தள்ளிப்போகும் பொறியியல் கலந்தாய்வு - கூடுதல் விவரம் கேட்கும் உச்ச நீதிமன்றம்! | Tamil Nadu Engineering Counselling postponed - Supreme Court asked more documents

வெளியிடப்பட்ட நேரம்: 08:00 (19/07/2018)

கடைசி தொடர்பு:08:00 (19/07/2018)

தள்ளிப்போகும் பொறியியல் கலந்தாய்வு - கூடுதல் விவரம் கேட்கும் உச்ச நீதிமன்றம்!

ஒவ்வோர் ஆண்டும் ஜூலை மாதம் இறுதிக்குள் இன்ஜினீயரிங் கவுன்சலிங்கை முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது உச்ச நீதிமன்றம். ஆனால், இந்த ஆண்டு மருத்துவக் கலந்தாய்வு தள்ளிப்போனதால், இன்ஜினீயரிங் படிப்புக்கான கலந்தாய்வை ஜூலை-31 ம் தேதிக்குள் முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பொறியியல் கலந்தாய்வை நடத்தி முடிக்க, கூடுதல் அவகாசம் கேட்ட அண்ணா பல்கலைக்கழத்திடம், கூடுதல் விவரம் கேட்டிருக்கிறது உச்ச நீதிமன்றம். 

பொறியியல் கலந்தாய்வு

உச்ச நீதிமன்றத்தில், இன்ஜினீயரிங் கலந்தாய்வை நடத்தி முடிக்க கூடுதல் அவகாசம் கோரி அண்ணா பல்கலைக்கழகம் மனுத்தாக்கல் செய்திருந்தது. இந்த மனு மீதான விசாரணையில், கூடுதல் ஆவணங்களைத் தாக்கல்செய்யுமாறு அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம். இதனால், இன்ஜினீயரிங் கவுன்சலிங் நடக்க மேலும் காலதாமதாக வாய்ப்புள்ளது என தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு, நீட் தேர்வின் முடிவு வெளியிடுவதில் ஏற்பட்ட தாமதத்தினால் பொறியியல் கலந்தாய்வு ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரம் வரை நடத்தப்பட்டது. இந்த ஆண்டு மருத்துவக் கலந்தாய்வுக்குப் பின்பு ஜூலை இரண்டாவது வாரத்தில் இன்ஜினீயரிங் கவுன்சலிங் நடக்கும் என்று எதிர்பார்த்து, பெற்றோர்களும் மாணவர்களும் காத்திருந்தனர். ஆனால், ‘நீட்’ தேர்வில் தமிழ் கேள்வித்தாளில் பிழைகளுடன் கேள்விகள் கேட்கப்பட்ட விவகாரத்தில், தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கூடுதல் மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டது. இதனால், நிர்வாக இடங்களுக்கான மருத்துவக் கலந்தாய்வு நிறுத்திவைக்கப்பட்டது. இதனால், இன்ஜினீயரிங் கலந்தாய்வை நடத்த ஆகஸ்டு 31-ந் தேதி வரை கூடுதல் அவகாசம் வழங்கக் கோரி அண்ணா பல்கலைக்கழகம் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. 

 இன்ஜினீயரிங் கவுன்சலிங்

நேற்று (18.07.2018), உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, எல்.நாகேஸ்வரராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்தது. விசாரணையின்போது நீதிபதிகள், இதுவரை நடந்த கலந்தாய்வில் எத்தனை மாணவர்கள் கலந்துகொண்டுள்ளனர் என்பன உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய கூடுதல் ஆவணங்களை இரண்டு நாள்களுக்குள் தாக்கல்செய்யுமாறு அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை நாளைக்கு (20.07.2018) ஒத்திவைத்தனர். ஒரு லட்சத்துக்கும் கூடுதலான மாணவர்கள் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ள நிலையில், கவுன்சலிங் எப்போது நடைபெறும் என்று தெரியாமல் இருக்கின்றனர்.