வெளியிடப்பட்ட நேரம்: 13:32 (19/07/2018)

கடைசி தொடர்பு:14:48 (19/07/2018)

அம்மா குழந்தைகள் நலப் பரிசுப் பெட்டகம்... 100 கோடி டெண்டர் சர்ச்சை! - சுகாதாரத்துறை கவனத்துக்கு

வரும் 30-ம் தேதி `அம்மா குழந்தை நலப் பரிசுப் பெட்டகம்' டெண்டரைத் திறக்க வேண்டும். ஆனால், அதற்குள் இந்த டெண்டர் யாருக்குச் சென்று சேரும் என மருத்துவப் பணிகள் சேவைக் கழக அதிகாரிகள் பேசத் தொடங்கிவிட்டனர்.

அம்மா குழந்தைகள் நலப் பரிசுப் பெட்டகம்... 100 கோடி டெண்டர் சர்ச்சை! - சுகாதாரத்துறை கவனத்துக்கு

ஜெயலலிதாவின் கனவுத் திட்டமான அம்மா குழந்தைகள் நலப் பரிசுப் பெட்டகத்தில் முறைகேடுகள் நடப்பதாகக் குமுறுகின்றனர் சுகாதாரத்துறை ஒப்பந்ததாரர்கள். `100 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த டெண்டர், சில நிறுவனங்களுக்கு மட்டுமே செல்லும் வகையில் டெண்டர் விதிகளைத் தளர்த்தியுள்ளனர்' எனவும் அவர்கள் குமுறுகின்றனர். 

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 67 கோடி ரூபாய் செலவில், `அம்மா குழந்தை நலப் பரிசுப் பெட்டகம்' வழங்கும் திட்டத்தினைக் கடந்த 2015 செப்டம்பர் மாதம் தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் ஜெயலலிதா. இந்தத் திட்டத்தின்படி, `குழந்தையைப் பராமரிப்பதற்குத் தேவையான துண்டு, குழந்தைக்கான உடை, படுக்கை, கொசு வலை, நாப்கின், 100 மில்லி லிட்டர் அளவு கொண்ட எண்ணெய்க் குடுவை, பிளாஸ்டிக் குப்பியில் 60 மி.லி ஷாம்பூ, சோப்புடன் கூடிய சோப்புப் பெட்டி, நகவெட்டி, கிலுகிலுப்பை, பொம்மை, குழந்தைகளைப் பாதுகாப்பாகக் கையாள 250 மில்லி லிட்டர் அளவு கை கழுவும் திரவம், பிரசவித்த தாய்க்கு 100 கிராம் எடையுள்ள சோப்பு, பிரசவித்த தாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, தாய்ப்பாலை அதிகரிக்க உதவும் `சௌபாக்கியா’ சுண்டிலேகியம், தாய் மற்றும் பச்சிளம் குழந்தையைப் பராமரிக்க தேவையான பொருள்களை வைத்துக்கொள்ள உதவும் பெட்டகம் ஆகிய 16 வகையான பொருள்களை உள்ளடக்கியிருந்தது இந்தப் பெட்டகம். இதன் மதிப்பு ஆயிரம் ரூபாய்' எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். 

அம்மா குழந்தைகள் நலப் பரிசு பெட்டகம்

சுகாதாரத்துறை ஒப்பந்ததாரர் ஒருவரிடம் பேசினோம். ``இந்தப் பெட்டகம் தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம் மூலம் மொத்தமாகக் கொள்முதல் செய்யப்பட்டு, தமிழகத்தில் உள்ள பல்வேறு மருந்துக்கிடங்குகளிலிருந்து மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கப்படுகிறது. குழந்தைகளைப் பெறும் தாய்மார்களுக்கு உடனுக்குடன் இந்தப் பெட்டகம் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ஏழு லட்சம் தாய்மார்கள், இந்தத் திட்டத்தின் மூலம் பலன் பெறுகின்றனர். இந்த 16 பொருள்களில் சுண்டி லேகியம் மட்டும் அரசின் டேம்ப்கால் நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, கடந்த மூன்று ஆண்டுகளாக அனிதா டெக்ஸ், பாலாஜி சர்ஜிக்கல் ஆகிய இரண்டே நிறுவனங்கள்தாம் தொடர்ந்து சப்ளை செய்து வருகின்றன. இந்த இரண்டு கம்பெனிகளில் பின்னணியில் அமைச்சர் தரப்புக்கு வேண்டிய சிலர் மறைமுகமாக உள்ளனர். இந்தத் திட்டத்தை முதலில் அறிவித்தபோது, இதில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கு எந்தவித முன் அனுபவமும் தேவையில்லை என்றார்கள். இந்த ஆண்டு போட்டி அதிகமானதும், இந்த இரண்டு நிறுவனங்களுக்கு மட்டுமே ஒப்பந்தப் பணிகள் சென்று சேரும் வகையில் விதிகளைத் தளர்த்தியுள்ளனர்" என்றவர், 

``அதன்படி, 3 லட்சத்து 30 ஆயிரம் ஜோடிகளை சப்ளை செய்திருந்தால் மட்டுமே தகுதி என்ற புதிய விதியைக் கொண்டு வந்துள்ளனர். இதனடிப்படையில், இந்த இரண்டு நிறுவனங்கள் மட்டுமே டெண்டரில் தகுதி பெற முடியும். முட்டை, சைக்கிள், பருப்பு, எண்ணெய் ஆகிய டெண்டர்கள் குறிப்பிட்ட கம்பெனிகளுக்கு மட்டுமே செல்லும் வகையில், எப்படி டெண்டர் விதிகளை தளர்த்தினார்களோ அதே பாணியில் பேபி கேர் கிட் திட்டத்திலும் செய்துள்ளனர். வரும் 30-ம் தேதி இந்த டெண்டரைத் திறக்க வேண்டும். ஆனால், அதற்குள் இந்த டெண்டர் யாருக்குச் சென்று சேரும் என மருத்துவப் பணிகள் சேவைக் கழக அதிகாரிகள் பேசத் தொடங்கிவிட்டனர். 100 கோடி ரூபாய் மதிப்பிலான இந்தத் திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு ஏழு லட்சம் குழந்தைகள் பலன் பெறுகிறார்கள். குஜராத், ஆந்திராவில் இதே திட்டத்துக்காகச் செலவிடப்படும் தொகையைவிட, தமிழ்நாட்டில் அதிக விலை கொடுத்து பொருள்கள் வாங்கப்படுகின்றன" என்றார் ஆதங்கத்துடன். 

தமிழ்நாடு மருத்துவப் பணிகள் சேவைக் கழகம்

குழந்தைகள் நலத் திட்டத்தில் எழுப்பப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து, தமிழ்நாடு மருத்துவப் பணிகள் சேவைக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் உமாநாத் ஐ.ஏ.எஸ்ஸிடம் பேசினோம். ``குழந்தைகள் நலப் பரிசுப் பெட்டகத்தை சப்ளை செய்யக் கூடிய அனிதா டெக்ஸ் நிறுவனமும் பாலாஜி சர்ஜிக்கல் நிறுவனமும் தமிழ்நாட்டில் மட்டும் விநியோகம் செய்வதில்லை; கர்நாடகாவிலும் இதே பொருள்களை  சப்ளை செய்கின்றன. ஆந்திரா, தெலங்கானாவில் அனிதா டெக்ஸ் நிறுவனம் சப்ளை செய்கிறது. தொடக்க காலத்தில், `இந்த 16 பொருள்களில் 5 பொருள்களை உற்பத்தி செய்திருக்க வேண்டும்' என்ற விதிமுறை இருந்தது. இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது, இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இப்படியொரு திட்டம் இல்லை. எனவே, 5 பொருள்களை உற்பத்தி செய்திருக்க வேண்டும் என்ற விதியைக் கொண்டு வந்தார்கள். அதன்பிறகு, ஆண்டுக்கு 67 கோடி ரூபாய் டர்ன் ஓவர் இருக்க வேண்டும் என்ற விதி கொண்டு வரப்பட்டது. அதையும், மற்ற நிறுவனங்களுக்கும் வாய்ப்பளிக்கும் வகையில் தற்போது 33 கோடி ரூபாயாகக் குறைத்துவிட்டோம். 

இந்தத் திட்டத்தை ஆந்திராவில் செயல்படுத்தும்போது, `முன் அனுபவம் தேவையில்லை' என்ற விதியைக் கொண்டு வந்தார்கள். உடனே, கூட்டுறவு சொசைட்டி ஒன்று டெண்டரில் பங்கேற்று சப்ளை செய்யும் ஆர்டரை வாங்கியது. அவர்களால் சப்ளை செய்ய முடியாமல் டெண்டரும் நின்றுவிட்டது. இந்தப் பெட்டகத்தில் உள்ள ஒரு சில பொருள்களை உற்பத்தி செய்தும் மற்ற பொருள்களை வெளியிலிருந்து வாங்கியும் ஒருங்கிணைத்துத்தான் சப்ளை செய்கிறார்கள். அனுபவமில்லாமல் பங்கேற்கின்றவர்கள், ஆந்திராவைப் போல சப்ளை செய்ய முடியாமல் ஓடிப் போய்விட்டால் எங்களால் என்ன செய்துவிட முடியும்? அதனால்தான், கடந்த மூன்று வருடத்தில் இந்த நான்கு மாநிலங்களில் ஏதாவது ஒரு பொருளையாவது சப்ளை செய்திருக்க வேண்டும் என்ற விதியைக் கொண்டு வந்தோம். இதனை எதிர்பார்க்காமல் சிலர், `இதுவரையில் நான் எந்த மாநிலத்திலும் சப்ளை செய்ததில்லை. ஆனால், எனக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்' எனக் கேட்டார்கள். அப்படி ஒரு வாய்ப்பு கொடுத்துவிட்டு, அவர்கள் ஓடிப் போய்விட்டால் திட்டத்தின் நிலை என்னவாகும்? 

இதன்பிறகு எங்களை அணுகிய வேறு இரண்டு நிறுவனங்கள், `இந்தப் பொருள்களை சப்ளை செய்ததில்லை. இந்தமுறை செய்யலாம் என்ற முடிவில் இருக்கிறோம்' எனக் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இதனை மெடிக்கல் கார்ப்பரேஷன் போர்டில் வைத்துத்தான் முடிவெடுக்க முடியும். மருத்துவ உபகரணங்களோ, மருந்துப் பொருள்களோ வாங்கும்போது, `அந்த கம்பெனி மூன்று ஆண்டுகள் இந்தியாவில் சப்ளை செய்திருக்க வேண்டும்' என்ற விதி உள்ளது. இதே விதியைத்தான் அம்மா பரிசுப் பெட்டகத்துக்கும் நிர்ணயித்திருக்கிறோம். ஒரு திட்டத்தை முதன்முதலில் செயல்படுத்தும்போது, தொடக்கத்தில் சில நடைமுறைகள் இருக்கும். மூன்று ஆண்டுகள் கழிந்த பிறகு, பழைய நடைமுறையிலேயே கொண்டு செல்ல முடியாது. திட்டத்தின் பலன் தாய்மார்களுக்கு முழுமையாகச் சென்று சேரும் வகையில் செயல்பட்டு வருகிறோம்" என்றார் நிதானமாக.