மாணவர்களுக்கு ஓவிய மாடலாக இருந்த மூதாட்டிக்கு பாலியல் தொல்லை! - பேராசிரியர் கைது

63 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லைகொடுத்த வழக்கில், புதுச்சேரி அரசுக் கல்லூரி பேராசிரியர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

புதுச்சேரி - கடலூர் சாலையில் உள்ள அரியாங்குப்பத்தில் அமைந்திருக்கிறது, பாரதியார் பல்கலைக்கூடம். நுண்கலைக் கல்லூரியான இங்கு, சுமார் 150-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் ஓவியம், சிற்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பயின்றுவருகின்றனர். இதில், வீராம்பட்டினத்தைச் சேர்ந்த 63 வயது மூதாட்டி, மாணவர்களுக்கு மாடலாக  இருந்துவருகிறார். அதேபோல, முதலியார்பேட்டையைச் சேர்ந்த 58 வயதான ராஜேந்திரன் என்பவர், அதே கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார்.  

பாலியல் தொல்லை

சம்பவத்தன்று, வேலை இருப்பதாகச் சொல்லி அந்த ’மாடல்’  மூதாட்டியைத் தனது அறைக்கு வரச் சொல்லியிருக்கிறார் பேராசிரியர் ராஜேந்திரன். அப்போது, அந்த மூதாட்டிக்கு பேராசிரியர் ராஜேந்திரன் பாலியல் ரீதியாகத் தொல்லைகொடுத்ததாகக்  கூறப்படுகிறது.  அதிர்ச்சியடைந்த மூதாட்டி, அங்கிருந்து தப்பித்து வெளியே ஓடிவந்து, கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்திருக்கிறார். ஆனால், கல்லூரி நிர்வாகம்  நடவடிக்கை எடுக்காததால், அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் மூதாட்டி. அதனடிப்படையில், பேராசிரியர் ராஜேந்திரனைக் கைதுசெய்து விசாரணைசெய்துவருகிறது போலீஸ்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!