், அழகரசன் ஆகிய 11 பேரை கைது செய்து மல்லூர் வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில் வைத்திருக்கிறார்கள். தற்போது வரை சீமான் உட்பட அவருடை ய தொண்டர்களை விடுவிக்காமல் மண்டபத்திலேயே வைத்திருப்பதால் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டவர்கள் மண்டபத்தின் முன்பு கூடி இருக்கிறார்கள். மல்லூர் காவல்துறை எந்த ஒரு முடிவையும் அறிவிக்காமல் இருப்பதால் நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் ஆவேசம் அடைந்துள்ளார்கள்.

சேலம்

அதில் சிலர் சாலை மறியலில் ஈடுபட முயன்றார்கள். ஆனால், நாம் தமிழர் கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சாலை மறியலில் யாரும் ஈடுபட வேண்டாம் என்று தடுத்து நிறுத்தி இருக்கிறார்கள். மண்டபத்துக்கு முன்பு நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் திரண்டுள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சீமான் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கலாம் என்பதால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலையில் நிலவி வருகிறது.

தங்கதுரை

இதுகுறித்து சேலம் வடக்கு தொகுதி பொறுப்பாளர் தங்கதுரை பேசுகையில், ``ஜனநாயக நாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகப் பேசக்கூட முடியாத நிலையில் ஹிட்லர் ஆட்சியைப் போல தமிழகத்தில் நடந்து வருகிறது. எடப்பாடி பழனிசாமி உருவத்தில் பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாட்டில் சர்வாதிகார ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். சீமான் என்ன தீவிரவாதியா. மக்களிடம் பேசுவதற்கு கூட உரிமை இல்லை என்றால், இது என்ன ஜனநாயக நாடு. காவல்துறை சட்டத்தின்படி செயல்பட்டு சீமானை விடுவிக்க வேண்டும். ஆட்சியாளர்களின் கட்டளைக்காகக் காத்திருக்கக் கூடாது. காவல்துறை அவரை விடுவிக்காமல் ஆளுங்கட்சியின் உத்தரவுக்காக காத்திருப்பது வெட்கக் கேடானது. சீமானை உடனே விடுதலை செய்ய வேண்டும். இல்லையென்றால் 8 வழிச் சாலையால் பாதிக்கப்பட்ட மக்களை ஒன்று திரட்டி மிகப் பெரிய போராட்டம் நடத்துவோம்'' என்றார்.