கொங்கு மக்களுக்காக இன்னொரு புதுக்கட்சி- தொடங்கினார் ஈஸ்வரன் (படங்கள்)

கோவை: கொங்குநாடு முன்னேற்ற கழகத்தில் இருந்து பிரிந்த ஈஸ்வரன் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை துவக்கி இருக்கிறார். கோவையில் நடந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் புதுக்கட்சி அறிவிப்பை வெளியிட்ட ஈஸ்வரன், ஐந்து வண்ணம் கொண்ட கட்சிக் கொடியையும் அறிமுகப்படுத்தினார்.

கொங்குநாடு முன்னேற்ற கழக தலைவர் பெஸ்ட் ராமசாமிக்கும் அதன் பொதுசெயலாளராக இருந்த ஈஸ்வரனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து கட்சிக்கு யார் தலைவர் என்ற சர்ச்சை நீடித்து வந்தது. இருவரும் தாங்கள் தான் உண்மையான கொங்குநாடு முன்னேற்ற கழகம் என்று மாறி மாறி கொங்கு மக்களை குழப்பி வந்தனர்.

இந்நிலையில், ஈஸ்வரன் கோவை சிவானந்தா காலனியில் இன்று மாலை நடந்த பொது கூட்டத்தில் தனது புதிய கட்சியை பிரகடனம் செய்தார். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி என்று தனது கட்சியை அறிமுகப்படுத்திய ஈஸ்வரன் கட்சியின் கொடியையும் அறிமுகப்படுத்தினார். பச்சை, மஞ்சள், சிவப்பு, மஞ்சள், பச்சை வண்ணங்களுடன் கட்சிக்கொடி யும் பொதுக் கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

பொதுக்கூட்டத்தில் பேசிய ஈஸ்வரன், ''கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தேசப்பற்று கொண்ட இயக்கம். சென்னைக்கும் கொங்குநாட்டிற்கும் வேறுபாடு இல்லாத‌ மின்வெட்டை அமல் படுத்த வேண்டும் தொழில் வளம் மிகுந்த கொங்கு நாட்டிற்கு சிறப்பு அந்தஸ்தை தமிழக அரசு கொடுக்க வேண்டும் கொங்கு நாட்டு மக்களுக்கு கிடைக்க வேண்டிய உரி மைகள் கடந்த ஐம்பது ஆண்டுகாலமாக மறுக்கப்பட்டு வருகிறது. அந்த‌ உரி மைகளை பெற்றுத்தருவதோடு தமிழர்களின் தன் மானத்தை பாதுகாக்கும் வகையில் செயல்படுவது தான் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் லட்சியமும் கொள்கையுமாக இருக்கும்" என்று தெரிவித்தார்.

புதுக்கட்சியின் பொதுச்செயலாளராக ஈஸ்வரனும், தலைவராக பி.ஆர்.பி சென்னியப்பனும்,பொருளாளராக பால சுப்பிரமணியமும் அறிவிக்கப்பட்டனர். கொங்குநாடு மக்களுக்காக தொடங்கப்பட்டிருக்கும் ஐந்தாவது கட்சி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.

பத்திரிக்கையாளர் மீது தாக்குதல்:
கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி என்ற புதிய கட்சியின் துவக்க விழா பொதுக்கூட்டத்தின் போது, அக்கட்சியினர் மது அருந்தி கொண்டிருந்ததை புகைப்படம் எடுத்த டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழின் புகைப்படக் கலைஞர் ஜாக்சன் மீது அக்கட்சியினர் தாக்குதல் நடத்தினர். இதில் ஜாக்சன் படுகாயமடைந்தார்.

கொங்கு நாடு முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளராக இருந்த ஈஸ்வரன், அக்கட்சியில் இருந்து விலகி புதிய கட்சியை நேற்று துவக்கினார். புதிய கட்சியின் பெயர் மற்றும் கட்சி கொடி அறிமுக விழா நேற்று நடைபெற்றது. கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கி வைத்து,அக்கட்சியின் கொடியினை ஈஸ்வரன் அறிமுகம் செய்து வைத்தார்.

கூட்டம் நடைபெற்று கொண்டிருந்த போது பொது இடத்தில் அக்கட்சியின் சில தொண்டர்கள் மது அருந்தி கொண்டிருந்தனர். இதை டைம்ஸ் ஆப் இந்தியா புகைப்படக் கலைஞர் ஜாக்சன் புகைப்படம் எடுத்துள்ளார். இதனால் கோபமடைந்த அவர்கள் ஜாக்சன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியதோடு, பீர் பாட்டிலால் தலையில் அடித்தனர். மேலும் அவரது கேமரா மற்றும் உபகரணங்களையும் சேதபடுத்தினர்.  இதை தொடர்ந்து ஜாக்சன் தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். இரத்தினபுரி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ச.ஜெ.ரவி
படங்கள்:
தி.விஜய்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!