`போட்டோவை ஏன் ஃபேஸ்புக்கில் பதிவுசெய்தீர்கள்?' - மாணவர்களுக்கு தண்டனை கொடுத்த பள்ளி 

சென்னையில் ஆசிரியருடன் கடற்கரைக்குச் சென்ற போட்டோக்களை ஃபேஸ்புக்கில் பதிவு செய்த மாணவர்களுக்குக் கடும் தண்டனையை பள்ளி நிர்வாகம் கொடுத்துள்ளது.

செல்ஃபி

Representational Image

சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ளது பிரபலமான தனியார் பள்ளி. இந்தப் பள்ளியில் பயிலும் மாணவி ஒருவர் உட்பட ஏழு பேர் உடற்கல்வி ஆசிரியருடன் சில நாளுக்கு முன்பு அந்தப் பகுதியில் உள்ள கடற்கரைக்குச் சென்றுள்ளனர். அப்போது செல்ஃபி உட்பட ஏராளமான புகைப்படங்களைத் தங்களுடைய செல்போனில் எடுத்துள்ளனர். அந்தப் புகைப்படங்களை ஃபேஸ்புக் பக்கத்திலும் பதிவு செய்துள்ளனர். அதைப் பார்த்த பள்ளி நிர்வாகம், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மற்றும் மாணவர்களை அழைத்து விசாரித்தது. பிறகு, அவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. 

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் நீலாங்கரை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். பெயரை வெளியிட வேண்டாம் என்ற நிபந்தனையோடு நம்மிடம் பேசிய பெற்றோர், ``சம்பவத்தன்று ஆசிரியருடன் மாணவ, மாணவிகள் கடற்கரைக்குச் சென்றுள்ளனர். அங்கு எடுத்த போட்டோக்களை ஃபேஸ்புக்கில் பதிவுசெய்துள்ளனர். அதற்காகச் சம்பந்தப்பட்ட மாணவர்களை நேரில் அழைத்த பள்ளி நிர்வாகத்தில் உள்ளவர்கள் காலனியால் அடித்துள்ளனர். அதை யாரும் வெளியில் சொல்லவில்லை. மேலும், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவுள்ளது. அதன் பிறகே எங்களிடம் நடந்த சம்பவத்தை மாணவர்கள் தெரிவித்தனர்.

அதுதொடர்பாகப் பள்ளி நிர்வாகத்திடம் பேசினோம். அப்போது அவர்கள், டி.சி கொடுத்துவிடுவதாக மிரட்டுகின்றனர். இதனால், மாணவர்களின் எதிர்காலம் கருதி நாங்கள் அமைதியாகிவிட்டோம். ஆனால், ஒரு மாணவனின் உறவினர், பள்ளியின் பெண் நிர்வாகியிடம் தட்டிக்கேட்டுள்ளார். அப்போது, நடந்த வாக்குவாதத்தில் ஆவேசத்தில் கண்ணாடி கதவை உடைத்துள்ளார். இதுதொடர்பாகப் பள்ளி நிர்வாகம், போலீஸில் புகார் கொடுத்துள்ளது. அதன்பேரில் விசாரணை நடந்துவருகிறது. இதற்கிடையில் மாணவர்களுக்குக் கொடுக்கப்பட்ட தண்டனை தொடர்பாக, போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டு தரப்பு புகார்களையும் போலீஸார் விசாரித்துவருகின்றனர். கடற்கரைக்கு ஆசிரியருடன் மாணவர்கள் சென்றது அவ்வளவு பெரிய குற்றமா" என்றனர். 

இதுகுறித்து பள்ளி நிர்வாகி ஒருவரிடம் பேசியபோது ``பள்ளியில் நடந்த முழு சம்பவத்தைப் புகாராகக் கொடுத்துள்ளோம். இந்தச் சம்பவத்தில் உண்மைகள் மறைக்கப்பட்டு, பெற்றோர் தரப்பில் பள்ளி நிர்வாகம் மீது தவறான புகார் போலீஸில் கொடுக்கப்பட்டுள்ளது" என்றார். 

போலீஸாரிடம் கேட்டதற்கு ``இரண்டு தரப்பினரும் புகார் கொடுத்துள்ளனர். விசாரித்துவருகிறோம். அதன்பிறகே என்ன நடந்தது என்று தெரியவரும்" என்றனர். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!