வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (19/07/2018)

கடைசி தொடர்பு:16:40 (19/07/2018)

`மின் கட்டணத்தை யார் செலுத்துவது?' - கலாம் கட்டடத்தில் நடக்கும் மோதல்

மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவிடப் பணிகளுக்கு உதவியாக இருந்துவந்த அவசரகால புகலிட கட்டடத்துக்கு மின் கட்டணம் செலுத்தாததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

அப்துல்கலாம் நினைவிடம் அருகே உள்ள அவசரகால புகழிட கட்டிடம்
 

மறைந்த டாக்டர் அப்துல்கலாமின் உடல் ராமேஸ்வரம் அருகே உள்ள பேய்கரும்பில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அங்கு பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பின் சார்பில் அப்துல்கலாம் பெயரில் தேசிய நினைவகம் அமைக்கப்பட்டு கடந்த ஆண்டு ஜூலை 27-ல் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது. கலாம் நினைவிடம் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்ட அதிகாரிகள், அலுவலர்கள், வேலையாட்கள் ஆகியோர் தங்குவதற்காக நினைவிடம் அருகே இருந்த அவசரகால புகலிட கட்டடம் பயன்பட்டு வந்தது. நினைவிடப் பணிகள் முடிந்த பின்னர் அங்கு பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வந்த ஆயுதப்படை போலீஸ் பிரிவைச் சேர்ந்த காவலர்கள் அங்கு தங்கியிருந்தனர். 2.75 கோடி செலவில் இந்தக் கட்டடம் பொதுப்பணித் துறையினரால் கட்டப்பட்டது. ஆனால், இதைப் பராமரிக்க வேண்டிய ஊராட்சி ஒன்றியத்திடம் இந்தக் கட்டடம் முறையாக ஒப்படைக்கப்படவில்லை. இந்நிலையில்தான் கலாம் நினைவிடப் பணிகளுக்கு இந்த கட்டடம் பயன்படுத்தப்பட்டது.

இந்நிலையில், கடந்த 18 மாதங்களாக இந்தக் கட்டடத்துக்கான மின்கட்டணம் கட்டப்படவில்லை. இதனால் கடந்த சில நாள்களுக்கு முன் இந்தக் கட்டடத்தின் மின் இணைப்பைத் துண்டித்தனர். இதனால் இங்கு தங்கியிருந்த ஆயுதப்படை போலீஸார் அங்கிருந்து காலி செய்தனர். 
கலாம் நினைவிடத்தை அமைத்த பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு, அவசரகால புகலிட கட்டடத்தைக் கட்டிய பொதுப்பணித் துறையினர், கட்டடத்தை நிர்வகிக்க வேண்டிய ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் என 3 தரப்பினருக்கு இடையே  யார்  மின் கட்டணத்தைச் செலுத்துவது என்ற பிரச்னை எழுந்ததால் மின் கட்டணம் கட்டப்படவில்லை என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

மின் கட்டணம் செலுத்தாததால் அப்துல்கலாம் பயின்ற தொடக்கப்பள்ளியின் மின் இணைப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் துண்டிக்கப்பட்டது. தற்போது அவரது நினைவிடப் பணிகளுக்குப் பயன்பட்டு வந்த அவசரகால புகலிடக் கட்டடத்தின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. வரும் 27-ம் தேதி கலாமின் 3-ம் ஆண்டு நினைவு நாள் கடைப்பிடிக்கப்பட உள்ளது. அன்றைய தினம் மத்திய- மாநில அமைச்சர்கள் மட்டுமல்லாது ஆயிரக்கணக்கான பொதுமக்களும் இங்கு அஞ்சலி செலுத்த வர உள்ளனர். இந்நிலையில் அவசரகால புகலிட கட்டடத்தின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருப்பது  குறிப்பிடத்தக்கது.