`அ.தி.மு.க-வுக்கு பதிலடிகொடுப்போம்'- தேர்தலுக்குத் தயாரான டி.டி.வி. தினகரன் 

 தினகரன்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொதுச் செயலாளர் தினகரன், வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகிவிட்டார். அவர், 40 தொகுதிகளுக்கு மண்டல பொறுப்பாளர்களை நியமித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தயாராகிவிட்டது. இதற்காக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு உட்பட்ட 40 நாடாளுமன்றத் தொகுதிகளை ஆறு மண்டலங்களாகப் பிரித்து, அதற்கு மண்டலப் பொறுப்பாளர்களை டி.டி.வி.தினகரன் இன்று நியமித்துள்ளார். 

வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி, சேலம் ஆகிய 9 தொகுதிகளை மண்டலம் ஒன்று எனப் பிரித்துள்ளார். அதற்குப்  பொறுப்பாளராக முன்னாள் அமைச்சரும் தலைமை நிலையச் செயலாளருமான பழனியப்பன், அமைப்புச் செயலாளரும் சேலம் புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளருமான எஸ்.கே. செல்வம்,  அமைப்புச் செயலாளர் சுகுமார்பாபு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மண்டலம் 2ல் திருவள்ளூர், அரக்கோணம், வேலூர், திருவண்ணாமலை, ஆரணி, விழுப்புரம் ஆகிய தொகுதிகள் வருகின்றன. இதற்கு மண்டல பொறுப்பாளர்களாக, அவைத் தலைவரும் நாமக்கல் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளருமான எஸ்.அன்பழகன், முன்னாள் அமைச்சர், தேர்தல் பிரிவு செயலாளர் ஜி.செந்தமிழன், வேலூர் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் என்.ஜி.பார்த்திபனும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

மண்டலம் 3ல் நாமக்கல், ஈரோடு, திருப்பூர், நிலகிரி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, கரூர் ஆகிய தொகுதிகளுக்குப் பொறுப்பாளர்களாக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி,  அமைப்புச் செயலாளரும் கோவை தெற்கு மாவட்ட கழகச் செயலாளருமான சேலஞ்சர் துரை என்கிற ஆர். துரைசாமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

மண்டலம் 4ல் திருச்சி, பெரம்பலூர், கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுச்சேரி ஆகிய தொகுதிகளுக்கு கட்சியின் பொருளாளரும், தஞ்சாவூர் வடக்கு மாவட்டச் செயலாளருமான ரெங்கசாமி, அமைப்புச் செயலாளர் சிவா ராஜமாணிக்கம், கடலூர் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் வி.டி.கலைச்செல்வன்  ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

மண்டலம் 5ல் திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, தேனி, ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளுக்கு கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்க. தமிழ்ச்செல்வன், அம்மா பேரவைச் செயலாளர் மாரியப்பன் கென்னடி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

மண்டலம் 6ல் விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளுக்கு அமைப்புச் செயலாளர் எஸ்.வி.எஸ்.பி.மாணிக்கராஜா, அமைப்புச் செயலாளர் ஆர்.பி.ஆதித்தன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

நாடாளுமன்றத் தேர்தலுக்காவும், கட்சியின் வளர்ச்சிக்காகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளனர். அ.தி.மு.க-வில் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாக கட்சித் தலைமைக்கு அதிர்ச்சித் தகவல் கிடைத்துள்ளது. இதனால், கட்சியின் உறுப்பினர்கள் சேர்க்கையை அதிகரிக்கவும் கட்சித் தலைமை முடிவுசெய்துள்ளது. அ.தி.மு.க தேர்தல் பணிகளைத் தொடங்குவதற்கு முன், டி.டி.வி. தினகரன் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளைத் தொடங்கிவிட்டதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர். 

ஆர்.கே.நகர் தொகுதியில் நலத்திட்ட உதவிகளை வழங்கச் சென்ற டி.டி.வி.தினகரனுக்கு ஏற்பட்ட சம்பவத்துக்குப் பிறகு, கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். அப்போது, பா.ஜ.க-வின் ஆதரவோடு அ,தி.மு.க-வுக்கு பதிலடிகொடுப்போம் என்று தினகரன் சூசகமாகத் தெரிவித்தது, அவரின் ஆதரவாளர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தினகரனை வைத்தே அ.தி.மு.க-வுக்கு மீண்டும் நெருக்கடி ஏற்படுத்தும் திட்டம் குறித்த ஆலோசனையில் பா.ஜ.க-வினர் ஆலோசித்துவருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுடன் தினகரன் கூட்டணி அமைக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!