நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஏன் ஆதரிக்க வேண்டும்? முதல்வர் பழனிசாமி அளித்த விளக்கம்

முதல்வர் பழனிசாமி

ஆந்திர அரசு நாடாளுமன்றத்தில் கொண்டுவரும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை அ.தி.மு.க ஏன் ஆதரிக்க வேண்டும்? முதல்வர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

மேட்டூர் அணையைத் திறந்துவைத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``காவிரி நீர் கடைமடை வரை செல்லும் அளவுக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட இருக்கிறது. கடைமடை வாய்க்கால்களைத் தூர் வார 11 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளைக்கொண்டு ஆய்வுசெய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. 83 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது மேட்டூர் அணை. காவிரி இடைக்காலத் தீர்ப்பில் 205 டி.எம்.சி நீரும், இடைக்கால இறுதித் தீர்ப்பில் 190 டி.எம்.சி., நீரும், தற்போது உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்பில் 177 டி.எம்.சி., என குறைக்கப்பட்டது. கோதாவரியில் இருந்து 125 டி.எம்.சி தண்ணீர் காவிரியில் கலக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது. அப்படி கோதாவரியில் இருந்து  125 டி.எம்.சி., தண்ணீர் காவிரியில் வந்தால், லிட்டிகேஷன் மூலம் சேலம், நாமக்கல், கரூர் என மேடான பகுதிகளிலும் பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்க ஏற்பாடுசெய்யப்படும்.

அரசு சத்துணவுத் திட்டத்துக்கு முட்டை வழங்கியதில் முறைகேடு நடக்கவில்லை. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு நிர்ணயிக்கும் விலையை அரசு அதிகாரிகள் ஆய்வுசெய்து ஒப்பந்தம் விட்டிருக்கிறார்கள். இதில் எந்த ஒரு முறைகேடும் நடக்கவில்லை. மத்திய வருமான வரித் துறை, தொழில் செய்பவர்களின் வருமானத்தைக் கண்காணிக்கும். அந்த வருமானத்துக்கு ஏற்ப வரி கட்டவில்லை என்றால் ஆய்வு மேற்கொள்ளும். இது, வழக்கமாக நடத்தப்படும் விசாரணைதான். இந்தியா முழுவதும் வருமான வரித் துறை ஆய்வுசெய்திறது. இந்த அரசுக்குப் பிடிக்காதவர்கள் இதை பூதாகரமாக்குகிறார்கள்.

இராமலிங்கம் அண்ட் கோ 35 ஆண்டுகளாக ஒப்பந்தப் பணியைச் செய்துவருகிறார்கள். கடந்த தி.மு.க., ஆட்சியில் 10-க்கும் மேற்பட்ட பணிகளை 500 கோடிக்கு மேல் செய்திருக்கிறார்கள். அரசு ஒப்பந்தம் விடும்போது, தகுதியைப் பார்த்துதான் ஒப்பந்தம் கொடுப்பார்கள். நீங்கள் நினைப்பதைப்போல ஒப்பந்தத்தில் முறைகேடு நடக்க வாய்ப்பில்லை.

ஆந்திரா பிரச்னைகளுக்காக, நாடாளுமன்றத்தில் அம்மாநில அரசு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவந்திருக்கிறது. தமிழக அரசு காவிரி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என நம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 22 நாள்கள் வெளியில் இருந்து போராடினார்கள். எந்த மாநிலமும் முன்வந்து நமக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. அப்படி இருக்கும்பட்சத்தில், நாம் எதற்காக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும். என்பதை நீங்களே சொல்லுங்கள். 8 வழிச் சாலைக்கு 90 சதவிகிதம் நில எடுப்புப் பணி நிறைவுபெற்றது. இதில், 95 சதவிகித விவசாயிகள் தாங்களாகவே முன்வந்து கொடுத்திருக்கிறார்கள். ஒரு சில அரசியல் கட்சியைச் சேர்ந்த விவசாயிகளே நிலம் கொடுக்க மறுக்கிறார்கள். அவர்களைப் படம்பிடித்து சில பத்திரிகைகள் பெரிதுபடுத்துகின்றன'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!