வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (19/07/2018)

கடைசி தொடர்பு:17:30 (19/07/2018)

கனவு ஆசிரியர் பரிசுத்தொகையை தான் படித்த பள்ளிக்கு வழங்கிய ஆசிரியர்!

தமிழக அரசு தனக்கு வழங்கிய கனவு ஆசிரியர் விருதுக்குரிய பரிசுத்தொகை பத்தாயிரத்தை தான் படித்த அரசுப்பள்ளிக்கு வழங்கி, 'என்னை இந்த அளவுக்கு வளர்த்தெடுத்த பள்ளிக்கு எனது குருகாணிக்கை' என்று சொல்லி நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார் அரசுப் பள்ளி ஆசிரியர் பூபதி.

ஆசிரியர்

கரூர் மாவட்டம், குளித்தலை ஒன்றியத்தில் மாவட்டத்தின் கடைக்கோடி ஊராக திருச்சி மாவட்ட எல்லையை ஒட்டி அமைந்திருக்கிறது பொய்யாமணி கிராமம். இந்த குக்கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருபவர்தான் பூபதி. இவர் இந்தப் பள்ளிக்கு வந்த இரண்டு ஆண்டுகளில் பள்ளியில் ஸ்மார்ட்கிளாஸ் வசதி, ஏ.சி வகுப்பறை, ஏ.சி கணினி ஆய்வகம், சுகாதாரமான குடிநீர், பள்ளி வளாகத்தைச் சுற்றி இயற்கை காய்கறித் தோட்டம், பள்ளி வளாகம் முழுக்க வைஃபை வசதி, பள்ளி அறைகள் முழுக்கத் தரமான தரைத்தளம் என்று இந்த அரசுப் பள்ளியைத் தனியார் பள்ளிகளைத் தாண்டி சிறப்பாக மாற்றினார்.

அதோடு, அரசுப்பள்ளிகளின் சிறப்பைப் பற்றி லோக்கல் சேனல்களில் தொடர்ந்து ஒளிப்பரப்பி, இந்தக் கல்வியாண்டில் இந்தப் பள்ளிக்கூடத்தில் கூடுதலாக 40 மாணவர்களைச் சேர வைத்து அசத்தினார். இதற்காக இந்தப் பள்ளிக்கு சமீபத்தில் ஐ.எஸ்.ஓ தரச்சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிலையில், தமிழக அரசு சார்பில் சமீபத்தில் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் வழங்கப்பட்ட குளித்தலை கல்வி மாவட்ட கனவு ஆசிரியர் விருது பூபதிக்கு வழங்கப்பட்டது. அதற்காக, பாராட்டுச் சான்றிதழும் பத்தாயிரம் ரூபாய் ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது. அந்தப் பணத்தைதான் தான் இந்த அளவுக்கு உயரக் காரணமாக இருந்த குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மனோகரனிடம் குருகாணிக்கையாக வழங்கி, நெகிழ வைத்திருக்கிறார்.

ஆசிரியர் பூபதி

தலைமை ஆசிரியர் மனோகரன் பூபதியைப் பற்றி மாணவர்களிடம் பேசும்போது, 'இந்தப் பள்ளியில் நீங்கள் படித்து முடித்து போனபிறகு, பிற்காலத்தில் என்னவாக ஆகிறீர்கள், இந்தச் சமூகத்துக்கு உங்களால் என்ன பலன் கிடைக்கிறது என்பதில்தான், உங்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியர்களாகிய எங்களது பூரிப்பு இருக்கும். இங்கே படித்த பூபதி இன்னைக்கு தான் வேலைபார்க்கும் சாதாரண குக்கிராம பள்ளியை தமிழக அரசு கவனம் கொள்ளும் வகையில் கொண்டு போயிருக்கிறார். இதுதான் எங்களுக்கு மகிழ்ச்சி. அதோடு, தன்னை வளர்த்த ஆணிவேரான இந்தப் பள்ளியை மறக்காமல் வந்து அந்த பரிசுப்பணத்தைக் கொடுத்திருக்கிறார் என்றால், இதுதான் மனிதர்களுக்கு தேவையான பண்பு. பூபதிபோல் நீங்களும் பிற்காலத்தில் உயரம் தொட வேண்டும்' என்று பேசி பூபதியைக் கண்கலங்க வைத்தார். பூபதியோ, ``வெறும் களிமண்ணாக இருந்த என்னை இந்தளவுக்கு உயர்வதற்கு உரமாகவும், ஆதாரமாகவும் இருந்தது இந்தப் பள்ளிதான். அதை என்னைக்கும் மறக்கமாட்டேன். நான் படித்த பள்ளிக்கு எனக்கு கிடைத்த கனவு ஆசிரியர் பரிசுத்தொகையை கொடுப்பதே பொருத்தமாக இருக்கும். நான் செய்யும் சிறிய குருகாணிக்கை" என்று சொல்லி, மனோகரனையும் கண்கலங்க வைத்தார்.