கை,கால்களை இரும்புக் கம்பியால் கட்டி எரித்துக்கொலை - சென்னையில் நடந்த கொடூரம்!

சென்னை ஆலந்தூரில், வீட்டிலிருந்த ஒருவரை கை, கால்களை இரும்புக் கம்பியால் கட்டி, பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எரித்துக்கொலை

சென்னை ஆலந்தூர் எம்.கே.என் சாலை 2-வது தெருவில், தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவருபவர் முகமது சுல்தான் (வயது40). மும்பையிலிருந்து எலெக்ட்ரானிக் சாதனங்களை வாங்கி, சென்னை ரிச்சி தெருவில் விற்பனைசெய்துவருகிறார். இந்நிலையில், நேற்றிரவு அவரது வீட்டிலிருந்து ஏதோ ஒன்று எரிவதுபோல குபுகுபுவென புகை வந்துள்ளது. அருகில் சென்று பார்த்தபோது தீ பற்றி எரிவது தெரியவந்தது. இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர், முகமது சுல்தான் வீட்டில் இல்லை என்று நினைத்து, தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றுள்ளனர். தீயைக் கட்டுப்படுத்த முடியாததால், தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர், ஜன்னலின் வழியாகத் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். பின்னர் தகவலறிந்து வந்த பரங்கிமலை போலீஸார், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, மனித உடல் ஒன்று, கரிக்கட்டையாகக் கிடந்தது.  அதைக் கண்ட போலீஸார் அதிர்ச்சியடைந்தனர்.

 கை,கால்கள் கம்பியால் கட்டப்பட்டு, பெட்ரோல் ஊற்றி கொடூரமான முறையில் அந்த உடல் எரிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, அந்த நபர் யார் என்று விசாரித்தபோது, அவர் பெயர் முகமது சுல்தான் என்பதும், மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து அவரை உயிரோடு, கொடூரமான முறையில் எரித்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.  மேலும், தீ வைத்து உடலை எரித்துவிட்டு, குற்றவாளிகள் வீட்டை பூட்டி விட்டுச் சென்றுள்ளனர். இது தொடர்பாக, அக்கம் பக்கத்திலுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளைச் சேகரித்து, காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த இச்சம்பவம், அப்பகுதிவாசிகளை அச்சமடையச்செய்துள்ளது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!