3 எம்.எல்.ஏ-க்களும் புதுச்சேரி சட்டப்பேரவைக்குள் நுழையத் தடையில்லை- உச்ச நீதிமன்றம்

”3 பா.ஜ.க நியமன எம்.எல்.ஏ-க்களையும் பேரவைக்குள் அனுமதியுங்கள்” என்று புதுச்சேரி சபாநாயகருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

உச்சநீதிமன்றம்

புதுச்சேரியில், ஆளும் காங்கிரஸ் கட்சியின் பரிந்துரையின்றி, பா.ஜ.க-வைச் சேர்ந்த சாமிநாதன், செல்வகணபதி, சங்கர் ஆகிய மூன்று பேரை எம்.எல்.ஏ-க்களாக நியமித்தது மத்திய பா.ஜ.க அரசு. அதே வேகத்தில் அவர்கள் மூவருக்கும் ஆளுநர் மாளிகையில் ரகசியமாக பதவிப் பிரமாணத்தைச் செய்துவைத்தார், துணைநிலை ஆளுநர் கிரண்பேடி. இந்த நியமனத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கில், எம்.எல்.ஏ-க்களின் நியமனம் செல்லும் என்று தீர்ப்பளித்தது சென்னை உயர் நீதிமன்றம். 

நியமன எம்.எல்.ஏக்கள்

அதையடுத்து, மூன்று நியமன எம்.எல்.ஏ-க்களும் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க வந்தனர். ஆனால், சட்டப்பேரவைக்குள் அவர்களை அனுமதிக்க மறுத்துவிட்டார் சபாநாயகர் வைத்திலிங்கம். அதையடுத்து, ஆளும் கட்சி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றதில் மேல் முறையீடு செய்தார். நேற்று முன்தினம், மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வரும் 19-ம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என்று அறிவித்தனர் நீதிபதிகள். அதைத் தொடர்ந்து, “மூன்று நியமன எம்.எல்.ஏ-க்களுக்கு உச்ச நீதிமன்றம் எந்தத் தடையையும் விதிக்கவில்லை. புதுச்சேரி சட்டமன்றத்துக்குள் செல்வதற்கு மூன்று நியமன எம்.எல்.ஏ-க்களுக்கும் சுதந்திரம் உள்ளது. அதையும் மீறி தடை செய்தால், அவர்கள் நீதிமன்றத்தை நாடி அவமதிப்பு வழக்கைத் தொடரலாம்” என்றார்.

புதுச்சேரி சட்டப்பேரவை

அதைத் தொடர்ந்து, கடந்த 16-ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய நேரத்தில், பா.ஜ.க நியமன எம்.எல்.ஏ-க்கள் மூன்று பேரும் பேரவைக்குள் நுழைய முயன்றனர். ஆனால், சட்டப்பேரவையின் பிரதான கதவுகளை மூடிய காவலர்கள், நியமன எம்.எல்.ஏ-க்களை உள்ளே விடாமல் தடுத்துநிறுத்தினர். அதையடுத்து, அவர்கள் அங்கேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு, பிறகு சென்றுவிட்டனர். இந்நிலையில், நியமன எம்.எல்.ஏ-க்கள் தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள், “இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்கப்படவில்லை. இந்த வழக்கின் தீர்ப்பை மூன்று வாரங்களுக்கு தள்ளிவைக்கிறோம். அதுவரை சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று மூன்று                   எம்.எல்.ஏ-க்களையும் பேரவைக்குள் அனுமதிப்பார்கள் என்று நம்புகிறோம்” என்று தெரிவித்தனர் நீதிபதிகள். நியமன எம்.எல்.ஏ-க்களை உள்ளே அனுமதித்துவிடக் கூடாது என்பதால்தான், அவசரமாக இன்றுடன் சட்டசபை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. அதேபோல பட்ஜெட் நிதி ஒதுக்கும் மசோதாவுக்கு ஆளுநர்  கிரண்பேடியும் அனுமதி தரவில்லை. இதனால், சட்டப்பேரவையை மீண்டும் கூட்ட வேண்டிய நிலைக்கு புதுச்சேரி அரசு தள்ளப்பட்டிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!