'காவிரியில் குளிக்கப் போகிறீர்களா?' எச்சரிக்கும் கலெக்டர்

பொங்கிவரும் காவிரியில் குளிக்கப் போகிறவர்கள் இதைச் செய்யக் கூடாது என அட்வைஸ் பண்ணுகிறார் திருச்சி கலெக்டர் ராசாமணி.

கலெக்டர் ராசாமணிமேட்டூர் அணை இன்று திறக்கப்பட உள்ளது. இந்நிலையில், திருச்சி கலெக்டர்  ராஜாமணி, வேளாண்மை இணை இயக்குநர் பால்ராஜ், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்கள் கணேசன், செல்வராஜ் ஆகியோருடன் நேற்று மாலை பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். 

அப்போது,  “தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை எதிர்பார்த்த அளவைவிடக் கூடுதலாகப் பெய்துள்ளது. கர்நாடகாவில் பெய்துவரும் மழையால் மேட்டூர் அணையில் நீர்மட்டம் 100 அடியைத் தாண்டியுள்ளது.  இதன் காரணமாக, தமிழக அரசு சார்பில் மேட்டூர் அணை டெல்டா பாசனத்துக்காக இன்று திறக்கப்பட உள்ளது. இது, டெல்டா பகுதி மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளித்துள்ளது.

மேட்டூரில் திறக்கப்படும் தண்ணீர், சேலம், நாமக்கல், கரூர், திருச்சி மாவட்ட பாசனத்திற்கும் ஏரி, குளங்களை நிரப்புவதற்கும் பயன்படுத்தப்படும். மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர், இரண்டு நாள்களில் திருச்சி வந்தடையும்.  பிறகு, கல்லணைக்குச் செல்லும் தண்ணீர், அங்கிருந்து தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களின் பாசனத்துக்குப் பிரித்து வழங்கப்படும்.  காவிரியில் திறக்கப்படும் தண்ணீரை முறையாகப் பயன்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக்  கால்வாய்கள், ஏரிகளில் தண்ணீர் செல்வதற்குத் தடையாக உள்ள பகுதிகளைக் கண்டறியவும், அவற்றை அகற்றவும் உடனடியாக பணிகள் மேற்கொள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருச்சி மாவட்ட பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை ஆகிய துறைகளை ஒருங்கிணைந்து ஆர்.டி.ஓ  தலைமையில் கண்காணிக்க கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழு, அந்தந்தப் பகுதிகளில் நடைபெற்றுவரும் தூர் வாரும் பணிகளை ஆய்வுசெய்யும். மேலும், இந்த கண்காணிப்புக் குழு, திருவெறும்பூர், மண்ணச்சநல்லூர், லால்குடி, தொட்டியம், முசிறி ஆகிய பகுதிகளுக்கு முழு அளவில் தண்ணீர் வழங்கும் பணிகள் கண்காணிக்கப்படும். இதனால், ஓடிவரும் காவிரி நீரை  கடைமடைப் பகுதிக்கு சிரமமின்றி வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும்.

மேலும், திருச்சி மாவட்டத்தில் உள்ள 75 ஏரி, குளங்களை முழுமையாக நிரப்பிக்கொள்ள வேண்டும். கடைமடைப் பகுதிக்குத் தண்ணீர் செல்லும் வகையில், அந்தக் கால்வாய்கள், ஏரிகளைச் சீரமைக்க, ஆழப்படுத்தவும், தூர் வாரவும், கரைகளைப் பலப்படுத்திடவும்,  பொதுப்பணித்துறைக்கு பராமரிப்பு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இன்று முதல் அந்தப் பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும், உலக வங்கி நிதியுதவியுடன் 35 கோடி செலவில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 குளங்களைத் தூர் வாரும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. அதுமட்டுமல்லாமல்,  மாவட்டத்தில் குறுவை தொகுப்புத் திட்டத்துக்கு ரூ.101 லட்சம் அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. திருச்சி மாவட்ட டெல்டா பாசன பகுதிகளில் 86,400 ஏக்கர் சம்பா சாகுபடி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விவசாயத்துக்குத் தேவையான இடு பொருள்கள் போதுமான அளவு இருப்பு உள்ளன. சம்பா சாகுபடியை சிறப்பாகச் செய்ய ஏதுவான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் செய்துவருகிறது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 100 சதவிகிதம் சம்பா சாகுபடி செய்யப்படும்.  அதுமட்டுமல்லாமல், டெல்டா பாசனத்துக்கு வரும் நீர், முழு அளவில் எதிர்காலத் தேவையை கருத்தில்கொண்டு, தண்ணீர் சேமித்து வைக்க கண்மாய்களில் தேக்க உரிய ஏற்பாடுகளைச் செய்துவருகிறோம். அப்படிச் செய்தால், இதன்மூலம் குடிநீர்ப் பிரச்னை வராது.

மணலை திருட்டுத்தனமாக அள்ளுவதைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது. அதை யார் செய்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். திருச்சி மாவட்டத்தில் திருட்டு மணல் அள்ளிய மூன்று பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், திருச்சி காவிரி ஆற்றில் முதலை இருப்பதும், அதைப் பார்த்தவர்கள் வீடியோ எடுத்தபடி அருகே செல்லும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.  அந்த வீடியோ எனக்கும் வந்துள்ளது. இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் என்னசெய்வது என்பதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள்குறித்து வனத்துறையுடன் ஆலோசனை நடத்திவருகிறோம்.

காவிரியில் தண்ணீர் வரும்போது கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மேலும், தண்ணீர் வருவதால் சந்தோஷத்தில் பலர் குடும்பத்தோடு காவிரியில் குளிக்கச் செல்வார்கள். அப்படிச் செல்பவர்கள், தங்களுடைய குழந்தைகளுடன் ஆழமான பகுதிக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். சில இடங்களில் தீயணைப்பு வண்டிகள் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட உள்ளது. மேலும், அந்தந்தப் பகுதிகளில் மீட்புக் குழுவினர்  பாதுகாப்புப் பணி மேற்கொள்வார்கள் " என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!