வெளியிடப்பட்ட நேரம்: 14:50 (19/07/2018)

கடைசி தொடர்பு:14:50 (19/07/2018)

`தடை செய்யப்பட்ட ஆணையத்துக்காக நிதியை வீணடிப்பதா?' - தமிழக அரசுக்கு நீதிபதி கண்டனம்!

'தடை செய்யப்பட்ட ஆணையத்துக்காக அரசு நிதியை வீணடிப்பது கண்டனத்துக்குரியது' என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார். 

புதிய தலைமைச்செயலகம்

கடந்த 2010-ம் ஆண்டு, தி.மு.க ஆட்சியின்போது  ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் புதிய தலைமைச்செயலகம் கட்டப்பட்டது. இதை, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் திறந்துவைத்தனர். ஆனால், அதன்பின் வந்த அ.தி.மு.க அரசு, அதை பயன்படுத்தாமல், பழைய தலைமைச் செயலகத்தையே பயன்படுத்தியது. மேலும், புதிய தலைமைச் செயலகத்தை பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றியதுடன், தலைமைச் செயலக கட்டுமானத்தில் ஊழல் நடைபெற்றதாகக் கூறி, விசாரணை ஆணையம் ஒன்றையும் அ.தி.மு.க அரசு அமைத்தது. நீதிபதி ரகுபதி தலைமையில் ஒருநபர் ஆணையமும் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம், முன்னாள் முதல்வர் கருணாநிதி உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணை மேற்கொண்டது. இதற்கிடையே, இதுகுறித்து தி.மு.க சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. 

இது தொடர்பான விசாரணை, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் இன்று நடைபெற்றது. அப்போது, விசாரணை ஆணையத்துக்குத் தடை விதித்த பின்பும், கடந்த 3 ஆண்டுகளாக ஆணையத்துக்கு அரசு நிதி ஒதுக்கிவருவதாக தி.மு.க சார்பில் குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து கேள்வி எழுப்பிய நீதிபதி, ``தடை செய்யப்பட்ட ஆணையத்துக்காக அரசு நிதியை வீணடிப்பது கண்டனத்துக்குரியது. தலைமைச் செயலக கட்டுமானத்தில் ஊழல் நடந்திருந்தால், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிட்டிருக்க வேண்டும். அதைச் செய்யாமல், ஆணையம் அமைக்கவேண்டிய அவசியம் என்ன?  இது மாதிரியான நடவடிக்கை, நீதித்துறைமீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைச் சீர்குலைக்காதா?" எனக் கண்டனம் தெரிவித்தார். மேலும், வழக்கு விசாரணையை வரும் 26-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க