சந்தன மரம் வெட்டிக் கடத்திய கும்பல் கைது! | Seven people arrested for slaughtering sandalwood in temple

வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (18/07/2018)

கடைசி தொடர்பு:23:30 (18/07/2018)

சந்தன மரம் வெட்டிக் கடத்திய கும்பல் கைது!

தேனி மாவட்டத்தில் கோயிலில் இருந்து சந்தனமரத்தை வெட்டிக் கடத்திய கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சந்தனமரம்


தேனி மாவட்டம் கம்பத்தில் பிரசித்திபெற்ற கம்பராயப் பெருமாள் கோயில் உள்ளது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கோயிலில் இருந்த சந்தன மரம் ஒன்று வெட்டிக் கடத்தப்பட்டது. சந்தனமரம் வெட்டப்பட்ட சம்பவம் பொதுமக்களிடம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த கம்பம் தெற்கு காவல்துறையினர் குற்றவாளிகளைத் தேடிவந்தனர். தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. இந்நிலையில், கூடலூர் அண்ணாநகரைச் சேர்ந்த பசுபதி (22), கம்பம் நாட்டுக்கல் தெருவைச் சேர்ந்த செல்வம் (40) ஆகியோர் நேற்று இரவு தங்களது இருசக்கர வாகனத்தில் சாக்கு மூட்டையுடன் கூடலூரிலிருந்து, கம்பத்துக்கு வந்தனர்.

அப்பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீஸார் இவர்களது வாகனத்தை நிறுத்தினர். சந்தேகப்படும்படி இருவரும் நடந்துகொண்டதை அடுத்து  சாக்கு மூட்டையைச் சோதனை செய்தனர். அப்போது அதில் சந்தனக் கட்டைகள் இருந்தன. விசாரணையில் கம்பராயப் பெருமாள் கோயிலில் இருந்த சந்தன மரத்தை வெட்டிச் சென்றது இவர்கள்தான் எனத் தெரியவந்தது. மேலும், கூடலூரைச் சேர்ந்த விஜி (35), நல்லமாயன் (55), கவாஸ்கர் (20), சம்பா என்ற முருகன் (47), இவரின் மகன் அருண் (20) ஆகிய 5 பேரும் சந்தனமரம் வெட்ட உடந்தையாக இருந்தது விசாரணையில் தெரியவந்தது. பின்னர் அவர்களும் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள போதுராஜா, தினேஷ் ஆகியோரை போலீஸார் தேடி வருகிறார்கள். இவர்களிடமிருந்து சந்தனக்கட்டை, கோடாரி, ரம்பம் மற்றும் 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.