”அரசுத் துறையில் காலியாக உள்ள 7,600 பணியிடங்கள் நிரப்பப்படும்” முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு! | "7600 vacancies will be filled in government sector" Chief minister Narayanasamy announced

வெளியிடப்பட்ட நேரம்: 14:20 (19/07/2018)

கடைசி தொடர்பு:14:20 (19/07/2018)

”அரசுத் துறையில் காலியாக உள்ள 7,600 பணியிடங்கள் நிரப்பப்படும்” முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு!

`அரசுத் துறையில் காலியாக உள்ள 7,600 பணியிடங்கள் நிரப்பப்படும்' என்று புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவை

புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர், கடந்த 2-ம் தேதி முதல் நடைபெற்றுவருகிறது. நேற்று காலை தொடங்கிய பேரவை இரவு 10.15 மணி வரை நீடித்தது. இதில், அனைத்துத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்றுவந்த நிலையில், நேற்று அதற்கான பதில்களைப் பேரவையில் அமைச்சர்கள் வழங்கினர். அப்போது, பல்வேறு புதிய அறிவிப்புகளும் அறிவிக்கப்பட்டன. தன்னுடைய துறைகள்குறித்து பதில் அளித்த முதல்வர் நாராயணசாமி, “புதுச்சேரி மாநிலத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் மதுபானம் தவிர மற்ற அனைத்துப் பொருள்களுக்கும் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. புதுச்சேரி மாநிலத்தில், மத்திய அரசின் உதவி இல்லாமல் எந்தத் திட்டத்தையும் நிறைவேற்ற முடியாது. மத்திய அரசிடமிருந்து போதிய நிதி பெற்று, திட்டங்களை விரைவாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். புதுச்சேரி மாநிலத்தில் பல்வேறு அரசுத் துறைகளில் பல ஆண்டுகளாக காலியாக உள்ள 7,600 பணியிடங்களை விரைவில் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். புதுச்சேரியில் காவல்துறை அதிகாரிகள் சுதந்திரமாகச் செயல்படுவதால், சட்டம் ஒழுங்கு ஓரளவுக்கு கட்டுக்குள் உள்ளது. புதுச்சேரியில் பொதுமக்கள் நிம்மதியாக உள்ளனர். மத்திய அரசின் நிதி உதவியுடன் காவல்துறை நவீன மயமாக்கப்படும்” என்றார்.

தொடர்ந்து பேசிய சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி, ”வரும் நிதியாண்டில் 500 புதிய மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில், மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்து, முற்றிலும் பார்வைத்திறன் குறைபாடுள்ள மாணவர்களுக்கு ஊக்கத்தொகையாக முறையே 20 ஆயிரம், 15 ஆயிரம் மற்றும் 10 ஆயிரம் வழங்கப்படும். ஆதரவற்ற விதவைப் பெண்ணின்  மகள் திருமணத்திற்கான நிதியுதவி, ரூபாய் 20 ஆயிரத்திலிருந்து 30 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். 50 மைக்ரானுக்குக் குறைவான பாலிதீன் பைகளுக்குத் தடை விதிக்கப்படும். மத்திய அரசின் ’சாகர் மாலா’ திட்டத்தின் கீழ் புதுச்சேரிக்கு 304 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான செயல் திட்டம், மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு புதுச்சேரி அரசு சார்பில் அனுப்பப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

நாராயணசாமி

 விளையாட்டுத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தனது துறைகுறித்து பதிலளிக்கையில், ”பாகூர், வில்லியனூர், ஏம்பலம், உப்பளம், அரியாங்குப்பம், திருநள்ளாறு, திருமலைராயன்பட்டினம், பள்ளூர், ஏனாமில் இரண்டு என 10 கைப்பந்து விளையாட்டு மைதானம் தலா 10 லட்சம் ரூபாயில் அமைக்கப்படும். விமான நிலைய கட்டுப்பாட்டு ஆணைய சமூகப் பொறுப்பு உணர்வுத் திட்டத்தில், 15 கோடி ரூபாய் செலவில் வில்லியனூர், பாகூர், ஏம்பலம், ஊசுடு, மண்ணாடிப்பட்டு, அரியாங்குப்பம், நெட்டப்பாக்கம், திருமலைராயன் பட்டினம், பள்ளூர், ஏனாம் ஆகிய 10 இடங்களில் மினி ஸ்டேடியம் அமைக்கப்படும் எனத் தெரிவித்தார்  அதேபோல, ”புதுச்சேரியில் மணல் தட்டுப்பாட்டைப் போக்க, அரசு பொதுத்துறை நிறுவனம்மூலம் மணல் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என்ற  வருவாய்த்துறை அமைச்சர் ஷாஜகானின் அறிவிப்பு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் பேரவையில் அறிவிக்கப்பட்டன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க