லிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமாருக்கு மயக்க ஊசி கிடைத்தது எப்படி? - மாணவி வன்கொடுமை வழக்கு விசாரணை | 11 year old girl gang raped issue - police enquires Lift operator

வெளியிடப்பட்ட நேரம்: 14:59 (19/07/2018)

கடைசி தொடர்பு:18:33 (19/07/2018)

லிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமாருக்கு மயக்க ஊசி கிடைத்தது எப்படி? - மாணவி வன்கொடுமை வழக்கு விசாரணை

மாணவி வழக்கில் விசாரிக்கப்பட்டவர்கள்

சென்னையில் 7-ம் வகுப்பு படித்த மாற்றுத்திறனாளி மாணவி வன்கொடுமை வழக்கில் கைதான 66 வயதான லிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமாருக்கு மயக்க ஊசி எப்படி கிடைத்தது என்ற தகவல் போலீஸாருக்குத் தெரியவந்துள்ளது. 

சென்னையில் 7-ம் வகுப்பு படித்த மாற்றுத்திறனாளி மாணவிக்கு கூட்டாகப் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக 17 பேரை போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த வழக்கில், கைதான லிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமார் குறித்த தகவல்களை போலீஸார் சேகரித்தனர். மேலும், மாணவிக்கு மயக்க ஊசி, மயக்க மருந்து கொடுத்தது குறித்தும் போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் மயக்க ஊசி குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. 

இதுகுறித்து நம்மிடம் பேசிய போலீஸ் உயரதிகாரி ஒருவர், ``இந்த வழக்கு விசாரணையில் இருந்துவருவதால் வெளிப்படையாகப் பேச முடியாது. இருப்பினும் இதுவரை விசாரித்ததில் எங்களுக்கு சில முக்கியத் தகவல்கள் கிடைத்துள்ளன. வெளிநபர்கள் உள்ளே செல்வதில் கடும் கட்டுப்பாடு இருக்கும் அந்த அடுக்குமாடி குடியிருப்பில், அப்பாவி மாணவியை வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர். மாணவியுடன் கைதானவர்கள் சிலர் இருக்கும் சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றியுள்ளோம். அதில் மாணவியை அவர்கள் அழைத்துச் செல்லும் காட்சிகளும் உள்ளன.

பகல் நேரத்தில்தான் பெரும்பாலான காட்சிகள் இருக்கின்றன. இதுதான் எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்த வழக்கை விசாரித்தப்போது சாதாரணமாகத்தான் கருதினோம். ஆனால், விசாரணையின்போது கிடைத்த தகவல்களை முழுமையாகக்கூட தெரிவிக்க முடியாது. அந்தளவுக்கு மாணவி பாதிக்கப்பட்டுள்ளார். மனதளவிலும் உடலளவிலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு சிகிச்சை மற்றும் கவுன்சலிங் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ரவிக்குமார்தான் மையப்புள்ளி. அவரின் குடும்பத்தினரிடமும் இதற்கு முன்பு ரவிக்குமார் வேலை பார்த்த இடத்திலும் அவர் குடியிருந்த இடத்திலும் விசாரித்துள்ளோம். 

மாணவிக்கு மயக்க ஊசி, மயக்க மருந்து கொடுக்கப்பட்ட தகவலை உறுதிப்படுத்த ஆய்வு முடிவுக்காகக் காத்திருக்கிறோம். அதற்கு முன், கைதானவர்களுக்கு எப்படி மயக்க ஊசி, மயக்க மருந்து கிடைத்தது என்று விசாரித்தபோது, ரவிக்குமார், அயனாவரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்த தகவல் கிடைத்துள்ளது. இதனால்தான் மயக்க ஊசி, மயக்க மருந்து குறித்த விவரங்கள் அவருக்குத் தெரிந்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். அந்தத் தகவல் உறுதிப்படுத்தினால் மயக்க மருந்து, ஊசிகளை சப்ளை செய்தவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ரவிக்குமாரை அடுக்குமாடி குடியிருப்பில் வேலைக்கு அமர்த்திய தனியார் நிறுவனத்திடம் விசாரித்துவருகிறோம். போலீஸ் காவலில் எடுக்கப்படும் ரவிக்குமாரிடம் சில கேள்விகளைக் கேட்கவுள்ளோம். அப்போது, மேலும், பல தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்!’’ என்றார். 

இதற்கிடையில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு சிகிச்சை மற்றும் கவுன்சலிங் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மனநல மருத்துவர், ஆலோசகர் உட்பட ஆறு பேர் கொண்ட டீம், மாணவிக்கு இன்று அல்லது நாளை சிகிச்சை அளிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சம்பந்தப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புக்குள் செல்பவர்கள் விசாரணைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்!